தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி ஏதும் இல்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக இடம் பெற்றுள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் பாஜகவுக்கு மிகக்குறைவாக 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கிய அதிமுக, பாமகவுக்கு அதைக்காட்டிலும் அதிகமாக ஒதுக்கியது. இதனால், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளதாகப் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று மதுரை வந்தபோது, அந்தப் பேச்சுகள் அனைத்தையும் மறுத்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவுக்கு மிகக்குறைவாக 5 தொகுதிகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு தலைமை வகித்தாலும்,, அதிமுக தலைமையிலான கூட்டணி என்று அழைக்க முடியாது என்று அமித் ஷா நேற்று மதுரை வந்தபோது அதிமுக தலைவர்களிடம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் நேற்று சந்தித்துப் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, "இப்போதிருந்து தமிழகத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிகழ்ச்சியாகவே இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
அப்போது உடன் இருந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இதை தமிழில் அனைத்து தலைவர்களுக்கும் தெரிவித்தார். இது தொடர்பான தலைவர்களுக்கு இடையிலான உரையாடல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் காஞ்சிபுரத்தில் மார்ச் 1-ம் தேதி நடக்கும் பேரணியில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று முதல்வரிடமும், துணை முதல்வரிடமும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். அப்போது பதில் அளித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், அனைத்து கூட்டணிக் கட்சிகள், உள்ளூர் தலைவர்களுடன் பேரணியில் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் 'தி இந்து'விடம்(ஆங்கிலம்) கூறுகையில், " விஷயம் ரொம்ப சாதாரணமானதுதான். தேசிய அளவில் பாஜக தலைமையில் பிரதமர் மோடியின் கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கிறது " எனத் தெரிவித்தார்.
கோவையில் பாஜகவுக்குத் தொகுதி ஒதுக்கப்படும் பட்சத்தில் அங்கு வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது. மேலும், காஞ்சிபுரத்தில் மார்ச் 1-ம் தேதி நடக்கும் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனவும் தெரிகிறது.
, இதுதொடர்பாக அதிமுக செய்தித்தொடர்பாளர் முருகவேலிடம் கேட்டபோது, "பாஜக, அதிமுக இடையே தேர்தல் கூட்டணி கடந்த செவ்வாய்க்கிழமை முடிவானது. தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி உருவாகியுள்ளது என தெளிவாகத் தெரிவிக்கிறோம். இதில் எந்தவிதமான குழப்பத்துக்கும் இடமில்லை" எனத் தெரிவித்தார்.