மற்றவை

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு

செய்திப்பிரிவு

திமுக தலைமையிலான கூட்டணியில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்படும் தொகுதியில் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நடைபெற உள்ள 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனும் இன்று தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசி 1 தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர் பாலு, துணை பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர். 

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஈ.ஆர்.ஈஸ்வரன், "திமுக தலைமையிலான கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இடம் பெறுவது என, இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ளது. ஒரு தொகுதி என தீர்மானிக்கப்பட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறோம். எங்கள் கட்சி போட்டியிடுகின்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலே போட்டியிடுவது என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் கட்சி பணியாற்றும்" என்றார், ஈ.ஆர்.ஈஸ்வரன்.

முன்னதாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT