திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 21 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், நாளை மறுநாள் முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 25-2-2019 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.
போட்டியிட விரும்புகின்ற திமுக தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2019 அன்று முதல் 7-3-2019 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25,000. விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்" என க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், "தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், போட்டியிட விரும்புகின்றவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 1-3-2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 7-3-2019 வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்குள், அண்ணா அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் - ரூ.25,000. விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.1000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்" எனவும் அந்த அறிவிப்பில் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் விண்ணப்பம் செய்தோருக்கு, அவர்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் தலைமைக் கழகத்தால் திருப்பி வழங்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.