கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு தீர்ப்புகளை வழங்கியது. ஒன்று, திருமணத்தை தாண்டிய உறவு குற்றமல்ல என்பதும், மற்றொன்று சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்பதும்.
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் இந்த இரு தீர்ப்புகளும் பலவாறு முரணாக புரிந்துகொள்ளப்பட்டன. முதல் தீர்ப்பில், பெண்களின் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கி விமர்சனங்கள் எழுந்தன. சபரிமலை தீர்ப்பில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்லவே வேண்டாம். இரு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்துவிட்டதால், அதன் புனிதம் கெட்டு விட்டதாக, கோயிலுக்குள் 'புனிதப்படுத்தும் சடங்குகள்' நடைபெற்றன.
இந்த இரு தீர்ப்புகளைப் புரிந்துகொள்வதற்கும், பெண்களுக்கு எதிராக அன்றாடம் நடக்கும் கொடுமைகளுக்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் வழிகோலும் புத்தகம் ஒன்றுக்காக, சென்னை புத்தகக் கண்காட்சியில் தனி அரங்கே அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் புத்தகம் தான், பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?'.
1934 இல் முதல் பதிப்பைக் கண்ட இப்புத்தகம், பல பதிப்புகளைக் கடந்து, கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் தேவையை தன்னகத்தே கொண்டுள்ளது. வர்க்க விடுதலை, பொருளாதார விடுதலை உள்ளிட்டவற்றை உலக நாடுகளும், காலணி ஆதிக்க விடுதலை, சாதிய ஏற்றத்தாழ்வுகளில் இருந்து விடுதலை என இந்தியாவும் விவாதித்துக் கொண்டிருக்கும்போது, பெண் விடுதலையின்றி இவையெல்லாம் சாத்தியம் இல்லை என்பதையும், அதனை அடைவதற்கு முன்பு பெண் ஏன் அடிமையானாள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியது, 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம்.
ஏற்கெனவே, 'லட்சியப் பெரியார், லட்சம் கைகளில்; எனும் முழக்கத்துடன் 10 ரூபாய் விலைக்கு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள் என பலரிடம் கொண்டு சேர்த்திருக்கும் 'நன்செய்' பதிப்பகம் தான் புத்தகக் கண்காட்சியில் (அரங்கு எண் 543) இதற்கென தனி அரங்கை அமைத்துள்ளது. ஏன் இந்தப் புத்தகத்திற்கு தனி அரங்கு என்ற கேள்வியை இப்புத்தகத்தை கோடி பேரின் கைகளில் கொண்டு செல்வதை இலக்காக வைத்திருக்கும் கவிஞர் தம்பியிடம் பேசினோம்.
"வாசிப்புப் பழக்கம் அடுத்த தலைமுறையினரிடம் அதிகம் குறைந்துவிட்டது. முகநூல், வாட்ஸ் அப் போன்றவற்றிலேயே அவர்களின் காலம் கழிகிறது. புத்தகங்களின் விற்பனை குறைந்துவிட்டது. 100 புத்தகங்கள் கேட்பின் (Demand) அடிப்படையில் பதிப்பிடும் சூழல் வந்துவிட்டது. வாசிப்புப் பழக்கத்தை இளைய தலைமுறையினரிடம் அதிகரிக்க இந்தப் புத்தகத்தை 10 ரூபாய்க்கு விற்க முடிவு செய்தோம்.
ஏன் இந்தப் புத்தகம் என்று கேட்டால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த செய்திகள் இல்லாத நாளே இப்போது இல்லை. 90 ஆண்டுகளுக்கு முன்பே பாலின சமத்துவத்தைப் பேசிய புத்தகம் இது. உலகிலேயே முதல்முறையாக பெண் விடுதலை பற்றிப் பேசியது பெரியார் தான். இந்தப் புத்தகத்திற்கு பின்பு 20 ஆண்டுகள் கழித்துதான் 'The Second Sex' என்ற புத்தகம் வருகிறது.
செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி 'லட்சியப் பெரியார், லட்சம் கைகளில்’ என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவர்கள் உட்பட லட்சம் பேரிடம் இந்தப் புத்தகத்தைச் சேர்க்க முடிவு செய்தோம். தோழர்கள் பலர் இந்த முயற்சியில் இணைந்தனர். அதனால், 100 நாட்களில் ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்டு சேர்த்தோம்.
திருமணம், பிறந்த நாள், பிரிவு உபசார விழா, அவ்வளவு ஏன் பூப்புனித விழாவுக்குக் கூட இதனை வாங்கிச் செல்கின்றனர். 100 புத்தகங்களாகத் தான் இதனை விற்றோம். இதனால் ஏற்பட்ட நம்பிக்கையில், 'கொள்கை பெரியார், கோடி கைகளில்' என முழக்கத்தை மாற்றினோம். புத்தகக் கண்காட்சியில் ஒரு புத்தகத்துக்கு என தனி அரங்கு அமைத்தால் கவனம் அதிகரிக்கும் என்பதால் இதனை செய்தோம்" என்கிறார் கவிஞர் தம்பி.
100 புத்தகங்களாக மட்டுமே விற்கப்பட்ட இப்புத்தகம், புத்தகக் கண்காட்சியில் 'படிக்க ஒன்று, பரிசளிக்க ஒன்று' என, இரண்டு புத்தகங்களாக விற்கின்றனர். புத்தகக் கண்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்தப் புத்தகம். ஆரம்பத்தில், கவிஞர் தம்பி மட்டுமே தனியாளாக ஆரம்பித்த இந்த முயற்சி, இப்போது பலரும் இணைந்து இயக்கமாக மாறியுள்ளது என்றே சொல்லலாம். பெரியார், அம்பேத்கர், மார்க்சிய கொள்கைகளில் முனைப்புள்ளவர்கள் இதில் இணைந்துள்ளனர்.
இதனைப் படித்த பள்ளி மாணவர்கள், வீடுகளில் தங்கள் பெற்றோர்களிடம் கேள்வி எழுப்புகின்றனர். "அம்மா மட்டும் ஏன் சமைக்கிறார்? அப்பா ஏன் சமைப்பதில்லை?" என்ற கேள்வி அவர்களிடம் எழுவதாகத் தெரிவிக்கிறார் கவிஞர் தம்பி.
இந்தப் புத்தகத்தை பதின்பருவத்தில் உள்ள மாணவர் ஒருவர் தன் தாய்க்குப் பரிசாக அளித்துள்ளார். கணவனை இழந்த அவரது தாயார், "இந்தப் புத்தகத்தை காலம் கடந்து படித்திருக்கிறேன். முன்பே படித்திருக்க வேண்டும்" என்றார். "அவர் முன்பே படித்திருந்தால், ஒருவேளை அவர் மறுமணம் செய்திருக்கக்கூடும்" என்கிறார் தம்பி.
கணவனை இழந்த பெண்கள், மறுமணம் செய்யக்கூடாது என்று சொல்வது, உடன்கட்டை ஏறுதலைவிட கொடுமையானது என, நூற்றாண்டுக்கு முன்பே சொல்லிய பெரியார், சொல்வதோடு மட்டுமல்லாமல், கணவனை இழந்த தன் சகோதரியின் மகளுக்கு மறுமணம் செய்து காட்டுகிறார். 1920-களில் ஒரு வயதான பெண் குழந்தைகள் கூட 'கணவனை' இழந்ததாக பெரியார் இப்புத்தகத்தில் பதிவிட்டிருப்பதை இப்போது படித்தால் அதிர்ச்சியாக இருக்கும்.
இந்தப் புத்தகத்தை படிக்கும்போது அது எழுதப்பட்ட காலத்தை மனதில் வைக்க வேண்டும். புராணங்களும், பிராமணிய ஆணாதிக்கமும், எப்படி பெண்ணை அடிமைப் படுத்தியிருக்கிறது என்பதை பெரியார் பல சொல்லாடல்களுடன் புரிய வைத்திருப்பார். படிக்கும்போது பல கேள்விகளும் சந்தேகங்களும் தோன்றும். சொல்லியிருப்பதில் பலவும் இன்றும் பொருத்தமாகவும், பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவே இருக்கும்.
இந்தப் புத்தகத்தில் பெரியாரின் சொல்லாடல்கள், எதிர் விமர்சனங்களை வைப்பவர்களையும் பெரியார் தன் நயமான வார்த்தைகளால் எப்படிக் கையாண்டார் என்பதையும் விளக்கிய திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி, "ஆங்கிலத்தில் Feminism என அறிமுகப்படுத்தப்பட்ட கோட்பாட்டின் அத்தனை கருத்துகளையும் அதன் மொத்த சாரத்தையும், தமிழில் ஒரே நூலில் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அது 'பெண் ஏன் அடிமையானாள்' புத்தகத்தின் மூலம் தான் அறிய முடியும்.
பெண் அடிமைக்கு எதிராக ஒருவர் பேச வேண்டும் என்றால் , ஏற்கெனவே அதற்கு ஆதரவாகப் பேசியவர்கள், மிகப் பெரியவர்களாக இருக்கும்போது அதிலும் நாம் மிக மதிப்பவர்களாக இருக்கும்போது, அவர்களையும் நாம் எதிர்த்து கருத்து சொல்ல வேண்டியிருக்கும். குறிப்பாக திருவள்ளுவரைப் பற்றி. திருவள்ளுவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த பெரியார், திருக்குறள் மாநாடு நடத்திய பெரியார், தன் இயக்கத்தின் குடும்பங்களில் குழந்தைகளுக்கு திருக்குறள் பெயர்கள் வைப்பதற்கு காரணமாக இருந்த பெரியார், வள்ளுவர் சொன்ன பெண்ணுக்கு எதிரான கருத்துகளை மிக நயமாக எதிர்த்து வாதங்கள் வைப்பதை பலமுறை படித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அதேபோல, குழந்தை திருமணத்திலிருந்து கணவனை இழந்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் வரை, காதல் முதல் பாலியல் தொழில் வரை எதையுமே தயக்கமில்லாமல் கேள்வி கேட்க பெரியாரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஆதாரம் இந்த நூல்.
பெரியாரின் சொல்லாட்சி எவ்வளவு பெரிய எழுத்தாளருக்கும் எளிதில் அமையாது. தான் சொல்ல வருவதை சந்தேகத்திற்கோ வியாக்கியானம் செய்வதற்கோ இடம் இல்லாத அளவுக்கு ஒன்றுக்கு பல சொற்களை கோர்த்து அந்த கருத்தை தெளிவுபடுத்தியிருப்பார்" என்கிறார், அருள்மொழி.
அதற்கு உதாரணம் ஒன்றையும் அருள்மொழி விளக்குகிறார்.
"ஒருவர் இயல்பாகவே ஒழுக்கமாக இருப்பதை சுயேட்சை கற்பு, உண்மை கற்பு என அதற்குரிய மரியாதையை கொடுத்திருப்பார். அதேநேரத்தில் மற்றவர்களால் கற்பிக்கப்படுவதை கட்டாய கற்பு, நிர்ப்பந்த கற்பு என்ற சொற்களால் சாடியிருப்பார்.
எந்த இடத்திலும் ஒழுக்கம் கூடாதென்றோ, காதல் கூடாதென்றோ பெரியார் சொல்லவில்லை. அடுத்தவர்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தீர்ப்பு எழுதாதீர்கள் என்றுதான் சொல்கிறார்" என்கிறார்.
இந்தப் புத்தகத்தில், கற்பு எனும் வார்த்தை ஏன் பெண்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது எனவும், பாலியல் தொழில் புரியும் பெண்களுக்காக உபயோகப்படுத்த வார்த்தைகள் இருக்கின்றன, ஆனால், ஆண்களுக்கு ஏன் அவ்வாறு இல்லை என்றும் கேள்வி எழுப்புகிறார் பெரியார்.
நாள்தோறும் காதல், திருமணம் பெயரில் பெண்ணுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வரும் காலத்திலும், திருமணத்தைத் தாண்டிய உறவு குறித்த புரிதலின்மையால் கொலைகள் அதிகரிக்கும் நிலையிலும், பெரியார் இவை குறித்து அப்போதே எப்படி நூற்றாண்டுகளைக் கடந்து சிந்தித்திருக்கிறார் என்பது புத்தகத்தை வாசித்தால் புரியும்.
"பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தில் காதல் எனும் பகுதியில் சொல்லப்பட்டிருப்பதைப் பெண்கள் படித்து புரிந்துகொண்டால், இன்றைக்கு நடக்கும் பல அவசரக் காதல் திருமணங்களே நடக்காது. பெற்றோருக்கும் பெண்கள் உரிமையுடன் வளர்க்கப்பட்டால், அவர்கள் காதலை பார்த்து நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை", என்கிறார் அருள்மொழி.
புத்தகத்தில் வார்த்தைகள், கருத்தாழம் காரணமாக குறைந்தது 9 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் இதனை படிக்கலாம் எனவும், பள்ளிகளில் குறைந்தபட்சம் நான் - டீடெய்லாக (Non - detail) இதனை பாடத்திட்டமாக வைக்க வேண்டும் எனவும் குரல் எழுப்புகிறார் அருள்மொழி.
கோடி பேரின் கைகளில் இப்புத்தகத்தை சேர்ப்பது எளிதானது அல்ல, அதுவும் 10 ரூபாய் விலையில். புத்தகப் பதிப்புச் செலவுகளை சமாளிப்பது இன்னும் சவாலாக உள்ளது என்கிறார் கவிஞர் தம்பி. பெரியாரின் புத்தகங்களிலேயே மிகவும் கிளாசிக்கான புத்தகம் 'பெண் ஏன் அடிமையானாள்?’ . இதனை 10 ரூபாய்க்கு அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதில் நன்செய் பதிப்பகம் நிதி சார்ந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. இருந்தாலும், தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
"10 ரூபாய் என்பது ஒருவர் டீ அருந்தும் விலை. இதனை இந்த விலைக்கே தொடர்ந்து கொடுப்பதில் பல சிரமங்கள் உள்ளன. இருந்தாலும், சிரமங்களுடன் எதிர் தரப்பு ஆட்களிடம் கூட இந்தப் புத்தகத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறோம். பெண் விடுதலை குறித்த விழிப்புணர்வை பெண்ணுக்குள் புகுத்தவும், பெண் குறித்த விழிப்புணர்வை ஆண்களுக்கு ஏற்படுத்தவும் இந்தப் புத்தகம் அவசியம். நாங்கள் விடுதலை அடைந்துவிட்டோம் என ஒரு பெண் கூறினால், அவர் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார் என்று தான் அர்த்தம்.
வாங்குபவர்களில் 10% பேர் தான் படிப்பர் என எனக்கு தெரியும். 10 லட்சம் பேர் படித்து ஒரு லட்சம் பேர் பின்பற்றினால் கூட மூட நம்பிக்கைகளுக்கும் பிற்போக்குத் தனத்துக்கும் உள்ள அடர்த்தி குறையும்" என்கிறார், கவிஞர் தம்பி நம்பிக்கையுடன்.
'நன்செய்' பதிப்பகத்தின் அடுத்த முயற்சியாக பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தை இளையோர் புரிந்துகொள்ளும் விதத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 3-5 லட்சம் புத்தகங்கள் விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தைத் தவிர்த்து, பகத் சிங்கின் 'நான் ஏன் நாத்திகனானேன்?’, இட ஒதுக்கீடு ஏன், பாலியல் கல்வி, சாதியை அழித்தொழித்தல் என தன் ஆயுளில் 20 தலைப்புகளின் கீழான முக்கியப் புத்தகங்களை குறைந்த விலையில் கோடி பேரின் கைகளில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது நன்செய் பதிப்பகம்.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in