இதர மாநிலங்கள்

திருமணத்தை மறைத்த விவகாரம்: மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங். புகார்

செய்திப்பிரிவு

முந்தைய தேர்தல்களில் வேட்புமனு தாக்கலின்போது வழங்கிய பிரமாணப் பத்திரங்களில் தனக்கு திருமணம் ஆன தகவலை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மறைத்தது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை மனு கொடுத்துள்ளது.

வதோதரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட மோடி கடந்த 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தபோது தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த ஆவணங்களில் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் மனைவி பெயர் யசோதா பென் என்றும் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

தனக்கு திருமணம் நடந்த தகவலை தெரிவிக்காமல் மறைத்து கடந்த 4 தேர்தலில் தவறான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார் மோடி. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணையத்திடம் கபில் சிபல் தலைமையில் காங்கிரஸ் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனர்.

மனு கொடுத்துவிட்டு திரும்பியதும் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

2002க்கும் 2012-க்கும் இடைப்பட்ட காலத்தில் குஜராத் சட்டப் பேரவைக்கான தேர்தல்களில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் தனக்கு திருமணமான தகவலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல் மோடி மறைத்துள்ளார். இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம் இந்த மனு தொடர்பாக ஆய்வு செய்வதாக தேர்தல் ஆணையம் உறுதி கொடுத்துள்ளது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

அப்போது இளம் பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் விசாரணை நடத்த நீதிபதியை நியமிக்காமல் அரசு தாமதம் செய்வது ஏன் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கபில் சிபல், இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் விசாரணை நடத்தப் போகும் நீதிபதி யார் என்பது தெரியும். அந்த பெயரை எப்போது அறிவிப்பது என்பதை அரசு முடிவு செய்யும். விசாரணை கமிஷன் அமைப்பது பற்றி ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. எனவே அதில் தேர்தல் நடத்தை விதி மீறல் எதுவும் கிடையாது. எல்லா விவகாரங்களிலும் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம் என்றார் கபில் சிபல்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தரவின்படி 2009ல் இளம்பெண் ஒருவரை வேவு பார்க்க அமித் ஷா ஏற்பாடு செய்தார் என புகார் வெளியானது. இந்த புகார் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.

இந்த கமிஷனுக்கு தலைமை வகிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை பரிந்துரைக்கும்படி சட்ட அமைச்சருக்கு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே வேண்டுகோள் விடுத்திருந்தார்.

SCROLL FOR NEXT