ரிப்போர்ட்டர் பக்கம்

‘கஜா’ புயலுக்குப் பின் எப்படியிருக்கிறது டெல்டா?

சி.காவேரி மாணிக்கம்

கடந்த 15-ம் தேதி நள்ளிரவு வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த ‘கஜா’ புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 7 தமிழக மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தப் புயலால் 63 பேர் மரணமடைந்ததாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஓட்டு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏராளமான தன்னார்வலர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இன்னும் பல கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.

அடிப்படை பிரச்சினை என்ன?

மின்சாரம் தான் தற்போது இங்கு பூதாகரமாக உருவெடுத்துள்ள மிகப்பெரிய பிரச்சினை. ஆதி மனிதனின் தீப்பந்தங்களின் உதவியுடன் வாழ்ந்தது போல், மெழுகுவர்த்தியின் உதவியுடன் இரவைக் கழிக்கின்றனர் இந்த மக்கள். அதுவும் போதிய அளவுக்குக் கிடைப்பதில்லை என்பதால், டெல்டா மக்களின் வாழ்க்கையைப் போல வீடுகளும் இருண்டு கிடக்கின்றன.

அதற்கடுத்து தண்ணீர் பிரச்சினை. ஜெனரேட்டர்களின் உதவியுடன் அவ்வப்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீரை நிரப்பி, ஆளுக்கு இரண்டு குடங்கள் என்ற முறைப்படி விநியோகித்து வருகின்றனர். ஆனால், குளிப்பதற்கும், இயற்கை உபாதைகளுக்கும் தேவையான தண்ணீர் கிடைக்காததால் மிகப்பெரிய அவதிக்கு ஆட்பட்டுள்ளனர்.

முக்கிய நகர்ப்பகுதிகளிலேயே இன்னும் முழுமையான மின் வசதி கிடைக்கவில்லை. முக்கியச் சாலைகளில் மட்டும் கீழே விழுந்த மின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பங்களை நட்டுள்ளனர். அவற்றில் மின் கம்பிகளை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, முக்கிய நகரங்களில் மட்டும் இன்னும் ஒரு வாரத்தில் மின்சாரம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

மின் வசதி தாமதமாவது ஏன்?

மின்வாரிய ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் இரவு, பகலாக வேலை பார்த்தாலும், பாதிப்பின் அளவு மிகப்பெரியது என்பதால், நகரங்களிலேயே இன்னும் பணிகள் முடியவில்லை. புயலால் ஓரளவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, அங்கு மின்சாரம் வழங்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன.

இதுதவிர, கேரளாவில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் இங்கு வந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருந்தும் மின்சாரம் வழங்கத் தாமதம் ஆகிறது என்றால், புயலின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

போதிய அளவு மின் கம்பங்கள் இல்லாததும், மின்சார வசதி கிடைக்கத் தாமதமாகிறது. மின் கம்பம் தயாராவதற்கு 90 நாட்களாகும் என்று கூறப்படுகிறது. எனவே, வெளிமாநிலங்களில் இருந்து மின் கம்பங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. மின் கம்பத்தின் எடையும் நீளமும் அதிகம் என்பதால், சாலை வழியாக அவற்றை மொத்தமாகக் கொண்டு வருவதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன.

டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை, வயல்களுக்குள் நடப்பட்டுள்ள மின் கம்பங்களின் எண்ணிக்கையும் அதிகம். வீடுகளுக்குக் கூட வயல்களில் நடப்பட்டுள்ள மின் கம்பங்கள் வழியாகத்தான் மின்சாரம் செல்கிறது. எனவே, அவற்றைச் சீரமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

அடையாளங்களை இழந்து நிற்கும் ஊர்கள்

டெல்டாவின் வாழ்வாதாரமாக விளங்கிய தென்னை, வாழை மரங்கள் லட்சக்கணக்கான ஏக்கர்கள் அளவு சேதமடைந்துள்ளன. வேரோடு கீழே விழுந்தும், குருத்து ஒடிந்தும் பெரும்பாலான மரங்கள் வீணாகிவிட்டன. இந்த மரங்களை நட்டு வளர்க்கப் பல வருடங்கள் ஆகும் என்ற சோகம் ஒருபுறம் இருக்க, சேதமான மரங்களை அறுத்து எடுக்க ஆகும் செலவும் டெல்டா மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. ஒரு மரத்தை அறுத்து எடுப்பதற்கு, ஏரியாவைப் பொறுத்து 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை கூலியாகக் கேட்கப்படுகிறது.

வீட்டில் உள்ளவர்களே மரத்தை அறுத்தெடுக்கலாம் என்றால், 5000 ரூபாயாக இருந்த மரம் அறுக்கும் மெஷின் விலை, தற்போது 8000 ரூபாயாக உயர்ந்துவிட்டது. அதையும் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும், மெஷின்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. அப்படி வாங்கப்படும் மெஷின்களும், தொடர்ச்சியாக மரம் அறுத்துக்கொண்டே இருப்பதால் 4 நாட்களுக்கு மேல் வேலை செய்வதில்லை என்பது சோகத்திலும் சோகம்.

டெல்டாவைப் பொறுத்தவரை பல ஊர்கள் மற்றும் இடங்களுக்கு அடையாளமாக மரங்கள் இருந்தன. புளிய மரம், ஆலமரம் என ஒவ்வொரு இடமும் மரங்களின் பெயரால் அழைக்கப்பட்டு வந்தன. அந்த மரங்களும் புயலின் தாக்கத்தால் வேரோடு விழுந்ததால், அடையாளங்களை இழந்து நிற்கின்றன ஊர்கள்.

நிவாரணப் பொருட்களுக்காக சாலைகளில் காத்திருக்கும் மக்கள்

தினசரி அடிப்படைத் தேவைக்கான நிவாரணப் பொருட்கள் அன்றைக்கு ஓரளவு கிடைத்தாலும், மறுநாள் வாழ்க்கையை நகர்த்துவது எப்படி? என்ற மிகப்பெரிய பயம் டெல்டா மக்கள் மனதில் இருக்கிறது. காரணம், தென்னையையும் வாழையையும் மட்டுமே நம்பி வருடக் கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்கள் தான் இங்கு அதிகம்.

கல்விக் கட்டணம், கல்யாணம், வீடு, கார் என எல்லா தேவைகளையும் தீர்த்து வைக்கும் காமதேனுவாக விளங்கியவை தென்னை மரங்கள். அந்த மரங்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டதால், அடுத்த வேளை சோத்துக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர் விவசாயிகள்.

தஞ்சை மாவட்டம் சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தரராஜ், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலைச் சேர்ந்த விவசாயி திருச்செல்வம் இருவரும் புயலின் பாதிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்ள, மற்றவர்கள் நடைபிணமாக வாழும் சோகம், டெல்டாவுக்கு நேர்ந்துள்ள மிகப்பெரிய அவலம்.

நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் பெரும்பாலும் மெயின் ரோட்டிலேயே வைத்துக் கொடுப்பதால், ஊருக்குள் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, காலை முதல் இரவு வரை நிவாரணப் பொருட்களை எதிர்நோக்கி மெயின் ரோட்டிலேயே அமர்ந்திருக்கும் கொடுமை, காலத்தால் அழிக்க முடியாதது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எனப் பாகுபாடின்றி அனைவரும் கட்டைப்பையுடன் காத்திருக்கின்றனர்.

கொட்டும் பனியில், தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, எழுந்து நிற்கக்கூடத் திராணியின்றி சாலையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டே போகிற, வருகிற வாகனங்களைப் பார்த்துக் கையசைத்துக்கொண்டே இருக்கின்றனர். அந்த வாகனத்தில் ஒன்றாவது அங்குநின்று தங்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்காதா என்ற ஏக்கம் அந்தக் கையசைப்பின் வழியே கசிகிறது.

SCROLL FOR NEXT