தமிழக அரசியல் கடந்த சில மாதங்களாகவே தகுதி நீக்க வழக்கைச் சுற்றித்தான் இயங்கிவந்தது என்று கூட சொல்லலாம். அப்படிப்பட்ட வழக்கில் இன்று வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு தெளிவை ஏற்படுத்தியிருக்கிறதா, அல்லது குழப்பத்தை அதிகரித்திருக்கிறதா என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடையே எழுந்துள்ளது.
டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன், 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்தார். சபாநாயகர் முடிவில் தவறு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பால் அடுத்தடுத்து தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும், அதிமுக-தினகரன் தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை, பாஜகவின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்மணியிடம் பேசினோம்.
தீர்ப்பு குறித்து தனிப்பட்ட முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எடியூரப்பா வழக்குக்கும் இதற்கும் உள்ள சம்பந்தம் குறித்துச் சொல்லுங்கள்...
சபாநாயகரின் முடிவில் நீதித்துறை தலையிட முடியாது என்று நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார். நீதிபதி சத்தியநாராயணன் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு முரணானது. மிக மிக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பும் கூட.
கர்நாடகாவில் 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடியூரப்பா மீது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, 16 எம்எல்ஏக்களின் பதவியை சாபாநாயகர் பறித்தார். அவர்கள் 16 பேரும் எடியூரப்பாவுக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்கள். தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கிய நிலையில்தான் சபாநாயகரால் இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தகுதி நீக்கம் சரியானது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், மேல்முறையீட்டில் சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது தவறு என அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது நீதித்துறையின் தவறு என உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நிர்வாகம் ரீதியிலான நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொண்டிருந்தால் அதில் நீதித்துறை தலையிட முடியாது, ஆனால், தகுதி நீக்கம் செய்து பதவியைப் பறிப்பது என்பது சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களின் சிவில் உரிமைகளைப் பாதிப்பதாக அமைந்துவிடும் என்பதால் அதில் நீதித்துறை தலையிடலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது. அதனால், சத்திய நாராயணன் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு, முன்னதாக நீதிபதி எம்.சுந்தர் அளித்துள்ள தீர்ப்புக்கு முரணாக உள்ளது.
இந்தத் தீர்ப்பால் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
இந்தத் தீர்ப்பு டிடிவி தினகரனின் வளர்ச்சியைப் பெருமளவில் தடுக்கும். மூன்று நீதிபதிகளில் இரண்டு நீதிபதிகள் சபாநாயகரின் முடிவு செல்லும் என சொல்கிறார்கள், அப்போது எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று பொதுமக்கள் நினைக்கக்கூடும். இந்தத் தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை, இதுவொரு அனுபவம் என்கிறார் டிடிவி தினகரன். அப்படியென்றால் அவருக்கு இதுபோன்று 100 அனுபவங்கள் வரும். இது தினகரனுக்குப் பின்னடைவு தான்.
இபிஎஸ்-ஓபிஎஸ் அணியைப் பொறுத்தவரை இந்தத் தீர்ப்பு நிச்சயமாக அவர்களுக்கு தோல்வியில்லை. இதனால் அதிமுகவுக்கு எந்த முன்னேற்றமும் இல்லையென்றாலும், பின்னடைவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய தீர்ப்பால் அவர்கள் எதையும் இழக்கவில்லை.
தமிழக அரசியலில் இந்தத் தீர்ப்பு குழப்பத்தை நீக்கி தெளிவை ஏற்படுத்தியிருக்கிறது என நினைக்கிறீர்களா?
சாதாரண பொதுமக்களைப் பொறுத்தவரை இந்தத் தீர்ப்பு ஒருவித தெளிவை ஏற்படுத்தியிருப்பதாக நினைக்கலாம். ஆனால், சட்ட நிபுணத்துவத்துடன் யோசித்தால் இந்தத் தீர்ப்பில் முரண் நீடிப்பதாக தான் தெரிகிறது.
டிடிவி தினகரனுக்கு அடுத்து இருக்கக்கூடிய சட்ட ரீதியிலான வாய்ப்புகள் என்ன?
ஏற்கெனவே அவர் தரப்பில் உள்ள தங்க தமிழ்ச்செல்வன் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்ல மாட்டேன் எனத் தொடர்ந்து சொல்லி வருகிறார். தங்கள் தரப்பு எம்எல்ஏக்களிடம் கலந்தாலோசித்துவிட்டு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா அல்லது தேர்தலை எதிர்கொள்ளலாமா என முடிவெடுப்போம் என்று டிடிவி தினகரன் சொல்லியிருக்கிறார். அது அவருடைய அரசியல் நிலைப்பாடு. ஒரு முடிவெடுப்பதில் அவருக்கென சில வரைமுறைகள் உள்ளன. அவர் சொல்வதன்படி பார்த்தால், மேல்முறையீடு செல்ல வேண்டும் என அவர் நினைக்கிறார் எனக் கருதுகிறேன்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏதேனும் உள்ளதா?
அவர்கள் மீண்டும் போட்டியிடுவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை. தற்போது அவர்களால் எம்எல்ஏக்களாக நீடிக்க முடியாது என்பது தான் தகுதி நீக்கம்.
இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
பாஜக அதிமுகவையும் தினகரன் தரப்பையும் ஒன்றிணைக்கும் என நான் கணிக்கின்றேன். அதன்பிறகு, தனது தலைமையில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும், வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலையும் அதிமுகவுடன் இணைந்து பாஜக சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதனை நோக்கித்தான் பாஜகவின் நகர்வு இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.
அதிமுகவிலும் சில அமைச்சர்கள் வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சோதனை ஆகியவற்றை எதிர்கொண்டனர். அதனால், அவர்கள் எந்தச் சிக்கலுக்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல் பாதுகாப்பாக பாஜகவுடன் இணைவதையே விரும்புவார்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சி நல்முறையில் தொடர பாஜகவுடன் இணைவது உதவிபுரியும். இரு அணிகளும் இணைந்தால் தான் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும்.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அதிமுக இந்தக் கூட்டணி குறித்து தெளிவுபடுத்தும். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் நிச்சயமாக தேசியக் கட்சியின் பாதுகாப்பு அரண் தேவை. காங்கிரஸ் நிச்சயமாக அதிமுகவுடன் இணையாது. அப்படி பார்க்கும்போது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்புண்டு.
நீங்கள் சொல்வதுபோல் இரு அணிகளும் இணையக்கூடிய சாத்தியம் இல்லாவிட்டால், தமிழக அரசியலின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
இரு அணிகளும் இணையாமல் அதிமுக இரட்டை இலையில் நின்றால் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது மிகக் கடினம். டிடிவி தினகரன் தரப்பு ஜெயிப்பதும் கடினம் தான். அவர்கள் இந்த வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கின்றனர். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப் பிரச்சினையை உயிர்ப்புடன் வைத்திருக்க டிடிவி தினகரன் தரப்பு முயற்சிக்கிறது. அதனால்தான், கட்சி ஆரம்பித்தனர். அந்தக் கட்சியால் அவர்களுக்கு எந்தவொரு பலனும் இல்லை. டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனால், டிடிவி இந்த சமயத்தில் ரிஸ்க் எடுக்க மாட்டார். அவர் பாஜகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்குத்தான் சாத்தியக்கூறுகள் அதிகம். அதிமுக இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன.
நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரலாம் என்ற வாதத்திற்கு இந்தத் தீர்ப்பு வலு சேர்த்துள்ளதாக நினைக்கிறீர்களா?
இந்த ஆட்சி கலைந்தால் இரண்டு தேர்தலும் ஒன்றாக வரலாம். இல்லையென்றால், நான் ஏற்கெனவே கூறியதுபடி அதிமுக பாஜகவுடன் இணைந்தால் ஒன்றாகத் தேர்தல் வராது.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in