ரிப்போர்ட்டர் பக்கம்

சேவல் சண்டை தெரியும்; மயில் சண்டை தெரியுமா? காணக்கிடைக்காத அபூர்வக் காட்சி

கா.சு.வேலாயுதன்

நம்மூரில் சேவல் சண்டை பார்க்க முடியும். இரண்டு சேவல்களை நேருக்கு நேர் விட்டு விட்டால் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கும். ஒன்றை மற்றொன்று துரத்தியடிக்காமலோ சாகடிக்காமலோ விடவே விடாது. இதேபோல்தான் மற்ற பறவைகளும். அதிலும் இரண்டு ஆண் பறவைகள் சந்தித்துக் கொண்டால் ஒன்றுக்கொன்று நான் பெரியவனா, நீ பெரியவனா என்று அடித்துக் கொள்வதில் கில்லாடித் தனம் காட்டும்.

அப்படிக் காட்டுவதில் மயில்களுக்கான சண்டை அவ்வளவு சுலபமாக நிகழாது. நிகழ்ந்தாலும் சேவல் சண்டைபோல் வெகுநேரம் எல்லாம் நீடிக்காது. மணிக்கணக்கில் ஒன்றையொன்று சுத்தி சுத்தி வரும். ஒரு கட்டத்தில் பறந்து, பறந்து தாக்கிக் கொள்ளும். அதுவும் அந்தரத்தில் ஓரிரு விநாடிகள்தான். பிறகு மறுபடி தரைக்கு வந்து ஒன்றையொன்று துரத்த ஆரம்பிக்கும். இப்படியே இதன் சண்டை நான்கு மணி நேரம் கூட நீடிக்கும். தோற்ற மயில் பறவை மற்றதனிடமிருந்து ஓடிப் போகும். ஆண் மயில்கள் இரண்டு ஒன்றுக் கொன்று வானத்தில் பறந்து தாக்கிக் கொள்ளும்.

இப்படியொரு அபூர்வ சண்டைக் காட்சியைப் படமாக்கியுள்ளார் கோவை பறவைக் காதலர் சொ. சுப்பிரமணியன். இவர் தினசரி கேமராவை எடுத்துக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் பறவைகளைப் படம் பிடிக்க அலைபவர். 30 வருடங்களுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான பறவை இனங்களை படம் பிடித்து வனத்துறை, சூழலியல் கண்காட்சிகளையும் நடத்தியிருக்கிறார். தற்போது அவர் மயில் சண்டை படம் பிடித்த அனுபவத்தை விளக்கினார்.

''இந்த மயில் சண்டையை நான் வசிக்கும் வடவள்ளி பகுதியில்தான் படம் எடுத்தேன். எங்க பகுதியில் மட்டுமல்ல, கோவையின் புறநகர் பகுதிகளில் இப்போதெல்லாம் மயில்கள் அதிகமாகிவிட்டன. எங்க பகுதியில் 10 வருடங்களுக்கு முன் 15 மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டார்கள். அதில் வனத்துறை நடவடிக்கை எடுத்ததோடு, பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் செய்ய மயில்களைக் கொல்லும் அந்த வேலை குறைந்தது. அதனால் ஓரளவுக்கு எல்லா பகுதியிலும் மயில்கள் சுற்றித் திரிகிறது. இப்போது என் கேமராவில் அகப்பட்ட ஆண் மயில்கள் இரண்டுமே என் வீட்டுப் பகுதியில் காலை 6 மணியிலிருந்தே ஒன்றுக்கொன்று துரத்திக் கொண்டு திரிந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வானத்திற்கும் பூமிக்குமாய் எகிறி எகிறிப் பறந்து ஒன்றையொன்று தாக்கிக் கொண்டது.

அதனால் நான் கேமராவை எடுத்துக் கொண்டு காலை 9 மணியிலிருந்து காத்திருந்தேன். மணிக்கணக்கில் அது அந்தரத்திற்கு தாவாமல் ஓடிப் பிடித்து சண்டையிட்டுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் உள்ள பள்ளத்திற்கும் ஓடிப் போனது. அப்போதுதான் அவை இரண்டும் எதிர்பார்த்தபடியே அந்தரத்தில் பறந்து தாக்கிக் கொண்டது. எண்ணி மூன்று நான்கு நொடிதான் இருக்கும். நான்கைந்து போட்டோக்கள் எடுத்து விட்டேன். அப்புறம் அது அப்படி அந்தரத்தில் பறந்து தாக்கிக் கொள்ளவேயில்லை. காட்டுக்குள் ஓடி விட்டது. இதேபோல் 10 வருஷத்துக்கு முந்தி ஆனைகட்டி காட்டுக்குள் ஒரு முறை மயில் சண்டை படம் எடுத்திருக்கேன். அப்பவும் இப்படித்தான் நாலு மணிநேரத்திற்கு மேல் அவை போக்குக் காட்டியது. கடைசியில் அவை அந்தரத்தில் எகிறி அடிக்கும்போது நான் எடுத்த படம் அவ்வளவு துல்லியமாக வரவில்லை. ஆனால் இந்த படம் பாருங்கள் மேலே உள்ள மயில் வாயை நன்றாகவே திறந்து விட்டது!'' என சிலாகித்து உருகினார்.

இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை குற்றாலம் வனப்பகுதியில் ‘லீப் பேர்டு’ எனப்படும் இலைப்பறவைகள் இரண்டும் சண்டை போடுவதை படம் பிடித்திருக்கிறார். அவை இரண்டுமே ஒரே வகை என்றாலும் இரண்டு இனத்தைச் சேர்ந்தவை (ஒன்று ஆரஞ்சு மூக்கு, இன்னொன்று சாதாரண மூக்கு) என்பதால் சண்டை போட்டுக் கொண்டனவாம். மேலே இரண்டு போர் விமானங்கள் வந்து தாக்கிக் கொள்வது போல் தாக்கிக் கொண்டனவாம் (பார்க்க படம்).

''அதுவும் இப்படித்தான். அதனுடைய சண்டையை படம் பிடிக்க மட்டும் 4 மணிநேரம் ஆனது. இது போல பறவைகள் சண்டைக் காட்சி நம் கண்ணுக்கு கிடைப்பது என்பதும், புகைப்பிடிப்பது என்பதும் அபூர்வத்திலும் அபூர்வம். அதன் அருமை என்னைப் போன்ற பறவைகளை நேசிப்பவர்களுக்குத்தான் தெரியும்!'' என்கிறார் சுப்பிரமணியன்.

SCROLL FOR NEXT