ரிப்போர்ட்டர் பக்கம்

99.3% செல்லாத நோட்டுகள் திரும்பி வந்தன; உயிரிழப்புகளுக்கு என்ன பதில்?: கறுப்புப் பணம் எங்கே? பணமதிப்பு நீக்க நடவடிக்கை பிரதமர் மோடிக்கு நிகழ்ந்த சறுக்கலா?

க.போத்திராஜ்

“இன்று நள்ளிரவு முதல் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 500, 1000 நோட்டுகள் செல்லாது. தீவிரவாதம், கள்ளநோட்டு, கறுப்புப் பணத்தை ஒழிக்க இதுதான் சரியான தீர்வு. எனக்காக 50 நாட்கள் பொறுத்திருங்கள். என் நோக்கத்தில் தவறு இருந்தால், பொது இடத்தில் என்னைத் தூக்கிலிடுங்கள்”

இந்த வார்த்தைகள் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நியாயப்படுத்தி பிரதமர் மோடி மக்களிடம் உருக்கமாகப் பேசியவை.

ஆனால், இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு பிரதமர் மோடியின் வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் தவிடுபொடியாக உடைத்திருக்கிறது.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடியின் செல்லாது என்ற ஒற்றை வார்த்தை அறிவிப்பால் நாட்டில் 85 சதவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.15.41 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் வெறும் காகிதங்களாக மாறிப்போகின.

வங்கியில், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் புதிய ரூ.2000 நோட்டுகளைப் பெறவும் மக்கள் நாடு முழுவதும் அலை மோதினார்கள்.

நவம்பர் 8-ம் தேதி அறிவிப்புக்குப் பின் மக்களுக்கு ஒவ்வொரு நாள் விடியலும் நரகமாகவே இருந்தது.

வங்கியில் பணம் இருந்தும் அதை எடுக்க முடியால், வீட்டில் அவசரத் தேவைக்காக வைத்திருந்த ரூ.500, ரூ.1000 பணத்தை வங்கியில் மாற்ற முடியாமல் நடுத்தர குடும்பத்து மக்கள், ஏழைகள், கூலி வேலைக்குச் செல்வோர் பட்ட துயரம் சொல்லி மாளாது.

பணத்தை மாற்றவும், வங்கியில் பணம் எடுக்கவும் மக்கள் கொளுத்தும் வெயிலில் வங்கியின் முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். இப்படி கால் கடுக்க பணம் எடுக்க வெயிலில் நின்று நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் பலியானதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணமும், மகள், மகனுக்கு கல்லூரிக்கட்டணமும் செலுத்த முடியாமல் சிரமப்பட, முதியோர்கள் உதவித்தொகை, ஓய்வூதியம் பெற முடியாமல் அவதிப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக பணம் கிடைக்காமலும், மருந்து வாங்கவும், ஹோட்டலில் சாப்பிட்டு பணம் கொடுக்க முடியாமலும், அவசரப் பயணத்தில் டிக்கெட் எடுக்க முடியாமலும் மக்கள் பட்ட வேதனை அளவில்லாதது.

அதுமட்டுமல்லாமல் பிணத்தை எரியூட்டுவதற்கும், ஈமச்சடங்கு செய்வதற்கும்கூட பணம் இல்லாமல் பல நாட்கள் உடல்கள் வைக்கப்பட்ட கொடுமை வட மாநிலங்களில் நிகழ்ந்தன.

சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் அடியோடு முடங்கின. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வேலை இழந்ததாக  காங்கிரஸ் கட்சிக் குற்றம் சாட்டியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2016-17ம் ஆண்டின் 3-வது காலாண்டில் 2 சதவீதம் சரிந்தது. மதிப்பின் அடிப்படையில் ரூ.2.50 லட்சம் கோடி அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தில் இழப்பு ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் சாடின.

ஆனால் கடைசிவரை மத்திய அரசு தங்களின் வாதப்பிடியில் இருந்து தளரவில்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நியாயப்படுத்தி மக்களிடம் பிரதமர் மோடி பேசியதற்கு முக்கியக் காரணமே நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டுகள், தீவிரவாதம் ஒழியும் என்பதுதான்.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்கூட, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், ஏறக்குறைய 5 லட்சம் கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

நாட்டின் நலனுக்காக மக்கள் அனைத்து சிரமங்களையும் பொறுத்துக் கொண்டனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஊதிய மகுடி சத்தத்துக்கு ஏற்றார் போல் வேறுவழியின்றி மக்களும் ஆடினார்கள்.

வங்கியில் பணம் எடுக்கச் சென்றால் மக்களின் கையில் ‘மை’ வைக்கப்பட்டது, திருமணத்துக்குப் பணம் செலவு செய்யக்கூட கணக்குக் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது, தாங்கள் உழைத்துச் சம்பாதித்து ஈட்டிய பணத்தை தாங்களே செலவு செய்யமுடியாமல் மக்களுக்குக் கடிவாளம் போட்டது மத்திய அரசு .

இத்தனை கொடுமைகளையும் மக்கள் தாங்கிக்கொண்டது எதற்காக கறுப்புப் பணம் ஒழியும், கள்ளநோட்டு கட்டுப்படும் என்று பிரதமர் மோடி கூறிய வார்த்தைகளை நம்பித்தானே. அதற்காகத்தானே பொறுமையாக அனைத்து வலிகளையும் தாங்கினார்கள்.

ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் 2-ம் ஆண்டு நிறைவடைதற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கை ஒட்டுமொத்த மக்களின் பொறுமையையும், மக்கள் அனுபவித்த வேதனைகளையும் கேலிக்கூத்தாக மாற்றி இருக்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ற பெயரில் மக்களின் உயிருடன், உணர்வுகளுடன், வலியுடன் மத்திய அரசு விளையாடி இருப்பதைத்தான் காட்டுகிறது.

பணமதிப்பு நீக்கத்தின் போது நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 15.41 லட்சம் கோடியில் 99.3 சதவீதம் அதாவது ரூ.15.31 லட்சம் கோடி பணம் வங்கி முறைக்குத் திரும்ப வந்துவிட்டன.

வெறும் ரூ.10 ஆயிரத்து 700 கோடி மட்டுமே வங்கி முறைக்குத் திரும்பி வரவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அப்படியென்றால், பிரதமர் மோடி ரூ.5 லட்சம் கோடி கறுப்புப் பணம், கள்ளநோட்டுகள் ஒழிக்கப்படும் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தாரே அது என்னாயிற்று?. கறுப்புப் பணம், கள்ளநோட்டுகள் ஒழிக்கப்பட்டுவிட்டதா என்பதுதான் இப்போது மக்களின் கேள்வியாக இருக்கிறது.

பணமதிப்பு நீக்கத்தின் போது, புழக்கத்தில் இருந்த பணமும், வங்கிமுறைக்குத் திரும்ப வந்த பணத்தின் மதிப்பும் ஏறக்குறைய 99.3 சதவீதம் சரியாக இருக்கிறது.

அப்படியிருக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்த நோக்கம் என்ன?. பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது மக்கள் அனுபவித்த வலிகளுக்கும், வேதனைகளுக்கும் என்ன பதில் கூறப்போகிறது மத்திய அரசு.

ரூ.5 லட்சம் கோடி கறுப்புப் பணம் வரை வங்கி முறைக்குள் வருவது தடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து வந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை மோடிக்கும், அவரின் அரசுக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் மக்களவைத் தேர்தலுக்கு 10 மாதங்கள் கூட இல்லாத நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை ஆளும் மோடி அரசுக்கு அரசியல் ரீதியாக சரிவை ஏற்படுத்தினாலும் வியப்பில்லை. தொடக்கத்தில் இருந்தே பணமதிப்பு நீக்கத்தை கடுமையாக எதிர்த்துவரும் எதிர்க்கட்சிகளின் கூற்று இப்போது நியாயமாகி இருக்கிறது. அவர்களின் விமர்சனங்களை இனிமேல் கடுமையாக எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு பாஜக அரசு தள்ளப்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது வங்கியில் பணம் வரிசையில் காத்திருந்த மக்களில் பலர் முதுமையினாலும் வெயிலில் நிற்க முடியாமலும்  உயிரை விட்டனர். இது நாடாளுமன்றத்தில் கூட எழுப்பப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகூட செலுத்தவில்லை என்பது விவாதப்பொருளானது.

இப்போது அவர்களின் உயிருக்கு என்ன பதில் கூறப்போகிறது மத்திய அரசு. இன்னும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நியாயமானதுதான் என்று மத்திய அரசு மக்களிடம் வாதிடப் போகிறதா?

பணமதிப்பு நீக்க நடவடிக்கை எளிதான செயல் அல்ல, செல்லாத ரூபாய் நோட்டுகளைக் கணக்கிடுவதும், உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள மேற்கொண்ட செயல்களும் கடினமானதாக இருந்தது. இருப்பினும் வெற்றிகரமாக முடித்துவிட்டோம் என்று ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வங்கிக்கு வந்த செல்லாத ரூபாய்களைக் கணக்கிடும் பணி முடிக்காதது குறித்து பல்வேறு விமர்சனங்களை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதிர்கொண்டார்.

உள்நாட்டுப் பத்திரிகைகள் முதல், வெளிநாட்டு ஊடகங்கள் வரை ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தன. ஆனால், ஒட்டுமொத்த விமர்சனமும் இப்போது நியாயமாகிவிட்டதை உணர்த்திவிட்டது.

இனிமேலும் பிரதமர் மோடி பணமதிப்பு நடவடிக்கை நியாயமானது என்று கூறப்போகிறாரா?, விலைமதிக்க முடியாத மனித உயிர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?,

இழந்த பொருளாதார வளர்ச்சி, சிதைக்கப்பட்ட சிறு, குறுந்தொழில்கள், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழப்பு, மக்களின் வலி, வேதனைகள் அனைத்தின் மீது சவாரி செய்து பணமதிப்பு நீக்க நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது. அதன் பலன் என்ன என்பதுதான் இப்போது மக்கள் வைக்கும் கேள்வி. மத்திய அரசு என்ன சொல்லப்போகிறது?

SCROLL FOR NEXT