ஆடிப்பெருக்கு பெருநாளான இன்று காவரி ஆற்றை வழிபட்டு தமிழர்கள் தங்கள் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். காவிரியின் பிறந்த வீடு கர்நாடகா என்றாலும், வளர்ந்து வளம் சேர்க்கும் புகுந்த வீடு தமிழகம்.
கர்நாடகாவின் தலைக்காவிரி தொடங்கி, கடலில் கலக்கும் பூம்புகார் வரை காவிரி பாய்ந்தோடும் பகுதிகள் எல்லாம் இன்று ஆடிப்பெருக்கு பெரு விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
காவிரியின் பயணம்
கர்நாடக மாநிலம் குடகு மலையில் பிறந்து தலைக்காவிரியாக உற்பத்தியாகி, தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியே பயணித்து, பூம்புகாரில் கடலில் கலக்கிறது காவிரி.
சுமார் 800 கிலோ மீட்டர் பயணம் செய்து சென்ற இடங்கள் எல்லாம் வளம் கொழிக்கச் செய்யும் காவிரி தமிழகத்தின் ஜீவாதார நதி. தஞ்சை தரணியை நெற்களஞ்சியமாக உலகரிய செய்த பெருமை காவிரியால் ஏற்பட்டது.
மேட்டூர் அணை
ஒகேனக்கல் வழியாக தமிழகம் வரும் காவிரி ஆறு, மேட்டூர் அணையில் கடல்போல் தேங்குகிறது. அங்கிருந்து புயல்போல் புறப்பட்டு வரும் காவிரி, ஈரோடு மாவட்டத்தில் பவானியை சேர்ந்து கொண்டு முன்பை விடவும் வேகமாக பாய்ந்து செல்கிறது. பவானி கூடுதுறை பெருக்கெடுத்து ஓடும் காவிரியை கண்டு மகிழும் இடம்.
அகண்ட காவிரி
பின்னர் அமராதவதி, நொய்யல் ஆறுகளும் சேர்ந்து கொள்ள காவிரியின் வேகம் கட்டுங்காடங்காமல் செல்கிறது. கரூர் மாயனூர் தடுப்பணையில் தடுக்கப்பட்டு வேகம் கட்டுப்படுத்தப்பட்டாலும், அதன் பின் காவிரியின் வேகம் விரிந்து பறந்து அகண்ட காவிரியாக பாய்ந்தோடுகிறது. கடல் போல் காட்சியளிக்கும் காவிரி பார்க்க தூண்டும் அதிசயம்.
கொள்ளிடம்
திருச்சி முக்கொம்பில் மேலணை காவிரியை பிரிக்கிறது. இரண்டு ஆறுகளாக பிரியும் ஸ்ரீரங்கத்தை தீவாக மாற்றுகிறது. காவிரியும், கொள்ளிடமும், பிரிக்கப்படுவதற்கு காரணமும் உண்டு. வெள்ள நேரத்தில் காவிரியின் வேகத்தால் வயல்வெளிகளும், தோட்டங்களும், மக்கள் குடியிருப்பும் பாதிக்கப்படாமல் இருக்க, தண்ணீரை பிரித்து வெளியேற்றும் நடவடிக்கையே கொள்ளிடம். பின்னர் திருச்சி குடமுருட்டியுடன் சேர்ந்து கல்லணையில் வந்து அங்கிருந்து பலவாக பிரிந்து தஞ்சை தரணிக்கு வளம் சேர்க்கிறது காவிரி.
தஞ்சை தரணி
அகண்ட காவரி பல கிளைகளாக, கால்வாய்களாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியத்திற்கு வளம் சேர்க்கிறது. நெல், வாழை, தென்னை என தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தியின் முக்கிய பங்காற்றும் தஞ்சை நெற்களஞ்சியம் வளம் பெற காவிரியே முக்கிய நீர் ஆதாரம்.
தெற்கே புதுக்கோட்டை மாவட்டம் வரையிலும் சென்று பரவும் காவிரி கால்வாய் மூலம் பல்லாயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. வடகே பிரிந்து செல்லும் காவிரி வீராணம் ஏரியை நிரப்பி சென்னைக்கும் குடிநீர் கொடுக்கிறது. தமிழகத்திற்கு வளம் சேர்ந்து இறுதியில் பூம்புகாரில் கடலில் சென்று கலக்கிறது காவிரி.