பிரதிநிதித்துவப் படம் 
செங்கல்பட்டு

அச்சிறுப்பாக்கம் அருகே சிறுவர்களைக் கடித்த தெரு நாய்கள்: ஆபத்தான நிலையில் சிகிச்சை

பெ.ஜேம்ஸ் குமார்

அச்சிறுப்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே விண்ணம்பூண்டி கிராமத்தில் தெருவில் விளையாடிய இரண்டு சிறுவர்களை தெரு நாய்கள் கடித்தன. இதில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவது பாதசாரிகளையும் தெருவில் விளையாடும் குழந்தைகளையும் தெரு நாய்கள் கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடர் நிகழ்வாகி வருகின்றன. சமீபத்தில் சென்னை, ஆலந்தூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மனிதர்களை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன.

இந்த பீதி அடங்குவதற்குள் இன்றும் இரண்டு சிறுவர்களை தெரு நாய்கள் கடித்துக் குதறியிருக்கிறது. அச்சிறுப்பாக்கம் அருகே விண்ணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சசிகுமார் - சிவகாமி தம்பதி. இவர்களின் மகன்களான ஹரிஷ், சஞ்சய் ஆகியோர் இன்று வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அங்கு சுற்றித் திரிந்த தெரு நாய்கள் இந்தச் சிறுவர்கள் இருவரையும் கடித்துக் குதறி இருக்கின்றன.

பிள்ளைகளின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியினர், கற்களை வீசி, நாய்களை விரட்டினர். பின்னர் சிறுவர்கள் இருவரையும் காப்பற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவர்களை தெரு நாய் கடித்த சம்பவத்தைப் பார்த்துவிட்டு அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து அவர்களில் சிலர் நம்மிடம் பேசியபோது, “தெருவில் நடமாடும் நபர்களை நாய்கள் கடித்து பாதிப்புக்குள்ளாக்கும் விபரீத சம்பவங்கள் சமீப காலமாகவே அதிகம் நிகழ்கின்றன. விண்ணம்பூண்டி கிராமத்தில் தெரு நாய்கள் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் நாய்களால் தெருவில் யாரும் நடந்து சொல்ல முடியாத நிலை உள்ளது.

இதில் ஒரு சில நாய்களுக்கு வெறி பிடித்திருக்கிறது. அவை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் கடித்துள்ளன. ஆகவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT