ரிப்போர்ட்டர் பக்கம்

காணி நிலத் தோட்டம்: அறுவடை செய்யும் அரசுப் பள்ளி

எஸ்.நீலவண்ணன்

வி

ழுப்புரம் மாவட்டம் செஞ்சி யில் இருந்து 16 கிமீ தொலைவில் அமைந்துள் ளது பள்ளிகுளம் கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி மற்ற பள்ளிகளைக் காட்டிலும் தனித்துவமானது.

தூய்மையான வகுப்பறைகள், ‘ஸ்மார்ட் க்ளாஸ்’, குளிரூட்டப்பட்ட கணினி வகுப்பு, நூலகம், ‘பொனெடிக்ஸ்’ முறையில் ஆங்கிலம் கற்பித்தல் என பள்ளியின் தரம் உயர் தரமாக இருக்கிறது. இதனாலேயே கடந்த 2016-ம் ஆண்டுக்கான காமராஜர் விருதும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் அளித்து கவுரவித்தது தமிழக அரசு.

இன்னும் பொறுப்பாக மாணவர்களுக்கு ஏதேனும் கற்றுத் தர வேண்டும் என்ற உந்துதலில் இப்பள்ளி, தன் மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தைச் சொல்லித்தர களமிறங்கி இருக்கிறது. இதற்காக பள்ளியின் பின்புறம் சுமார் 1 ஏக்கர் பரப்பளவிலான அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் நிலத்தில், அவரது அனுமதியுடன் ரசாயன கலப்பில்லாமல் விவசாய வேலைகள் வேகமெடுத்துள்ளன. மாணவர்கள் விளைவித்த காய்கறிகளை விற்க, “நம்மாழ்வார் பசுமை அங்காடி’’ திறக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை கல்வியாக விவசாயத்தை கற்றுத் தருவது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் தனகீர்த்தி மற்றும் ஆசிரியர் தமிழரசன் ஆகியோரிடம் பேசினோம். “எங்கள் பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம். பள்ளி யில் இருந்து வெளியேறும் நீரை பயனுள்ள வழியில் ஏதேனும் செய்யலாம் என்று யோசித்ததில் உருவானதுதான் இந்த விவசாய விளைச்சல் திட்டம். நம்மாழ்வார் அய்யா, ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பாலேக்கர் ஆகியோரின் இயற்கை வேளாண்மைத் திட்டத்தை பள்ளியில் நடைமுறைப்படுத்தி பார்க்க ஆசை. உடனே களமிறங்கினோம். அந்த இடத்தில், ‘காணி நிலத் தோட்டம்’ என்ற பெயரில் இயற்கை வேளாண் தோட்டம் ஒன்றை அமைத்தோம்.

பள்ளியில் ஏற்கெனவே இயங்கி வரும் ‘சுற்றுச்சூழல் மன்றம்’ மூலமாக 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் அரை மணி நேரம் பயிற்சி அளித்தோம். நம்மாழ்வாரின் இருமடி பாத்தி, நவீன சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மூடாக்கு முறை, ஊடுபயிர், மற்றும் ஜீவாமிர்தம், மூலிகை பூச்சிவிரட்டிகள்னு இயற்கை வேளாண்மயை கற்றுத் தந்தோம்.

ஒரு மாத உழைப்பில் விளைந்தவற்றை முதல் அறுவடையை கிராம பெரியோர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை வைத்து திருவிழாவாக நடத்தினோம்.

அவரை, கொத்தவரை, வெண் டைக்காய், பீன்ஸ், சிறுகீரை, அரை கீரை, தண்டுகீரை, புளிச்சக்கீரை எக்கச்சக்கமா விளைய ஆரம்பிச்சது. குறிப்பா முள்ளங்கி அரை டன்னுக்கு மேல் விளைய, எங்களை விட மாணவர்கள் ரொம்ப ஆர்வமாயிட்டாங்க. விவசாயத்தை காக்க நாங்கள் செய்யும் கடமையாக இதைப் பார்க்கிறோம்” என்றார்கள் ஆசிரியர்கள்.

இவர்கள் திறந்திருக்கும் நம்மாழ்வார் பசுமை அங்காடியில் விற்பனையாளர் என யாரும் இல்லை. தேவைப்படுவோர், பணத்தை கல்லாவில் போட்டுவிட்டு காய்கனிகளை எடுத்துச் செல்லலாம். ஒருநாளைக்கு ஏறக்குறைய ரூ.500 கிடைக்கிறது. மாணவர்களிடம் நேர்மையை வளர்க்கும் விதமும் வித்தியாசமாக இருக்கிறது.

இதே பள்ளியில், மாணவர்களை அடக்கிய ‘பள்ளியின் மாதிரி சட்டசபை’ ஒன்று இயங்குகிறது. நேர்மையான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க செய்யப்படும் சிறு முயற்சியாக இதை செய்கிறார்கள். அங்காடி மூலம் வருவாய் மாணவர்களுக்கே செலவிடப்படுகிறது. அதையும் பள்ளியின் சட்டசபை கூடிதான் தீர்மானிக்கிறது.

விவசாயத்தின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் சமூகத்துக்கு தேவையான அறுவடையை செய்கிறது பள்ளிகுளம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளி.

SCROLL FOR NEXT