ப
தநீர் விற்று ஒரு பள்ளிக் கூடத்தையே நடத்துகிறது தூத்துக்குடி அருகே உள்ள கிராமம்.
தூத்துக்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் பனைமரங் கள் சூழ அமைந்துள்ளதுதான் அந்தோணியார்புரம் கிராமம். பனைமரங்கள் அதிகம் என்ப தால் அதுசார்ந்த தொழில் அமோகமாக நடந்தது ஒரு காலத்தில். பதநீரை காய்ச்சி, கருப்பட்டி தயாரிப்பது பிரதான தொழில். தற்போது பதநீரோடு நின்றுபோனது.
அந்தோணியார்புரம் பதநீருக்கு அப்பகுதியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. சீஸன் போது அந்தோணியார்புரத்தை கடந்து செல்லும் பயணிகள் பதநீரை ருசிக்காமல் சென்றதில்லை. நூற்றுக்கணக்கான பனை தொழிலாளர்கள் இருந்த நிலையில், இப்போது இக்கிராமத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 7. அதனால், தனித்தனியாக பதநீர் விற்பனை செய்வதற்கு பதிலாக, கிராம மக்கள் இணைந்து பதநீர் விற்பது என முடிவு செய்தனர்.
இதற்காக ஊர் கமிட்டி கடையில் மொத்தமாக பதநீர் கொடுக்கப்பட்டு விற்பனை நடக்கிறது. இதில் வரும் லாபத்தை உருப்படியாக செலவழிக்க திட்டமிட்ட கிராமத்தினர், அதை கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கினர். கிராம மக்களின் ஒற்றுமையால்தான் இது சாத்தியமானது.
அந்தோணியார்புரம் ஊர்த் தலைவர் எஸ்.மரியேந்திரனை சந்தித்தோம். “எங்கள் ஊரில் செயல்பட்டு வந்த ஆர்.சி. தொடக்கப்பள்ளி 10 ஆண்டுகளுக்கு முன் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் 6, 7, 8-ம் வகுப்புக்கான ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை. கிராம மக்களே ஆசிரியர்களை நியமித்து, ஊதியத்தையும் கொடுத்து வருகிறோம். இதற்கான நிதியை அளிப்பது பதநீர் விற்பனைதான்.
இந்த 3 வகுப்புகளின் பராமரிப்புச் செலவும் ஊர் கமிட்டியே செய்கிறது. மாணவ, மாணவிகளிடம் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. இதனால் உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மாணவர்களும் வரத் தொடங்கினர். 6, 7, 8 ஆகிய மூன்று வகுப்புகளில் மட்டும் 100 பேர் படிக்கின்றனர்” என்கிறார் பெருமையுடன்.
பதநீர் விற்பனை மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.3 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இதன்மூலம் கிடைக்கும் வருவாயும் ஊர் கமிட்டி சேமிப்பில் வைக்கப்பட்டு, பள்ளிக்குச் செலவு செய்யப்படுகிறது. பதநீர் சீஸன் மார்ச் 15 தொடங்கி ஆகஸ்ட் வரை இருக்கும். ஒரு படி பதநீர் ரூ.70-க்கு வாங்கிரூ.100-க்கு விற்கப்படுகிறது. தினமும் சராசரியாக 60 படி பதநீர்வரை விற்பனையாகும்.
பதநீரைக் கொண்டு பள்ளியைக் காக்கும் இக்கிராமத்தினரின் கோரிக்கை ஒன்றுதான். ஒரு காலத்தில் கோலோச்சி வந்த பனை தொழில், இப்போது மெல்ல அழியத் தொடங்கியுள்ளது. இதை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.