ரிப்போர்ட்டர் பக்கம்

பறக்கும் பாவை: பாரா ஜம்பிங் பயிற்சியில் அசத்தல்

க.ராதாகிருஷ்ணன்

யரமான இடத்தில் இருந்து கீழே பார்த்தாலே தலை சுற்றும். ஆனால் அதைவிட உயரமான இடத்தில் இருந்து பாரா ஜம்பிங் செய்து சாதித்திருக்கிறார் கரூர் அரசுக் கல்லூரி மாணவி திவ்யா. சாதிக்க வறுமையோ, பெண் என்பதோ தடையில்லை என நிரூபித்திருக்கிறார் அவர்.

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள சங்கரமலைப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சண்முகம் - அங்கன்வாடி சமையலர் கன்னியம்மாளின் மகள்தான் திவ்யா.

கரூர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி புவியியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்கவேண்டும் என்ற லட்சியக் கனவோடு காத்திருந்த திவ்யாவுக்கு கல்லூரி என்சிசி பிரிவில் சேர வாய்ப்பு கிடைத்தது. என்சிசி பிரிவில் ஆண்டுதோறும் தேசிய அளவில் பாரா ஜம்பிங் பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். இதற்கான தேர்வு போட்டிகள் திருச்சியில் நடைபெறும். அதில் பங்கேற்பதற்கான தகுதித்தேர்வு கல்லூரியில் நடைபெறும்.

இதன்படி, கல்லூரியில் நடந்த தகுதித் தேர்வில் புல் அப்ஸ், புஷ் அப்ஸ், சிட் அப்ஸ், ஓட்டம் ஆகியவற்றை குறுகிய நேரத்துக்குள் செய்து சாதனை படைத்தார். பின்னர், திருச்சியில் நடைபெற்ற தகுதி ஓட்டப் போட்டியில் 1,500 மீட்டர் தொலைவை 4 நிமிடம் 10 விநாடிகளில் கடந்து சாதித்தார்.

அதன்பின்னர், ஆக்ராவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெற்ற பாரா ஜம்பிங் பயிற்சிக்கு சென்றார். 40 பேரில் 20 பேர் பெண்கள். அதில் திவ்யாவும் ஒருவர். தமிழக அளவில் தேர்வான 3 பேரில் திவ்யா மட்டுமே பெண்.

வானத்தில் இருந்து குதித்து காற்றில் பறந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார் திவ்யா. “பாரா ஜம்பிங்கில் பங்கு பெற்றவர்கள் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டு 1,200 மீட்டர் உயரத்தில் இருந்து பாராசூட்டில் கீழே இறங்குவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். சரியாக தரையில் இறங்குபவர்களுக்கு மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும். நான் இறங்கிய விதம், காயமடையாமல் இறங்கியது ஆகிய காரணங்களால் எனக்கு 3 முறை பாராசூட்டில் இறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனக்கு இது பெரிய அளவில் சாதித்த மகிழ்ச்சியை அளித்தது” என்றார்.

கல்லூரியில் இவருக்கு பயிற்சி அளித்த என்சிசி ஆசிரியர் விநாயகம் கூறும்போது, “என்சிசியில் 3 ஆண்டு காலம் இருந்தவர்களுக்கு ‘சி’ சான்றிதழ் வழங்கப்படும். இது வேலைவாய்ப்புக்கு உதவியாக இருக்கும். பாரா ஜம்பிங்கில் திவ்யா சிறப்பாக செயலாற்றியதற்காக அவருக்கு ‘சி’ சான்றிதழ் பெறுவதில் போனஸ் மதிப்பெண்கள் கிடைக்கும். கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவி பாரா ஜம்பிங்கில் பங்கேற்றது இதுவே முதல் முறை என்றார் ” என்றார் பெருமையுடன்.

‘பறக்கும் பாவை’ திவ்யா நிகழத்த இருக்கும் எதிர்காலச் சாதனைகள் அவர் மேலும் உயரமாகச் செல்ல வாய்ப்பாக அமையும். வாழ்த்துவோம்.

SCROLL FOR NEXT