மற்றவை

நதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்: ராமநாதபுரத்தில் மோடி உறுதி

செய்திப்பிரிவு

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் நரேந்திர மோடி.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் இன்று ராமநாதபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசியது:

"தேர்தல் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்து சூறாவளியாக தொடங்கிய பிரச்சாரம், தற்போது சுனாமியாக மாறி உள்ளது. இந்த நாட்டை சீரழித்து வந்தவர்கள் தப்பிக்கவே முடியாது.

பல ஆண்டுகளாக தமிழகத்தில் மாற்று சக்தி இல்லாமல் இருந்தது. ஒரு முறை திமுக, மறுமுறை அதிமுக என மாற்றி மாற்றி ஆட்சிக்கு வந்து, ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் முதன்முதலாக நம்பகத்தன்மை உள்ள ஒரு மாற்று சக்தி உருவாகி உள்ளது. சமுதாய கண்ணோட்டத்தில் அரசியல் கண்ணோட்டத்திலும் நம் கூட்டணிதான் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. தமிழகத்தின் நன்மைக்காகவும், இந்த மக்களின் பாதுகாப்புக்காகவும் உருவான கூட்டணி இது.

அதிமுக, திமுகவின் பிடியில் இருந்து தமிழக மக்கள் விடுபட வேண்டும். இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் புதிய சரித்திரம் படைக்கும் என நம்புகிறேன்.

சோம்நாத் ஈஸ்வர மண்ணிலிருந்து ராமநாத ஈஸ்வர் மண்ணுக்கு வந்துள்ளேன். இந்தப் புண்ணிய பூமியானது, இந்த நாட்டின் புன்னிய மனிதர் அப்துல் கலாம் பிறந்த மண். அவர் சிறந்த விஞ்ஞானி மட்டும் அல்லாமல், சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அடல் பிகாரி வாஜ்பாய்தான் அவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

குஜராத் மீது பெரும் அன்பு வைத்திருக்கிறார் அப்துல் கலாம். குஜராத் இளைஞர்களுக்காக வந்து பேசி சிறப்பித்திருக்கிறார். அப்துல் கலாம் முதன்முதலில் பணியாற்றிய இடம் அகமதாபாத்.

காங்கிரஸ்தான் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால், சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.

தமிழகத்தில் உள்ள காங்கிஸ் தலைவர் - மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் (ப.சிதம்பரம்) மிகவும் பயந்து போயிருக்கிறார். தேர்தலில்கூட அவர் நிற்கவில்லை.இந்த மறு வாக்குப் பதிவு அமைச்சராலும், டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்களாலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் பட்டாசு தொழிற்சாலைகள் நலிந்துவிட்டன. சீனப் பட்டாசு வருகையால் இங்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால், சிவகாசி தொழிற்சாலை மேம்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிவகாசியில் உள்ள சிறு தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குகிறது. அதேபோல், குஜராத் மீனவர்களும் பாகிஸ்தான் கடற்படையால் துன்புறுத்தப்படுகின்றனர். இந்த நிலைமைக்கு, காங்கிரஸ் அரசின் துணிவின்மையே காரணம்.

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தொழில்நுட்ப முறையில் நடவடிக்கை எடுப்போம். கடலில் மீன்கள் எங்கு அதிகம் கிடைக்கும்? நமது எல்லை எங்கு முடிகிறது? என்பன பற்றிய விவரங்களை மீனவர்கள் அறிய வழிவகுக்கப்படும். குறிப்பாக, மீனவர்களுக்கு செல்போன் மூலம் உரிய தகவல்களை தர முடியும். அதன் மூலம் ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ராமேஸ்வரம் எப்படிப்பட்ட சுற்றுலா தலமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் இங்கு வர விரும்புகின்றனர். இதனை, மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்தினால் தமிழக சுற்றுலாத் துறை மேம்படும். அதற்கான நடவடிக்கைக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.

இந்த உலகத்தில் குறைந்த காலத்தில் முன்னேற கூடிய தொழில் என்றால், அது சுற்றுலாத் துறைதான். குறைந்த மூலதனத்தை வைத்து மிக அதிக வருவாயை ஈட்ட முடியும். இந்த சுற்றுலாத் துறை மூலம் டீ விற்பனையாளர்கள், பூ விற்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் போன்ற சிறு தொழில்புரிபவர்கள் ஏற்றம் பெறலாம். ஆகவேதான் பாஜக தேர்தல் அறிக்கையில் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு தண்ணீர்தான் பெரும் பிரச்சனையாக உள்ளது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை; மின்சாரம் இல்லை. வாஜ்பாய் கனவு நினைவுக்கு வருகிறது. காவிரி, கங்கை என இந்திய நதிகளை இணைப்பதற்கு அவர் கனவு கண்டார். அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். நான் இப்போது உறுதி அளிக்கிறேன். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும" என்றார் நரேந்திர மோடி.

SCROLL FOR NEXT