சி
மென்ட், ஜல்லி, செங்கல், இரும்புக் கம்பி இருந்தால் கட்டிடம் கட்டலாம். ஆனால் சேலத்தைச் சேர்ந்த சுரேஷின் கை அவற்றை அழகிய சிற்பமாக்கி விடும்.
பொதுவாக தீம் பார்க்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் விலங்குகள், மனித உருவங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் ஆகியவற்றின் பிரம்மாண்டமான பொம்மைகள் நிறுவப்படுகின்றன. குழந்தைகளை கவரவும் அலங்காரத்துக்காகவும் அவை வைக்கப்படுகின்றன.
பெரும்பாலும் இவ்வகை பொம்மைகள் பிளாஸ்டிக், ஃபைபர், ரசாயன மாவுக் கலவை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பொம்மைகள் வெயிலில் வைக்கப்படும்போது, அவற்றில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு டையாக்சின் என்ற நச்சு வாயு காற்றில் கலக்கிறது. ஃபைபர், ரசாயன மாவினால் செய்யப்படும் பொம்மைகள் உடைந்தால் அவை மக்குவதில் தாமதம் ஏற்பட்டு மண்ணை பாழ்படுத்திவிடும்.
இதுபோன்ற பொம்மைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பொம்மைகளை சிற்பங்களை உருவாக்குகிறார் சுரேஷ். சிமென்ட், செங்கல், இரும்புக் கம்பிகளைக் கொண்டு பிரம்மாண்டமான பொம்மைகளைச் செய்கிறார். அத்தனையும் உயிரோட்டமிக்கதாக இருக்கின்றன.
அடிப்படையில் கோயில் கோபுரங்களுக்கான சிற்பங்களை செய்பவரான இவர் பூங்காக்கள், பள்ளி, கல்லூரிகள், மாளிகைகள் ஆகியவற்றுக்கு அலங்கார பொம்மைகளுக்கு ஆர்டர் வருவதால் அதில் முழுமூச்சாக இறங்கிவிட்டார்.
சுரேஷ் நம்மிடம் கூறும்போது, “சினிமாக்களில் பிரம்மாண்டமான பொம்மைகளை பார்த்தபோது, அதுபோன்று ஏன் செய்யக்கூடாது என்று தோன்றியது. மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாததால் நல்ல வரவேற்பு கிடைத்தது. 22 அடி உயரத்துக்கு டைனோசர், 11 அடி உயர யானை உள்ளிட்ட பெரிய அளவிலான பொம்மைகளை ஏராளமாக செய்து கொடுத்துள்ளோம்” என்கிறார் பெருமையாக.
புகைப்படத்தைக் கொண்டே தத்ரூபமாக சிலையாக்கும் ஆற்றலைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை. இவரிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் இவர் மறக்காமல் கூறுவது நச்சு ரசாயனம் பூச்சுகொண்ட பொம்மைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்களை தவிருங்கள் என்பதைத்தான். சரிதானே!