நான் அப்போது சென்று வந்த மலைக்கிராம பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கான அறிகுறி மட்டுமல்ல, சத்துணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான சுவடு கூட இல்லை.
அதைப்பற்றி கேட்டபோது, "சத்துணவுக்கான அரிசி, பருப்பு எல்லாமே முள்ளிப்பட்டி என்ற ஆதிவாசி கிராமத்திலேயே கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அதை அங்கிருந்து சுமார் ஐந்து கி.மீ. காட்டு வழிப் பயணம் சுமந்துகொண்டு வந்தால்தான் குழிப்பட்டிக்கு கொண்டு வரமுடியும். அதற்கும் அப்பால் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது மாவடப்பு. அதற்கும் தலைச்சுமையாகவே சத்துணவுக்கான அரிசி பருப்பைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். அதற்கான செலவுகளை யார் ஏற்பது? யார் அதை சுமப்பது? என்பதாலேயே அதை யாரும் எடுத்து வருவதில்லை. அதையும் நகரப்பகுதியிலேயே விற்று காசாக்கிக் கொள்கிறார்கள் ஆசிரியர்கள்.
அது மட்டுமல்ல, சர்வசிக்ஷ அபியான் திட்டத்தில் வருடா வருடம் பள்ளிக் குழந்தைகள், பள்ளிக்கூட மராமத்து வேலைகளுக்கு ரூ.20,000 வரை நிதியுதவி வரும். அதை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளே கையாள வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதற்கு தோதாக பள்ளிக்கூடமே நடத்தாத இந்தப் பள்ளி ஆசிரியர்கள் மலைக் கிராமங்களிலேயே தாங்கள் சொன்னபடி கேட்கும் ஆட்களை பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகியாக சேர்த்துக் கொள்கிறார்கள். அவரிடம் கையெழுத்து வாங்கி, ஏதோ கொஞ்சம் அவருக்கு கொடுத்துவிட்டு இந்த நிதியையும் சுருட்டிக் கொள்கிறார்கள். இந்தக்கொடுமையை என்னவென்று சொல்வது?" என்றார் சேகர்.
காலை 11 மணி முதல் மதியம் 3 வரை இந்தக் கிராமங்களை சுற்றிவிட்டுத் திரும்பி, அதே மலைப்பாதையில் தட்டுத் தடுமாறி விழுந்தெழுந்து வரும்போது அப்பர் ஆழியாறுக்கு மேலே தொடங்கும் வனத்துறை சாலையில் காலையில் பார்த்த கர்ப்பிணிப் பெண்ணும், அவள் தாயும் பரிதவிப்புடன் காத்திருந்தனர். காலையில் தகவல் சொல்லியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. மகளுக்கு பன்னீர்குடம் உடைந்து விடும் தருவாயில் உள்ளது. போகும் வழியில் கொஞ்சம் ஆம்புலன்ஸ் தென்பட்டாலோ, ஆஸ்பத்திரியிலோ தகவல் சொல்லி அவசரப்படுத்தி விட்டுச் செல்லுமாறு அந்தத் தாய் பதறினாள். செல்போனில் தொடர்பு கொள்ளவும் டவர் கிடைக்கவில்லை. எனவே போகும் வழியில் ஆம்புலன்ஸை தடம் தடமாகப் பார்த்துக்கொண்டே சென்றோம்.
கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் ஆழியாறுக்கு அப்பால் ஒரு டீக்கடையில் ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த டிரைவரிடம் சென்று விஷயத்தைச் சொல்லி சீக்கிரமாகப் போகச் சொன்னோம். அவரும் போவதாக பாவ்லா காட்டினார்.
''இப்பவே மணி அஞ்சு. இனி இந்த ஆள் அந்த கரடு முரடான காட்டுப்பாதையில் வண்டியை ஒட்டிச் சென்று அந்தப் பெண்ணை எப்போது கூட்டிட்டு வருவானோ யார் கண்டா? இடையில் யானை நிக்குமோ, சிறுத்தை குறுக்கிடுமோ? அதுக்குள்ள அந்தப் பெண்ணுக்கு பிரசவம் ஆயிடுமோ, குழந்தை பிழைப்பாளோ, தாய் காப்பாற்றப்படுவாளா யார் கண்டா? அவங்க நட்ட நடு காட்டுக்குள்ளே என்ன செய்வாங்களோ? இதுதான் அந்த மக்களின் இன்றைய வாழ்நிலை!'' என அங்கலயாய்த்துக் கொண்டே வந்தார் சேகர்.
இந்தப் பயணம் முடிந்த பின்பு பள்ளிக்கூடம் சம்பந்தமாக உடுமலை கல்வி அதிகாரி ஒருவரிடம் புள்ளிவிவரங்களுடன் கேட்டபோது பதறிப்போனார். "சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களை வரவழைக்கிறேன். இன்ஸ்பெக்ஷனுக்கும் செல்கிறேன். நடவடிக்கையும் எடுக்கிறேன்!' என்று சொல்லி கழன்று கொண்டார்.
இந்த விவகாரத்தில் அப்போதைக்கு கல்வி அதிகாரி விசாரணை நடத்தி சில நாட்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கடனே என்று பள்ளிக்கு வந்தார்கள். பிறகு பழைய கதைதான். சமீபத்தில் மாவடப்பு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவரிடம் இதுகுறித்து பேசினேன். பள்ளிகள் எல்லாம் நடக்கிறதா? ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? எனவும் கேட்டேன். 'எங்கே சார் அவங்க வர்றாங்க. மாசம் ஒருநாள், ரெண்டு நாள் வந்தாலே அதிசயம்!' என்றார் வேதனையோடு.
பழங்குடிகளுக்கான கல்வி, சுகாதாரம் மட்டுமல்ல, அவர்களுக்கான பொருளாதார மேம்பாடு திட்டங்களும் பெயரளவிலேயே உள்ளது. ஒரு பக்கம் மலைமக்களுக்கான வனக்குழுக்கள் ஏற்படுத்தி அதன் மூலம் வங்கிக் கடன், மானியம் என வழங்குகிறார்கள். அதோடு அரசு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதில் முக்கியமாக இவர்களில் ஓரளவு படித்த இளைஞர்களுக்கு வனத்துறையிலேயே வேட்டைத்தடுப்புக் காவலர்கள் பணி வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.
இந்த வேட்டைத்தடுப்புக் காவலர்கள் மூலம்தான் வனத்துறையின் கீழ்நிலை அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை காட்டுக்குள்ளேயே செல்கிறார்கள். இந்த வேட்டைத்தடுப்புக் காவலர்கள்தான் காட்டில் எழும் வனத்தீ முதற்கொண்டு ஊருக்குள் வரும் வனவிலங்குகள் வரை கட்டுப்படுத்துவதும் நடக்கிறது. ஆனால் அவர்களின் வாழ்நிலை கீழ்நிலையிலேயே வைத்துள்ளார்கள். தங்களின் மோசமான நிலைக்கு வேட்டைத்தடுப்புக் காவலர்கள் போராட்டத்தை கையிலெடுத்ததும் முதன்முதலாக வால்பாறை சரகத்திலேயே நடந்துள்ளது. அந்த சம்பவத்தையும் கொஞ்சம் காண்போம்.
வால்பாறையிலிருந்து 10 கி.மீ. தொலைவு அக்காமலை. இதற்கு மேலே உள்ள கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசும்பொழில் சூழும் புல்மேடுகள் காணப்படுகிறது. இங்கே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் வேண்டும். இங்கே தடுப்பு கேட் போடப்பட்டுள்ளது. இந்த புல்மேடு பகுதியில் வனத்துறை தங்கும் விடுதி ஒன்றும் உள்ளது.
இங்கு விஐபிக்கள், வனத்துறை அதிகாரிகள் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அவர்களையும் வனவர் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள்தான் பாதுகாப்பாக அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்துவிட்டு திரும்ப கொண்டுவந்து விடுவர்.
இன்றைக்கு ஒரு வருடம் முன்பு வனத்துறையினரின் அன்றாட ரோந்துப் பணிக்காக 2 வனத்துறை அலுவலர்களும், சங்கிலிப்பாண்டி (எ) கணபதி (வயது 57) என்ற வேட்டைத்தடுப்புக் காவலரும் சென்றுள்ளனர். புல்மேடு பகுதிக்கு போய்விட்டு திரும்பும் வழியில் ஆட்டுப்பாறை குறுக்கு என்ற இடத்தில் இருந்த புதர் மறைவில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு காட்டு மாடு எகிறிக்குதித்து பாய கணபதி ஒரு திக்கிலும், மற்ற இருவர் வேறு திக்கிலும் ஓடியிருக்கின்றனர். பிறகு திசை மாறி வந்த இருவரும் கணபதியைத் தேட அவர் ஓரிடத்தில் மயங்கிக் கிடந்ததை கண்டுள்ளனர்.
அவரை அங்கிருந்து தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு 3 கி.மீ. தூரம் உள்ள தடுப்பு கேட்டுக்கு வந்து அங்கிருந்த வனத்துறை வாகனத்தில் கணபதியை கிடத்தி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கணபதிக்கு மரணம் ஏற்பட்டிருப்பதை தெரிவித்துள்ளனர். அதையடுத்து தகவல் அறிந்த வெவ்வேறு பகுதிகளில் பணிபுரிந்த வேட்டைத்தடுப்புக் காவலர்கள் வால்பாறை ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டனர்.
கணபதிக்கு நேர்ந்த துயரத்தைக் கேட்டுப் பொங்கியவர்கள், வால்பாறை மானாம்பள்ளி வனச் சரகர் அலுவலகத்தை அடைந்து, 'இறந்தவருக்கு வனத்துறை ஊழியர்களுக்கு வழங்குவது போல துறை ரீதியான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுமதிக்க மாட்டோம். உடலை வாங்க மாட்டோம்!' என்று வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள் கோரிக்கையை வனத்துறை அலுவலர்கள் ஏற்கவில்லை. வேட்டைத்தடுப்புக் காவலர்கள் பணி என்பது ஒப்பந்த ஊழியர் பணி. அதற்கு தொகுப்பூதியம் மட்டுமே. சீருடை உள்ளிட்ட சில விஷயங்கள் கூட நாங்களாக நிதி சேகரித்து தருவது. மற்றபடி வேட்டைத்தடுப்புக் காவலர் பணியில் உள்ளவர்கள் பணியின் போது இறந்தால் கிடைக்கும் வகையில் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதைப் பெறலாம்!' என்று தெரிவிக்க, இதனால் எழுந்த பிரச்சினையில் கணபதியின் போஸ்ட் மார்ட்டம் அன்று நடைபெறவில்லை.
அடுத்த நாள் நடந்த பேச்சுவார்த்தையில், 'வனத்துறை அலுவலர்கள் சார்பில் ரூ.25 ஆயிரம் தருவதாகவும், துறை ரீதியான நஷ்ட ஈடு, ஒருவருக்கு அரசு வேலை என்பதை அரசுதான் அறிவிக்க வேண்டும்!' என்று தெளிவுபடுத்தியுள்ளனர். அதையடுத்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வேட்டைத்தடுப்புக் காவலர்கள் குழு, 'கணபதியின் குடும்பம் இதை ஏற்றுக் கொண்டால் நாங்கள் தலையிடுவதில்லை!' என்று கூறியுள்ளனர். தொடர்ந்து கணபதியின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட, குடும்பத்தினருக்கு ரூ.25 ஆயிரம் தொகை வழங்கியுள்ளனர் வனத்துறையினர். இதைத் தொடர்ந்து வேட்டைத்தடுப்புக் காவலர்களிடம் பல்வேறு குமுறல்கள்.
''குடியிருப்புகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து பொருட்கள் சேதமடைந்துவிட்டாலோ, பொதுமக்கள் காயமடைந்தாலோ அரசு சார்பில் நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. குறிப்பாக வனவிலங்குகள் தாக்கி இறந்தால் ரூ.3 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வனத்துறை மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நேரம் காலம் பார்க்காமல், அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள்ளிருந்து குடியிருப்புகளுக்குள் நுழையும் வன விலங்குகளை காட்டுக்குள் விரட்டி விடவும், வன விலங்குகள் நடமாட்டத்தைக் கணக்கெடுக்கவும், வனத்துறை அதிகாரிகளுக்கு வனவிலங்குகள் இருக்குமிடத்தை தேடிக் கண்டுபிடித்துச் சொல்லவும், வழிகாட்டவும் பணியாற்றும் சேவர்களான எங்களுக்கு அரசு எந்த ஒரு நஷ்ட ஈடும் அளிப்பதில்லை!'' என்று வேட்டைத்தடுப்புக் காவலர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் போது வேட்டைத்தடுப்புக் காவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் பேசினார். எந்த இடத்திலும் தன் பெயர் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
- மீண்டும் பேசலாம்...