கூ
ந்தலுக்கு மதிப்பும், மரியாதையும் தலை யில் ஒட்டியிருக்கும் வரைதான். உதிர்ந்துவிட்டால் குப்பைக்குத்தான் செல்லும். அப்படி குப்பைக்குச் செல்லும் முடிதான் ஏழை, ஆதரவற்ற, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 13 ஆண்டுகளாக உதவுகிறது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தியம்மாளுக்கு குழந்தைப் பேறு இல்லை. இதனால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானவர், ஆறுதல் தேடி முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருக்கும் பெண்களை குளிப்பாட்டி, தலைவாரி, அவர்களது இருப்பிடத்தை சுத்தம் செய்து திருப்தியடைந்தார்.
குடும்பச் சூழல் அவரை, முழுநேர சேவையில் ஈடுபட வைத்தது. அதன் பிறகு, ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்வது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் என்று பலதரப்பட்ட சேவைகளில் ஈடுபடுத்திக் கொண்டார்.
2005-ல் தலைமுடியைக் கொண்டு வருவாய் ஈட்டமுடியும் என அறிந்தவர், அதன்மூலம் சேவையைத் தொடர முடிவு செய்தார். இதையடுத்து அக்கம்பக்கத்து வீடுகளில் துணிப்பைகளைக் கொடுத்து, தலையில் இருந்து கொட்டும் முடியை சேகரிக்கச் சொன்னார். சில நாட்கள் கழித்து அவரே போய் பைகளை சேகரித்தார்.
இப்படி ராயபுரம், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட் டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இவரது முடி சேகரிப்பு பை விநியோகிக்கப்பட்டது. பெண்களின் ஒத்துழைப்புடன் சேகரமான முடியை விற்று ஆதரவற்ற பெண்களுக்கு கிரைண்டர், தையல் மிஷின், மீன்பாடி வண்டி, சிறுதொழில் செய்ய உதவி என அவரது சேவை நீண்டது. அதன்பிறகு தன்னிடம் உதவி கேட்டு வரும் பெண்களிடமும் முடியை சேகரிக்க பை கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.
இதுகுறித்து ஆனந்தியம் மாள் நம்மிடம் கூறும்போது, “குப்பைக்குப் போகும் முடியை சேகரித்து அதனை விற்று கிடைக்கும் பணம் ஆதரவற்ற ஏழை, எளிய பெண்களுக்கு குறிப்பாக பார்வையற்ற பெண் களுக்கு உதவுகிறேன். இப்படி கடந்த 13 ஆண்டுகளில் 25 பேருக்கு உதவியிருக்கிறேன்.
அதுபோக வேண்டாத பொருட்கள் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன். குப்பையைக் கொடுத்தாலும் அதில் உள்ள பிளாஸ்டிக் போன்றவற்றை பிரித்தெடுத்துவிட்டு, மீதமுள்ளதை வெயிலில் காயவைத்து அடுப்பு எரிக்கப் பயன்படுத்துகிறேன்” என்றார்.
வீடுகளில் தேவையில்லை என ஒதுக்கும் எந்தப் பொருளும் யாருக்கோ ஒருவருக்கு உதவும் என்ற எண்ணத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறார் ஆனந்தியம் மாள்.
இவரது ஒரே ஆசை மது இல்லாத இந்தியாவை பார்ப் பதுதான். கண்கள் விரிய ஆர்வத்துடன் கூறுகிறார்.