திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி மலையருகே உள்ளது குறுமலை. இங்கே முடுவர், மலசர், புலையர், இருளர் என ஆயிரக்கணக்கான பழங்குடியின குடும்பங்கள் வாழும் செட்டில்மெண்ட் (பழங்குடி கிராமங்கள்) உள்ள பகுதி இது. இந்த இடம் யானை, புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நிறைந்திருப்பதோடு, சந்தனம், வெண்தேக்கு, வேங்கை போன்ற அரிய வகை மரங்களும் அடர்ந்திருக்கும் பகுதியாக விளங்குகிறது.
இந்திராகாந்தி வன உயிரின சரணாலயத்தை, ஆனைமலை புலிகள் காப்பகமாக அரசு அறிவித்ததினால், 'இங்குள்ள மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களை காலி செய்ய வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், சமவெளிப்பகுதியில் பட்டாவுடன் ஒரு வீடும் கட்டித் தருவோம்!' என்றெல்லாம் வனத்துறை கெடுபிடிகளை செய்ய ஆரம்பித்தது.
அதைக் கேட்டு மலை மக்கள் கொந்தளித்தனர். சாலை மறியல் போராட்டங்கள் எல்லாம் செய்தனர். அதை அப்போதைக்கு பேச்சுவார்த்தை மூலம் சரிப்படுத்தினர் அரசியல்தலைகள். எனவே வனத்துறையினர் இந்த விஷயத்தில் கொஞ்சம் அமுக்கி வாசிக்க ஆரம்பித்தனர். என்றாலும் இந்த விவகாரம் நீருபூத்த நெருப்பாகவே வனத்துறையினருக்கும் பழங்குடியினருக்கும் இருந்து வந்தது.
ஏற்கெனவே இந்த மலை மக்களுக்கும் வனத்துறைக்கும் ஏழாம் பொருத்தம். காட்டில் கிடைக்கும் சீமார் புல் (துடைப்பம் செய்யப் பயனாவது), தேன், வடுமாங்காய், லெமன் கிராஸ் எனப்படும் நாரத்தம்புல் போன்றவற்றை இந்த மலைமக்கள் சேகரித்து தலைச்சுமையாக சந்தைக்கு கொண்டு போய் விற்பதையே பரம்பரைத் தொழிலாக வைத்திருந்தார்கள் பழங்குடிகள்.
அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ளூர் வனத்துறையினருக்கு ஒரு தொகை கப்பம் கட்டியாக வேண்டும். அது மட்டுமல்லாது காட்டில் காட்டுத்தீ பரவாமல் இருக்க தீத்தடுப்புக் கோடுகள் போட, தடுப்பணைகள் கட்ட வனத்துறையினர் கூப்பிட்ட குரலுக்கு வீட்டுக்கு ஓர் ஆள் கூலியில்லாமல் வேலை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. இதற்கு எதிராக மலை மக்களில் சிலர் வாய்திறந்தபோது, அதற்குப் பரிசாக அவர்கள் மீது கஞ்சா வழக்கு, சந்தனக்கட்டை கடத்தல் வழக்கு போடப்பட்டிருக்கின்றன.
இந்த தொல்லையிலிருந்து தப்ப 2008-ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். அதன் மூலம் தங்களுக்கு நடக்கும் துன்பங்களுக்கு விடிவு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுக்களும் அளித்தனர்.
இந்த சங்கத்தின் தலைவராக குறுமலையைச் சேர்ந்த கோ.செல்வன், செயலாளராக தவசி என்ற இளைஞர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதில் செல்வன் பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்தவர். குறுமலைப் பகுதியில் இந்த அளவுக்கு படித்த நபர் இவர் மட்டும்தான். இவர் மலைவாழ் மக்களை வனத்துறை பாடாய்ப்படுத்துவது குறித்து அடிக்கடி கலெக்டரிடம் புகார் செய்து வந்தார்.
இந்த நிலையில் 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் குழிப்பட்டி, குறுமலைப் பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் வனத்துறை ஊழியர்கள் முன்னிலையில் கடத்தல்காரர்கள் சந்தன மரம் வெட்டிக் கடத்துவதை தன் செல்போன் கேமராவில் பதிவு செய்து அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டார் செல்வன். உடனே அந்த இடத்தை வந்து பார்வையிட்ட வனத்துறை அதிகாரிகள், கிளை தழைகளாக மட்டும் அங்கே 60 முதல் 70 டன் சந்தன மரத்துண்டுகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார்கள்.
உள்ளூர் வனத்துறையினரோ, 'இங்குள்ள மலைவாசி மக்கள்தான் மரங்களை வெட்டியிருக்காங்க. அவங்க 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறோம்!' என்று பிளேட்டையே மாற்றிப்போட்டு விட்டார்கள். தவிர, ஆனைமலைக்காடுகளில் குட்டி வீரப்பன்கள் உருவாகி விட்டதாகவும், அவர்கள் சந்தன மரங்களாக பார்த்து வெட்டி கேரளாவுக்கு கடத்துவதாகவும், புதுக் கதைகளை உருவாக்கி மீடியாக்கள் மூலம் பரவ விட்டனர்.
இருந்தும் வேறு வழியில்லாமல் செல்வனின் செல்போன் வீடியோ ஆதாரங்களை வைத்து அதிகாரிகள் இப்பகுதி வனத்துறை ரேஞ்சர் , வனவர் மற்றும் வாட்சர்கள் சிலரை பணியிட மாற்றம் செய்தனர் அதிகாரிகள். இதனிடையே இங்கு நடக்கும் சந்தன மரக்கடத்தல்கள் பற்றி ஒரு டிவி சேனலக்கு செல்வன் பேட்டி தர எரிச்சலடைந்தனர் குறிப்பிட்ட சில வன அதிகாரிகள்.
அதே சமயம், 'மலைவாழ் மக்கள், சிறு காட்டுப் பொருட்களைச் சேகரிக்க வனத்துறை தடைவிதிக்கக்கூடாது, தடுப்பணை கட்டவோ, தீத்தடுப்புக்கோடுகள் அமைக்கவோ பழங்குடிகள் அழைக்கப்பட்டால் அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.100 தர வேண்டும்!' என்று கலெக்டர் அறிவித்தார். இதில் மேலும் கோபமானார்கள் வனத்துறையினர்.
இந்த நிலையில் 8.4.2010 அன்று காடாம்பாறை நீரேற்று மின் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை போலீஸார் மடக்கி சோதனையிட்ட போது பையில் 15 கிலோ கஞ்சா சிக்கியிருக்கிறது. வாகனத்தில் பின்புறம் உட்கார்ந்து வந்தவர் தப்பியோடி விட்டார்.
பைக்கை ஓட்டி வந்தவர் தன் பெயரை செல்வன் என்று கூற, அவரை காடாம்பாறை போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்தனர். அதன் பின்பு ஸ்டேஷனுக்கு வந்த ஏசிஎப் ரேங்க் அதிகாரி ஒருவர் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்த நெருக்குதலில் அந்த கஞ்சா வழக்கில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் செல்வன், செயலாளர் தவசி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இதனால் குறுமலை மலைவாழ் மக்கள் போராட்டக்களத்தில் இறங்கினர். தவசி, செல்வனை கைது செய்ய வந்த போலீஸாரை தடுத்தனர்.
ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, 'வாரண்டுடன் வாங்க!' என்று அனுப்பி வைத்தனர். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி வழக்கு பதியப்பட்ட சங்க நிர்வாகிகள் முன்ஜாமீன் பெற நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர்களில் செல்வன் பேசும்போது, 'இதுவரை நாங்க எந்த வம்பு தும்புக்கும் போனதில்லை. செல்வன் என்ற பெயரில் ஒரு கஞ்சா கடத்தல் ஆசாமி கிடைத்தவுடன், அதே பெயருடன் இருக்கும் என்னையும், என்னுடன் இருக்கும் தவசியையும் அந்த வழக்கில் இணைத்துவிட்டனர். சந்தனக்கடத்தலை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியதால் எனக்கு கிடைத்த பரிசு இது!' என்று மனம் நொந்தார்.
இது பற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மதுசூதனன் இப்படி பேசினார்:
''குறுமலை மட்டுமல்ல, மாவடப்பு, கொட்டாம்பாறை, வசம்புக்குளம், குழிப்பட்டி, கருமுட்டி, பூச்சிக் கொட்டாம்பாறை பகுதி மலைவாழ் மக்களும் எங்கள் சங்கத்தில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டனர். அதனால் வனத்துறையின் 'மாமூல்' வாழ்க்கைக்கு ஏகப்பட்ட இழப்புகள். மலைவாசிகள் இப்போது அவர்கள் சேகரிக்கும் சிறு காட்டுப் பொருட்களுக்கு வனத்துறைக்கு கப்பம் கட்ட தேவையில்லை. அதனால் தலைச்சுமைக்கு பதிலாக அவர்கள் ரூ.4 ஆயிரத்து 500க்கு டெம்போவை வாடகைக்கு பிடித்து அந்தப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்கிறார்கள். இதனால் வசதியடைந்த சில இளைஞர்கள் மோட்டார் பைக் வாங்கி ஓட்டுகிறார்கள். அது இப்பகுதி வனத்துறையினருக்கு பொறுக்கவில்லை. இவர்கள் இப்படி முன்னேறி விட்டால் நம் எதிர்காலம் காலி என்ற எண்ணத்தில்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள். பொய் வழக்கும் போடுகிறார்கள். இதை நாங்கள் சும்மாவிடமாட்டோம். அனைத்து வகை போராட்டங்களையும் கையில் எடுப்போம்!'' என்றார்.
இதைப் பற்றி வனத்துறையினர் விளக்கும்போது, ''வன ஊழியர்கள் உதவியுடன் சந்தன மரக்கடத்தல் நடந்தது உண்மைதான். அதற்காக மலைவாழ் மக்கள் நல்லவர்கள் ஆகி விட முடியாது. அவர்கள் கஞ்சா பயிரிடுவது, அதை விற்பனைக்கு கொண்டு செல்வது தொடர்ந்து நடக்கிறது. அவர்கள் மீது வழக்குப் போட்டிருப்பதும் பொய்வழக்கு அல்ல!'' என்றனர் அழுத்தமாக.
இந்த அழுத்தம் இத்தோடு நின்றதா என்றால் அதுதான் இல்லை. மறுபடி மூன்று மாதம் கழித்து இதே குழிப்பட்டி பகுதியில் புலி நகம், புலி பற்கள் சர்ச்சையுடன் பூதாகரமாக எழுந்தது. இந்த சம்பவம் முந்தையதை விட வேடிக்கை விநோதம் கலந்தது.
குழிப்பட்டி கிராமத்தை ஒட்டி இருக்கும் அப்பர் ஆழியாறு பகுதியில் வனத்துறை அதிகாரிகள் வாகனச் சோதனை செய்துள்ளார்கள். அப்போது அவ்வழியே வந்த மாருதி கார் ஒன்றில் மலைமக்கள் சிலர் சந்தனக் கட்டைகளை ஏற்றுவதை கண்டதாகவும், அவர்களை அங்கேயே மடக்கிப்பிடித்து ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ சந்தனக்கட்டைகளையும், 2 புலி நகத்தையும், காரையும் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகின.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in