தேர்தல் ஆணைய உத்தரவை ஏற்று 7 அதிகாரிகளை தேர்தல் அல்லாத வேறு பணியிடங்களுக்கு மேற்கு வங்க அரசு புதன்கிழமை மாற்றியது.
அவர்கள் வகித்து வந்த பதவியிடங்களில் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தவர்களை மாநில அரசு நியமித்துள்ளது.
புகாருக்கு உள்ளான 7 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, அந்த உத்தரவை அமல்படுத்த முடியாது என்று கூறிவிட்டார். இதற்கிடையே மாநில அரசின் தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தில், தேர்தல் ஆணையம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், தனது உத்தரவை புதன்கிழமை காலை 10 மணிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று எச்சரித்தது. அதற்கு மாநில அரசு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மேற்குவங்கத்தில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்துவதாக மேற்கு வங்க அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரையும் வேறு பணியிடங்களுக்கு மாற்றிவிட்டது.
இது தொடர்பாக மாநில உள்துறை செயலாளர் வாசுதேவ் பானர்ஜி கூறியதாவது: “தேர்தல் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தியுள்ளோம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு முறைப் படி கடிதம் அனுப்பி தகவல் தெரிவித்துவிட்டோம்” என்றார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் பன்சால், மேற்கு மிட்னாவூர் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அரிந்தம் தத்தா, மதுராபூர் தொகுதி தேர்தல் அலுவலர் அலோகேஷ் பிரசாத் ராய், மாவட்ட காவல் கண்காணிப் பாளர்கள் ஆர்.கே. யாதவ் (மால்டா), ஹுமாயுன் கபிர் (முர்ஷிதாபாத்), எஸ்.எம்.எச். மிர்ஸா (பர்த்வான்), பாரதி கோஷ் (மேற்கு மிட்னாபூர்) ஆகியோரை மேற்கு வங்க அரசு வேறு பணியிடங்களுக்கு மாற்றியுள்ளது.