சு
வரில் கிறுக்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தார் அவரது தந்தை. பக்கத்து வீட்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, நம்ம வீட்டு குழந்தை சுவரில் என்னவோ செய்து கொண்டிருக்கிறானே என வந்து பார்த்த தந்தைக்கு ஆச்சரியம். 11 மாத குழந்தையின் சுவர் கிறுக்கலில் ஏதோ ஒரு ஓவியம் தந்தையின் கண்ணில் பட்டது. மகனுக்கு ஓவியம் வரைவதில் உள்ள திறமையை அப்போதே கண்டுகொண்டார் .
இதன் பின்னர் படம் வரையுமாறு குழந்தையை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். அன்று அவர் இட்ட விதை தற்போது விருட்சமாக வளரத் தொடங்கியுள்ளது. 11 மாத குழந்தைப் பருவத்தில் கிறுக்கல் ஓவியங்களை வரையத் தொடங்கி 6 வயதில் நவீன ஓவியம் வரைவதில் உலக சாதனை படைத்துள்ளார் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிறுவன் கவிவேலன்.
கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் கவிஞர் கதிர்பாரதி ஓதுவார் - கவிதாபாய் ஆகியோரது மகன்தான் இந்த குட்டி ஓவியர். 2-ம் வகுப்பு படிக்கிறார். இவரது பிஞ்சுக் கைகள் கோட்டு ஓவியம், நவீன ஓவியம், கேலிச் சித்திரங்கள் என வரையத் தொடங்கி, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை படைத்திருக்கிறார்.
தந்தை கதிர்பாரதி, தான் எழுதிய ‘கதிர்பாரதியின் கவிவேலன் தாலாட்டு’ (குழந்தை தாலாட்டு பாடல்கள்), ‘தை பிறந்தும் தையல்களோடு’ என்கிற ஹைக்கூ கவிதை நூல் ஆகியவற்றின் அட்டையில் மகனின் ஓவியம்தான் அலங்கரிக்கிறது.
கூடவே பல்வேறு இடங்களில் ஓவியக் கண்காட்சிகளிலும் இடம்பிடித்திருக்கிறது. இத்தனை சிறு வயதில் அதிகப்படியான விருதுகளும் பாராட்டுகளும் குவியத் தொடங்கிவிட்டன. ‘பிறவி ஓவியர்’, ‘தூரிகைத் தென்றல்’என அவரது பெயருக்கு முன்னால் டைட்டிலாகி விட்டன.
இந்நிலையில் உலக சாதனை படைத்தவர்களை பாராட்டும் அசிஸ்ட் உலக சாதனை ஆய்வு அறக்கட்டளை என்ற அமைப்பு ‘உலக சாதனையாளர்’ என பாராட்டியுள்ளது. ‘1-03-2012-ம் தேதியில் இருந்து 16-05-2017-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 800 நவீன ஓவியங்கள் வரைந்ததற்காக அசிஸ்ட் அமைப்பு இந்த விருதை வழங்கியது.
கவிவேலனின் பெற்றோரிடம் பேசியபோது ‘குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டும். எனது மகனை 5 வயது வரை எந்த பள்ளியிலும் சேர்க்கவில்லை. அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்று வரும் கவிவேலனுக்கு படிப்பது இனிமையான அனுபவம் என உணர வைத்தேன். பள்ளியில் சேர்க்கும் வரை குடும்பமும், நட்பும், உறவும் கற்பித்திருக்கிறேன். ஓவியங்களோடு தனது திறனை வெளிப்படுத்திய கவிவேலன், தற்போது ஆர்மோனியம், வயலின் ஆகியவற்றை வாசித்தல், பாடுதல், நடனம் ஆடுதல், கேரம், டென்னிஸ், எதுகை, மோனையுடன் பேசுவது போன்ற திறமை பெற்றுள்ளார்,’’ என்று பூரித்தார்.
தன் மகனிடம் இருந்த திறனை கண்டறிந்து அதனை முழுமையாக வெளிக்கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளனர் கவிவேலனின் பெற்றோர். ஓவியங்கள் வரைந்து கொண்டே கவிவேலன் கூறும்போது, ‘‘வெளி யில் செல்லும்போது வழியில் பார்க்கிறது, எனக்கு புடிச்சிருந்தா வீட்டுக்கு வந்ததும் வரைவேன்’’ என்றார்.
தூரிகையும், கையுமாகத் திரியும் இந்தச் சிறுவனுக்கு சாதனைகள் படைப்பது என்பது தொட்டுவிடும் தூரம்தான். அதற்கான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.