ம
துரை மீனாட்சியம்மன் கோயில் வடக்கு வாசல். இங்கு, தினமும் காலை 8 மணிக்கு நேரம் தப்பாமல் வந்து நிற்கிறது அந்த குட்டி யானை (டாடா ஏஸ்) வாகனம். அதற்காகவே அங்கு காத்திருக்கும் ஆதர வற்றோர் அந்த வேனைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு தாங்கள் எடுத்துவந்த மூலிகைக் கஞ்சியை இன்முகத்துடன் டம்ளர்களில் ஊற்றிக் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள் வேனில் வந்தவர்கள்.
ஆதரவற்றோருக்கு மாத்திரமல்ல.. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இந்த மூலிகைக் கஞ்சியை எத்தனை டம்ளர்கள் வேண்டுமானாலும் தருகிறார்கள். தினமும் காலை 10 மணி வரை நடக்கும் இந்த விநியோகத்தில் ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மூலிகைக் கஞ்சியை வழங்கிச் செல்கிறது இந்தக் குழு.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, திருமங்கலம் அரசு மருத்துவமனை, திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, அவனியாபுரம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் எளிய நோயாளிகளுக்கும் இந்த மூலிகைக் கஞ்சியை வழங்குகிறார்கள். அதுபோல், மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் நிரந்தரமாக தங்கியிருக்கும் ஆதவரவற்றோருக்கும் இவர்கள் தரும் கஞ்சி தான் காலை உணவு!
அது சரி, யார் இவர்கள்.. ஏன் மூலிகைக் கஞ்சி கொடுக்கிறார்கள்.. ஏதாவது வேண்டுதலா? மீனாட்சியம்மன் கோயில் வடக்கு வாசலில்டம்ளரில் கஞ்சி ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த பிரபாகரன் நமது சந்தேகத்தை தெளிவுபடுத்தினார். “நாங்க திருச்சி மாவட்டம் துறையூர்ல இருக்கிற அகத்திய சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள். பசி என்று வந்தவருக்கு புசிக்கக் கொடுப்பதுதான் இறைவனுக்குச் செய்யும் உண்மையான தொண்டு. அத்தகைய சேவையைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக் கிறோம்.
இலவசமாக தருகிறோம் என்பதற்காக இந்தக் கஞ்சியை ஏனோ தானோ என்று தயாரிப்பதில்லை. பெருஞ்சீரகம், மிளகு, பூண்டு, கொத்தமல்லி, புதினா, இஞ்சி, திப்பிலி, சின்ன வெங்காயம், பச்சரிசி குருணை இத்தனையும் போட்டு பிரத்தியேகமாகதயாரிக்கிறோம். அந்தக் காலத்தில் சித்தர்கள் பருகிய இந்தக் கஞ்சிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அவர்களின் நாமத்தை சொல்லித்தான் இந்தக் கஞ்சி தானத்தைச் செய்கி றோம்.
மதுரை மாவட்டத்தில் மட்டும் இப்படி 6 இடங்களில் தினமும் சுமார் மூவாயிரம் பேருக்கு கஞ்சி ஊற்றுகிறோம். காலையில் கஞ்சி தானம் செய்வோம். மாலையில் அடுத்த நாள் கஞ்சி தானத்துக்காக நன்கொடை வசூலிக்க ஊர் ஊராய் போவோம். பொதுமக்கள் விருப்பப்பட்டுக் கொடுக்கும் சிறு சிறு நன் கொடைகளைக் கொண்டு, தடையில்லாமல் இந்த கஞ்சி தானத்தை நாங்கள் வழங்கி வருகிறோம். இப்படி, தமிழகம் முழுவதும் எங்களது தொண்டர்கள் 165 இடங்களில் தினமும் ஏழைகளுக்கு மூலிகைக் கஞ்சி வழங்கி வருகிறார்கள்” என்று சொன்னார் பிரபாகரன்.
படம்: எஸ்.ஜேம்ஸ்