இ
ந்தியாவில், கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆட்சி செய்த பேரரசு சோழப் பேரரசு. அத்தனை புகழ்பெற்ற சோழர்களின் முழுமையான வரலாற்றை தமிழில் முதன் முதலில் எழுதியவர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார். ஒரு காலத்தில், வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கு மானசீக குருவாக இருந்த இவர், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வரலாற்று ஆய்வு மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறார்.
கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கம் - மீனாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாக (15-08-1892) பிறந்தவர் சதாசிவ பண்டாரத்தார். ஆரம்பக் கல்வியை சொந்த ஊரிலும் உயர் கல்வியை கும்பகோணத்திலும் முடித்த இவர், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணிய பிள்ளை ஆகியோரிடம் முறையாக தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றவர். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கொடுத்த ஊக்கமே பண்டாரத்தாருக்கு பண்டைக் கால கல்வெட்டுகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதுவே தமிழில் பிற்காக சோழர்களின் வரலாற்றை எழுதுவதற்கான தெம்பையும் இவருக்குத் தந்தது.
கி.பி 880-ல், திருப்புறம்பியத்தில்தான் பல்லவர், சோழர், கங்கரர் படைகள் கூட்டுச் சேர்ந்து வரகுண பாண்டியனின் படைகளை தோற்கடித்தன. அதன்பிறகு, சோழப் பேரரசு மீண்டும் எழுச்சி கண்டது. சோழர் வரலாறை எழுத பண்டாரத்தாருக்கு ஆர்வம் வர தனது ஊரில் நடந்த இந்நிகழ்வும் ஒரு முக்கியக் காரணம். முன்பு, சோழர் சரித்திரம் பேசிய நூல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. அதில் சிலவற்றில் தகவல்கள் மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் இருந்தன. அப்படியில்லாமல், சோழர்கள் வரலாற்றை தமிழில் முழுமையாக எழுத முடிவெடுத்து தகவல்களைத் திரட்டினார் பண்டாரத்தார்.
அந்தக் தரவுகளைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழனின் வரலாற்றை 1930-ல் முழுமையாக எழுதி முடித்தார். பெரும் பாராட்டுக்களை குவித்த இந்த நூல், அப்போதே சென்னை பல்கலைக் கழகத்தில் இன்டர்மீடியட் மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்தும் நிறைய நூல்களை எழுதினார் பண்டாரத்தார். இவரது திறமைகளை அறிந்த ராஜா சர் அண்ணாமலை செட்டியார், 1942-ல் இவரை தமது சிதம்பரம் அண் ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் விரிவுரையாளராக நியமித்தார்.
1960 வரை இங்கு பணியாற்றிய காலகட்டத்தில் கல்வெட்டுகள், செப்பேடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பண்டாரத்தார், அப்போதுதான் முழுமையான சோழர் சரித்திரம் குறித்த ஆய்வையும் முறைப்படி தொடங்கினார். இதற்காக, சோழர் காலத்தைச் சேர்ந்த சுமார் 8,000 கல்வெட்டுகளை ஊர் ஊராய் தேடிச் சென்று படித்தார். அந்தத் தகவல்களின் அடிப்படையில், சோழர் சரித்திரத்தை தமிழில் எழுதி முடித்தார். மூன்று பாகங்களாக எழுதப்பட்ட இந்நூலை 1949-ல், அண்ணாமலைப் பல்கலைக் கழகமே வெளியிட்டது.
சோழர் வரலாறு குறித்து ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு ஆதாரமாக இதுவரைக்கும் தமிழில் இருப்பது சதாசிவ பண்டாரத்தாரின் நூலும் அவருக்குப் பிறகு கே.கே.பிள்ளை எழுதிய நூலும்தான். ஆனால், “இப்போதுள்ள வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கு சதாசிவ பண்டாரத்தாரைப் பற்றியோ அவர் எழுதிய ‘பிற்காலச் சோழர் வரலாறு’ நூல் பற்றியோ அவ்வளவாய் தெரியவில்லையே” என்று ஆதங்கப்படுகிறார் சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன்.
இதுகுறித்து இன்னும் பேசிய அவர், “நான் வரலாற்றுத் துறை பேராசிரியராக வர சதாசிவ பண்டாரத்தாரின் நூல்களும் முக்கியக் காரணம். அவர் எழுதிய ‘பிற்காலச் சோழர் வரலாறு’ நூலை இதுவரை 150-க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கும் ஆர்வலர் களுக்கும் வாங்கித் தந்திருக்கிறேன்.
நீலகண்ட சாஸ்திரிகள் ஆங்கிலத்தில் எழுதிய, சோழர் வரலாறு சொல்லும் ‘சோழாஸ்’ எனும் நூலில், ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகலான் கொலைசெய்யப்பட்ட விதத்தை தனது ஆராய்ச்சி பாணியில் சொல்லியிருப்பார். சதாசிவ பண்டாரத்தார் தனது நூலில், ஆதித்த கரிகாலன் எதற்காக யாரால் கொல்லப்பட்டான் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார். இதற்கு, காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள உடையார்குடியில் இருக்கும் அனந்தீஸ்வரர் கோயிலில் ராஜராஜ சோழனால் வைக்கப்பட்ட கல்வெட்டை ஆதாரமாகக் காட்டியிருப்பார். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தகுந்த ஆதாரத்துடன் அவர் விளக்கியிருப்பதால் அவரது கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
சதாசிவ பண்டாரத்தார் காலத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் கல்வெட்டுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போது தமிழில் மட்டுமே சுமார் 24 ஆயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைக் கொண்டு, சோழர் வரலாறை நாம் புதுப்பித்து எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால், துரதிருஷ்டம் என்ன வென்றால், தமிழகத்திலுள்ள ஒரு சில பல்கலைக் கழகங்களில் முதுகலை படிப்பில் சோழர் வரலாறு பாடத்தையே நீக்கிவிட்டார்கள்.
இன்னும் சில பல்கலைக் கழகங்களில் பண்டைய வரலாற்றைச் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லை. அவர்கள் நவீன வரலாறுக்கு மாறி விட்டார்கள். இப்போதுள்ள மாணவர்களும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளைப் படித்து சீக்கிரம் பொருளீட்டத்தான் நினைக்கிறார்கள். அதனால், வரலாற்று ஆய்வு மீதான ஆர்வம் அவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது.
பாரதப் பிரதமர் மோடி ராஜேந்திர சோழனையும் அவனது படைகளையும் பற்றி பெருமையாகப் பேசுகிறார். ஆனால், சோழர்களின் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான நாம் மெல்ல அதை மறந்து வருகிறோம். மிகமோசமான இந்த நிலை மாறவேண்டுமானால், சதாசிவ பண்டாரத்தார் பெயரில் தமிழக அரசே அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கு ‘ஸ்காலர்ஷிப்’ வழங்கி, வரலாற்றை மீட்டெடுக்க வழிசெய்ய வேண்டும்.
திருப்புறம்பியத்தில் சதாசிவ பண்டாரத்தார் வசித்த வீடு இப்போது தனியார் வசம் உள்ளது. அதை அரசே விலைக்கு வாங்கி, ஒரு அருங்காட்சியமாக மாற்றவேண்டும். ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் அங்கு, சோழப் பேரரசு குறித்த நூல்கள், கல்வெட்டுகள், சுவடிகள் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் தொகுத்து வைக்க வேண்டும்” என்று சொன்னார்.