வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் அநேகம் பேர் பிச்சை எடுக்கிறார்கள். ஆனால், பிச்சை எடுத்தே சிலர் தங்களை வளப்படுத்திக் கொள்வதும் உண்டு. என்றாலும், இவர்கள் யாருமே பிச்சை எடுப்பதை அவமானமாக கருதுவதில்லை. இது அவமானம்.. உழைத்துச் சாப்பிடுவதுதான் உன்னதம் என்பதை பிச்சைக்காரர்களுக்கு உணர்த்தி அவர்களை மனம்மாற்றி வருகிறார் கங்காதரன்.
சுகாதார ஆய்வாளர்
கோவை வடவள்ளியை சேர்ந்த கங்காதரனுக்கு இப்போது வயது 67. கோவை மாநகராட்சியில் 37 ஆண்டுகள் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது, ‘மலரும் விழிகள்’ அமைப்பை நடத்தி வரும் இவர், ஆர்.எஸ்.புரத்தில் செயல்படும் ஆதரவற்றோருக்கான இரவு தங்கும் மையத்தை நிர்வகித்து வருகிறார். இவர் ஏன் பிச்சைக்காரர்களை மனம் திருத்தப் போனார்? அதுகுறித்து கங்காதரனே சொல்கிறார்.
“2009-ல், செம்மொழி மாநாடு நடந்த சமயம் கோவையில் பிச்சைக்காரர்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் சில நடவடிக்கைகள் எடுத்தார்கள். அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த அன்சுல் மிஸ்ரா தான் பிச்சைக்காரர்களை இரவில் தங்கவைப்பதற்காக இந்த இடத்தைத் தேர்வு செய்து, அவர்களுக்கு உணவு, உடை அளிக்கவும் ஏற்பாடு செய்தார். அதுமுதல், பகலில் ஆங்காங்கே சுற்றித் திரியும் பிச்சைக்காரர்களும் ஆதரவற்றோரும் இரவில் இங்கு வந்து தங்க ஆரம்பித்தார்கள். அவர்களை கண்காணிக்கும் பொறுப்பு இப்பகுதி சுகாதார ஆய்வாளராக இருந்த என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடக்கத்தில் பத்திலிருந்து இருபது பேர் வரைதான் இங்கே தங்கினார்கள். இந்த நிலையில், 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் யாரும் பொது இடங்களிலோ சாலைகளிலோ தங்கக்கூடாது என 2010-ல், உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது.
அதைத் தொடர்ந்து, கோவை பகுதியில் சுற்றித் திரிந்த இன்னும் கூடுதலான பிச்சைக்காரர்களையும் ஆதரவற்றோரையும் பிடித்துக் கொண்டு வந்து இந்த மையத்தில் விட்டுவிட்டது போலீஸ். இதனால், இரவில் இங்கு தங்குவோரின் எண்ணிக்கை 100 பேரைத் தாண்டியது.
2011-ல், நான் ஓய்வுபெற்ற போது இந்த மையத்தைக் கவனித்துக் கொள்ள சரியான ஆள் இல்லை. சுனாமி மீட்பு பணிகள் உள்பட ஏற்கெனவே நான் செய்துள்ள சமூக சேவைகளைக் கருத்தில்கொண்டு, ஓய்வுக்குப் பிறகும் மூன்றாண்டுகளுக்கு இந்த மையத்தை நானே கவனித்துக் கொள்ள ஆணை வழங்கியது மாநகராட்சி. இதற்காக எனக்கு ஊதியம் ஏதும் தரப்படவில்லை என்றாலும் மனமுவந்து இந்தப் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். வெளியிலிருந்து அன்பர்கள் தரும் உதவிகளைக் கொண்டு இங்கிருப்பவர்களைக் கவனித்துக் கொண்டேன்.
மலரும் விழிகள்
ஒரு கட்டத்தில், எனது சேவைக்கு பாதுகாப்பும் அங்கீகாரமும் அளிக்க நினைத்த மாநகராட்சி அதிகாரிகள், ‘தனி நபராக இந்த உதவிகளைச் செய்யாமல் ஒரு அமைப்பின் மூலமாகச் செய்யுங்கள்’ என்றார்கள். அப்படித்தான் ‘மலரும் விழிகள்’ அமைப்பு பிறந்தது. இந்த அமைப்பு வந்த பிறகு, இங்கு தங்கும் ஒவொருவருக்கும் மாநகராட்சி தரப்பில் சொற்பமான நிதி ஒதுக்கி உதவினார்கள். அதைக் கொண்டு துப்புரவு, சமையல் பணிகளுக்கும் இங்கிருக்கிறவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கவும் ஆட்களை நியமித்துக் கொண்டோம்” என்றவர், பிச்சைக்காரர்களை நல்வழிப்படுத்தும் கதைக்கு வந்தார்.
“இப்போது, இந்த மையத்தில் 86 பேர் இருக்கிறார்கள். ஊர், பேர் சொல்லத் தெரியாதவர்களும் வருடக் கணக்கில் இங்கே இருக்கிறார்கள். இவர்கள் செய்தித்தாள் வாசிக்கவும், தொலைக்காட்சி பார்க்கவும் இங்கே வசதி இருக்கு. போலீஸால் கொண்டுவந்து விடப்பட்ட இவர்களில் பெரும்பகுதியினர் பிச்சைக்காரர்களாகவே உள்ளனர். நல்ல திடகாத்திரமாக இருந்தும் இவர்களில் பலர் உழைக்க மனமில்லாமல் பிச்சை எடுக்கிறார்கள். அந்த மனநிலையிலிருந்து மீட்டு இவர்களை நல்வழிப்படுத்துவதுதான் இப்போது என்னுடைய முக்கியமான வேலை.
120 பேர் ஓடிவிட்டார்கள்
இதற்காக அவர்களுக்குத் தேவையான கவுன்சலிங்கை படிப்படியாகக் கொடுக்க ஆரம்பித்தோம். பிச்சை எடுப்பது அவமானம் என்பதை அவர்களுக்கு மெல்ல புரிய வைத்தோம். அத்துடன், ‘இனி பிச்சை எடுக்க மாட்டோம்.. இனி உழைத்துச் சாப்பிடுவோம்’ என அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தோம். இதையெல்லாம் கேட்டுவிட்டு, இங்கிருந்த வெளி மாநிலத்தவர்களில் 120 பேர் வெளியூருக்கே ஓடிவிட்டார்கள். அவர்களுக்கு திருந்த மனமில்லை. ஆனால், உள்ளூர்வாசிகளில் பெரும் பாலானவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழிப்படி நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி, எங்களது முயற்சியால் இதுவரை 400 பேரையாவது மனம் திருந்த வைத்திருப்போம். இதுவே எங்களது சேவைக்குக் கிடைத்த மரியாதைதான்” என்று சொன்னார்.
இவரது சேவையைக் கேள்விப்பட்டு திருப்பூர், கரூர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தெல்லாம் ஆதரவற்றோரையும் பிச்சைக்காரர்களையும் இங்கு கொண்டு வந்து விடுகிறதாம் போலீஸ். அவர்களையும் மறுக்காமல் அரவணைத்துக்கொண்டு மனம் மாற்றும் முயற்சிகளைத் தொடர்கிறார் கங்காதரன்.
மனம் திருந்தியவர்கள்..
விபத்தில் கால்கள் முடமான ஒருவர் ஆர்.எஸ்.புரத்தில் வங்கி ஒன்றின் எதிரே பிச்சையெடுத்தார். இவருக்கு சொந்த வீடு, குடும்பம் எல்லாம் இருக்கிறது. முறுக்கு வியாபாரம் செய்த இவர், விபத்துக் காப்பீடாக கிடைத்த ரூபாய் 4 லட்சத்தையும் வங்கியில் சேமித்து வைத்திருக்கிறார். கங்காதரன் குழு கொடுத்த கவுன்சலிங்கிற்கு பிறகு பிச்சை எடுப்பதை மறந்து வீட்டு வாடகையை மட்டும் வைத்துப் பிழைத்து வருகிறாரம் இவர்.
இதேபோல், ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகம் எதிரே பிச்சையெடுத்த ஒரு மூதாட்டி, வீட்டில் உணவு, உடை கொடுத்தாலும் வெளியில் வந்து பிச்சை எடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருந்தார். அவருக்கும் ஒரு மாதம் கவுன்சலிங் கொடுத்திருக்கிறார்கள். அவரும் இப்போது கடந்த நான்கு மாதங்களாக தனது மகள் வீட்டிலேயே இருக்கிறார். கோவை சாய் பாபா கோயில் முன்பு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணியையும் மனம் திருத்தி அவரது மகளிடம் ஒப்படைத்திருக்கிறார் கங்காதரன்.