கு
ற்றங்களில் துப்புத்துலங்க காவல் துறையில் மோப்ப நாய்களை பயன்படுத்துவது போல் முதல் முறையாக தமிழக வனத்துறைக்கும் இப்போது மோப்ப நாய்கள் வந்துவிட்டன.
வனக் குற்றங்களை துப்புத் துலக்குவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 16 நாய்களுக்கு மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள தேசிய நாய்கள் பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. மோப்ப சக்தி அதிகம் உள்ள இந்த பெல்ஜியம் ஷெப்பர்டு நாய்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் பயிற் சிகளை அளித்தனர்.
அதில் மூன்று நாய்கள் இப்போது தமிழக வனத்துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளன. தமிழக வனத்துறையில் மோப்ப நாய்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள். அதன்படி, முதுமலை, ஆனைமலை, களக்காடு முண்டந்துறை ஆகிய 3 புலிகள் காப்பகங்களில் இப்போது இந்த மோப்ப நாய்கள் தங்களது பணியைத் தொடங்கியுள்ளன. இதில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்துக்கு வந்திருக்கும் மோப்ப நாயின் பெயர் ‘ஆஃபர்’.
வனத்துறை பணிக்கு வந்திருக்கும் ஆஃபர், வனப் பொருள்கள் கடத்தல், வனவிலங்குகள் வேட்டை இவைகளைத் துப்பறிவதுடன், பூமிக்கடியில் புதைத்து வைக்கப்படும் எந்தப் பொருளையும் எளிதில் கண்டு பிடித்துவிடும் அளவுக்கு பயிற்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு உதகையின் கூடலூர் பகுதியில் ஆட்கொல்லி புலி ஒன்று சுற்றித் திரிந்தது. அதைக் கண்டுபிடிக்கும் பணிக்காக கர்நாடகத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திலிருந்து ‘ராணா’ என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது வந்த வேகத்தில் புலியின் இருப்பிடத்தைக் அதுகாட்டிக் கொடுத்தது.
அப்போதே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற பணிகளுக்கும், வனக் குற்றங்களை துப்புத் துலக்கவும் மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். அதன்படியே தற்போது முதுமலைக்கு வந்திருக்கிறது ஆஃபர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி, “முதுமலையில் உள்ள 5 வனச் சரகங்களில் இந்த ஆஃபர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். இதைக் கொண்டு, இனி வனக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எளிதில் அடையாளம் காணப்படுவார்கள்” என்றார்.
ஆஃபரை பராமரிக்கும் காவலர் பி.வடிவேலன், “ஆந்திராவில் வாங்கப்பட்ட இந்த ஆஃபர் பிறந்து 21 மாதங்கள் ஆகிறது. இது ரொம்பச் சுறுசுறுப்பான நாய். குவாலியரில் காலையும் மாலையும் எட்டு மணி நேரம் கடுமையாக பயிற்சி அளிக்கப்பட்டு இங்கே களப் பணிக்கு வந்திருக்கு” என்றார்.
அண்மையில் உதகையில் பந்தலூர் அருகே, இறந்து கிடந்த யானையிலிருந்து தந்தங்கள் திருடப்பட்டன. அவை எங்கே பதுக்கிவைக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடிக்கும் முதல் ஆஃபர் இப்போது மோப்ப நாய் ஆஃபருக்கு வந்திருக்கிறது.