ரிப்போர்ட்டர் பக்கம்

யானைகளின் வருகை 107: தங்கச்சுரங்க தகிடுதத்தங்கள்

கா.சு.வேலாயுதன்

''இந்த ஜீன்புல் மையம் அமைந்திருக்கும் பகுதி ரொம்ப பாதுகாப்பானது. அதனால் யானைகள் இங்கேதான் வந்து குட்டி போடும். கோடையில் காடுகளில் மூங்கில்கள் பெரும்பாலும் காய்ந்து போனால் கூட அவை உணவு தண்ணீர் தேடி இங்கேதான் வரும். அந்த அளவுக்கு எப்போதும் வளம் கொஞ்சும் பகுதி இது. இப்போது கூடலூர் காடுகளில் 80 சதவீதம் (2010-மார்ச்) மூங்கில்கள் பூத்துவிட்டன. இவை எந்த வகையிலும் யானைகளுக்கு உணவாகாது. இதேபோல் மூன்றாண்டுகளுக்கு முன்பு இங்குள்ள பிதிர்காடு, சேரம்பாடி பகுதிகளில் பூத்த மூங்கில்களை தமிழ்நாடு பேப்பர் மில்லுக்கு வனத்துறை ஏலம் விட்டது. அதில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இரண்டாண்டு காலம் வெட்டப்படாமலே இருந்த அந்த மூங்கில்கள் கடந்த ஆண்டுதான் வெட்டப்பட்டன.

மூங்கில்கள் பூத்து அழியப்போவதை மனதில் கொண்டு அதற்கு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு இணையாக மூங்கில்களை வனத்துறையினர் நட்டிருக்க வேண்டும். அப்போதுதான் யானைகளுக்கான உணவுச் சமநிலை பாதுகாக்கப்படும். ஆனால் வனத்துறையினர் அதை செய்யத் தவறியதால் யானைகள் இப்போது உணவு கிடைக்காமல் இந்த ஜீன்புல் மையத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன. இங்கும் தீ விபத்து ஏற்பட்டு புற்கள் கருகி விட்டதால் ஊருக்குள் புக ஆரம்பித்தும் விட்டது யானைகள். எனவே இனியாவது வனவியல் மையத்திற்குள் உள்ள கண்காணிப்புக் கோபுரங்களில் ஆட்களை அமர்த்தி, தீயை கண்காணித்துத் தடுக்க வேண்டும். மையத்திற்குள் தீத்தடுப்புக் கோடுகளைப் போட வேண்டும்!'' என வேண்டுகோள் வைத்தனர்.

இந்த விவகாரத்தில் விஷமிகள் சிலர்தான் ஜீன்புல் காடுகளில் தீ வைத்திருப்பார்கள் என்பதை வனத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டு விசாரிக்கவும் செய்தனர். ஆனால் அப்போதைக்கு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் விளைவு ஓராண்டு விட்டு, அடுத்த ஆண்டு (2012) கோடையில் இதே ஜீன்புல் தாவரவியல் வன ஆராய்ச்சி மையத்தில் திரும்பவும் வனத்தீ ஏற்பட்டது. இந்த முறை தீ பிடித்தபோது மூன்று நாட்கள் அதை அணைக்கப் போராடி இருக்கிறார்கள்.

இதில் வன ஊழியர்கள், ஆய்வு மையங்கள், அங்கிருக்கும் மரங்களுக்கு பெருத்த சேதம் இல்லை என்றாலும் நீலகிரி வனக்கோட்டத்தில் வரும் சீகூர், சிங்காரா, பெக்காபுரம் பகுதிகளில் உள்ள வனங்களில் உள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்துவிட்டன. இந்த தீயால் ஆயிரக்கணக்கான மரங்களும், செடி, கொடிகளும் சாம்பலாகின. குரங்குகள், நாய்கள், முயல்கள் உள்ளிட்ட சில விலங்குகளும் இறந்து விட்டன. இங்கு தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில்தான் முதுமலையிலும், அதன் இருதயப் பகுதியான தெப்பக்காட்டிலும் பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது.

கோடை காலங்களில் முதுமலையை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை. அதிலும் அடர்ந்த காடுகள் நிறைந்த சரணாலயப் பகுதிகளுக்குள் அந்நியர்கள் யாரும் பிரவேசிக்கக் கூடாது. இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சிறிதளவே தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதை உடனே அணைத்து இதற்குக் காரணமான சுரேஷ், கணேஷ் என்ற இருவரை கைது செய்துள்ளனர் வனத்துறையினர். கேரளா மாநிலம் முத்தங்கா பகுதியைச் சேர்ந்த இவர்கள் காட்டுக்குள் வனப்பொருட்கள் சேகரம் செய்திருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த ஒற்றை யானை இவர்களை துரத்தியதாகவும், அதனிடம் தப்பிக்க வனத்தில் தீ வைத்ததாகவும் வனத்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால் இயற்கை ஆர்வலர்களோ, ''சரணாலயத்தில் சிறிய அளவுதான் தீ ஏற்பட்டதாக வனத்துறையினர் சொல்வது சுத்தப்பொய். இந்த சம்பவத்தின் போது தொடர்ந்து நான்கு நாட்கள் சரணாலயத்திற்குள் மட்டும் 40 முதல் 50 இடங்களில் தீப்பற்றி எரிந்திருக்கிறது. 50 சதவீதம் சரணாலயப்பகுதிகள் தீயால் கருகியிருக்கின்றன.

தமிழகத்திற்குள் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த வேட்டைக் கும்பல்கள் அதிகமாக மரங்களை வெட்டிக் கடத்துகிறார்கள். காட்டு மாடு, புள்ளி மான், கடமான் மட்டமல்லாது யானைகளையும் வேட்டையாடுகிறார்கள். இத்தகைய சமூக விரோத செயல்களை செய்ய இவர்கள் கோடைகாலத்தைத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். முதுமலைக் காட்டில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதற்கு இந்த கும்பல்தான் காரணம். வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் போது அவற்றை அணைப்பதற்கும் பெரிய அளவு வசதிகள் நம் வனத்துறையினரிடம் இல்லை. இப்படியே போனால் நீலகிரி காடுகள் அழிந்து பொட்டல் வெளியாகவே மாறிவிடும்!'' என்று எச்சரித்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து அப்போதைய முதுமலை வனச்சரணாலய துணை இயக்குநர் அமீர்ஹாசா பேசும்போது, ''ஒவ்வொரு வருடமும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஏதாவது ஒரு சமயம் கோடை மழை பெய்து வனங்களின் வறட்சியை கொஞ்சம் குளிர வைக்கும். இந்த முறை நீலகிரி பகுதிகளில் டிசம்பர் முதலே துளி மழையில்லை. இலையுதிர் காடுகளில் இலை தழைகள் நிறைய உதிர்ந்து கடும் வறட்சியும் நீடிக்கிறது. எனவேதான் கடந்த காலங்களை விட கூடுதலாக வனத்தீ ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மரங்களுக்கு பெரிய அளவில் சேதமில்லை.

நம் சரணாலயப்பகுதிக்கு அருகாமையில் கேரளா, கர்நாடக வனப்பகுதிகள் இருப்பதால். அங்கு தீ வைப்பவர்களை கண்டுபிடிக்க பல்வேறு இடங்களில் தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். வெளி மாநில நபர்கள் கைது செய்யும்போது அண்டை மாநில அரசிடம் அனுமதி பெற்றுதான் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டியிருக்கிறது. அப்படித்தான் இப்போதைய சம்பவத்திலும் இரண்டு பேரை கைது செய்தோம். இன்னமும் ஐந்து பேர் கேமராவில் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கைக்கு கேரள அரசின் அனுமதியைக் கேட்டுள்ளோம்!'' என்றார்.

இப்போதும் இந்த வனத்தீ முதுமலை காடுகளுக்குள்ளும், ஜீன்புல் மையத்திற்குள்ளும் ஒரு வருடம் தவறினாலும் மறு வருடம் ஏற்பட்டபடிதான் இருக்கிறது. அந்த தீயை சமூக விரோதிகள் வைத்தார்களா? நிதி ஒதுக்கீட்டிற்காக வனத்துறையினரே வைத்தனரா? என்ற சர்ச்சைகளும் அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம்தான் இருக்கிறது.

என்றாலும் ஒரு விஷயம். ஜீன்புல் மையத்தைச் சுற்றிலும் பெரிய அகழிகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன. கோடையில் காட்டுத் தீ ஏற்பட்டாலும் கூட அதைத் தாண்டி ஜீன்புல் மையத்திற்குள் தீ ஜூவாலை எட்டிப் பார்ப்பதில்லை. அந்த அகழியை தாண்டி யானைகளும் வர முடிவதில்லை. எனவே அங்கே மூங்கில் தேடி வந்த யானைகள், தண்ணீர் தேடி வந்த யானைகள், குட்டி போட வந்த யானைகள் அக்கம்பக்கம் உள்ள ஊருக்குள் நுழைவதையும் வழக்கமாக வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள் சுற்றுவட்டார மக்கள்.

வனவிலங்குகள் சரணாலயத்தை பாழ்படுத்திய பல்வேறு விஷயங்களைப் பார்க்கும்போது, உலக மக்களின் பொருளாதாரத்தையே காலம், காலமாக தகதகக்க வைக்கும் இங்கே தங்கம் ஏற்படுத்தின பாதிப்பைப் பற்றி பேசாமல் இருந்தால் எப்படி?

தங்கம் என்றால் தங்கம் அல்ல, தங்கச்சுரங்கம். காட்டுத்தீ உருவாக காரணிகளில் ஒன்றாக சென்ற அத்தியாயத்தில் 'இங்குள்ள பொன்னூர், தேவாலா பகுதிகளில் தங்கத் தாது வெட்டி எடுக்கின்றனர் சிலர். அவர்களை வனத்துறையினர் தடுக்கின்றனர் அந்த ஆத்திரத்தில் அவர்கள் வனத்திற்குள் மூட்டி விட்ட தீ இது!' என்ற காரணியை சுட்டிக் காட்டியிருந்தோம். தங்கச்சுரங்கத்தால் அது மட்டுமா நடந்தது? இன்னமும் நிறைய நடந்தது.

1831-ல் ஆங்கிலேயேர் காலத்தில், லண்டனைச் சேர்ந்த ஹூகேனின் என்பவர், மலபார் பகுதியை ஒட்டிய, பந்தலூர் கிளன்ராக் பகுதியில் தங்கப் படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். அதையடுத்து 'ஆல்பாகோல்டு மைனிங் கம்பெனி'யினர், தேவாலா பகுதியை ஒட்டி, 2 சதுர கிலோமீட்டர் சுற்றளவில், சுரங்கப் பாதைகள் அமைத்தனர்.

தொடர்ந்து, 1879ல் 'லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டிங்' நிறுவனத்தினர், அப்பகுதியில், சுரங்கம் தோண்டி, தங்கம் எடுத்தனர். இதில் வரவை விட செலவு அதிகம் என்பதால் அதில் தங்கம் எடுக்கும் பணியை நிறுத்திவிட்டு சொந்தநாட்டிற்குச் சென்றுவிட்டது ஆங்கிலக் கம்பெனிகள். என்றாலும் சுற்றுப்பகுதி மக்களின் தங்க மோகம் ஓயவில்லை. தமிழகப் பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது, தற்போதைய கேரள, கர்நாடகா மாநிலங்களில் இருந்தெல்லாம் மக்கள் சுரங்கங்கள் நோக்கி புறப்பட்டனர்.

இந்த தொழிலைச் செய்து வந்தவர்கள் அடிமட்டக் கூலித்தொழிலாளர்கள் என்பதால் அதை அரசு அதிகாரிகளும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. இப்படியிருக்க கூடலூரிலிருந்து பந்தலூர் செல்லும் சாலையில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதவாக்கில் இங்குள்ள அதிகாரி ஒருவரே தங்கச்சுரங்கம் தோண்டி தங்கம் எடுக்கும் பணியி்ல ஈடுபட்டதாக சர்ச்சைகள் புறப்பட்டன.

இந்த விவகாரம் வெளியானதே ஒரு சுவாரஸ்யப் பிரச்சினையை முன்னிட்டுதான். தாயகம் திரும்பிய இலங்கை மலையகத் தமிழர்களுக்காக 1978-ம் ஆண்டு தமிழக அரசு அமைத்த பண்ணை இது. ஆரம்பத்தில் நெல், காய்கறி, அன்னாசி, மிளகு, கிராம்பு, பழச்செடி நாற்றாங்கால்கள் இங்கே உருவாக்கப்பட்டு வந்தன. 50 ஏக்கரில் தேயிலை விவசாயமும் நடந்து வந்தது. அப்போது 52 தொழிலாளர்கள் இங்கு பணியாற்ற வந்த நிலையில் இங்குள்ள மேலாளர் மீதே தங்கச்சுரங்கப் புகார் கிளம்பியது. இந்த மேலாளர் மீது ஏற்கெனவே பல புகார்களை இங்குள்ள தொழிலாளர்கள் கிளப்பி வந்திருக்கின்றனர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

SCROLL FOR NEXT