த
மிழகத்தின் பழம் பெருமைக்கும் கலாச்சாரத்துக்கும் எத்தனையோ அடையாளங்கள்.. அவற்றில் மிக முக்கியமானது வானுயர்ந்த கோபுரங்களுடன் அமைந்துள்ள திருக்கோயில்கள். அதனால்தான் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையில்கூட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும் பகுதியினர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களைக் காண்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இங்குள்ள கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, கலை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடையாளங்களாகவும் திகழ்கின்றன.
மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில்கள்தான் அரசு அலுவலகங்களாகவும், கலைகள் வளர்க்கும் இடங்களாகவும் இருந்தன. நீதி வழங்கும் இடம், தானியக் கிடங்கு எல்லாமே இவைதான். கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் தமிழகத்தின் வரலாற்றை பறைசாற்றுவதாக உள்ளன. மகளின் திருமணத்துக்காக கோயில் நிதியில் கடன் வாங்கி செலவழித்துள்ளனர். இதுபற்றிய செய்தி கல்வெட்டில் இருப்பது கோயில்கள் எவ்வாறு மக்களுக்காக இயங்கின என்பதை நமக்கு காட்டுகிறது.
கோயில்களைக் கட்டிய மன்னர்கள், அது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதற்காக நிலங்களை தானமாக வழங்கினர். கோயில் நிர்வாகம் செம்மையாக நடக்க வேண்டும் என்பதில் மன்னர்கள் மிகவும் அக்கறை காட்டினார்கள். கோயில் நிர்வாகிகள் ஸ்ரீகாரியம் என அழைக்கப்பட்டனர்.
தமிழக கோயில்களின் நகைகள், நிலங்கள், சிலைகள் உள்ளிட்ட சொத்துகளைத் தனி நபர்கள்தான் நிர்வாகம் செய்து வந்தனர். இதில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து 1927-ல் ஆங்கிலேய அரசு, இந்து சமய அறநிலைய வாரியம் என்ற கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகும் ஜமீன்தார்கள் உள்ளிட்ட செல்வாக்கு மிக்கவர்களால் கோயில் சொத்துகளும், சிலைகளும் கடத்தப்பட்டன. நாடு விடுதலை அடைந்த பிறகு, 1951-ல் இந்து சமய அறநிலையத் துறை உருவானது. நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து 1959-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி தமிழக அரசின் அங்கமாக இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருகிறது.
17 சமணக் கோயில்கள், 1,910 அறக்கட்டளைகள், 56 திருமடங்கள், மடங்களுடன் இணைந்த 57 கோயில்கள் உட்பட 38 ஆயிரத்து 635 கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் 331 கோயில்களில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கிறது.
672 கோயில்களில் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், 3 ஆயிரத்து 550 கோயில்களில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையும் ஆண்டு வருவாய் உள்ளது. 34 ஆயிரத்து 82 கோயில்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே வருவாய் கிடைப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு தெரிவிக்கிறது.
கோயில்கள், திருமடங்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 283 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் 22,600 கட்டிடங்கள், 33,665 மனைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. மீதமுள்ள விவசாய நிலங்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 விவசாயிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.838 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கோயில்களுக்கு சொந்தமாக 2 ஆயிரத்து 359 குளங்கள், 989 மரத் தேர்கள், 57 தங்க ரதங்கள், 45 வெள்ளி ரதங்கள் உள்ளன
கடந்த 6 ஆண்டுகளில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா மாற்றம் செய்யப்பட்ட 5 ஆயிரத்து 559 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை 789 கோயில்களுக்குச் சொந்தமானவை. மீட்கப்பட்ட நிலங்கள் அந்தந்த கோயில்களின் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 2016-17-ம் ஆண்டில் மட்டும் 70 கோயில்களுக்கு சொந்தமான 1,119 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதுபோல ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஆயிரத்து 315 ஏக்கர் நிலங்கள், 468 கிரவுண்டு மனைகள், 179 கிரவுண்டு கட்டிடங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.2 ஆயிரத்து 887 கோடி. 2016-17-ம் ஆண்டில் மட்டும் 338 ஏக்கர் விளை நிலங்கள், 152 கிரவுண்டு மனைகள், 24 கிரவுண்டு கட்டிடங்கள் என ரூ.467 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
2011 முதல் 2016 வரை சுமார் 300 ஏக்கர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த 6 ஆயிரத்து 66 நபர்கள் வாடகைதாரர்களாக வரன்முறை செய்யப்பட்டுள்ளனர். இவர்களது குடியிருப்புகளுக்கு குடிநீர், மின் இணைப்பு வசதி பெற தடையில்லா சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
கோயில் நிர்வாகத்துடன், இவ்வளவு சொத்துகளையும் நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத் துறையில் ஆணையர் தலைமையில் கூடுதல், துணை மற்றும் உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் என 628 அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் தவிர ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் பல கோயில்களின் நிலை இன்றைக்கு மிகவும் பரிதாபகரமாக உள்ளது. போதிய பராமரிப்பின்மையால் பல்லாயிரம் கோயில்கள் மோசமான நிலையில் உள்ளன. தமிழகத்தின் கிராமங்களில் பயணம் செய்தால் இடிபாடுகளுடன் சிதைந்துகிடக்கும் கற்கோயில்களைக் காணலாம்.
விலை மதிக்க முடியாத ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. சிலை கடத்தல் வழக்கில் அறநிலையத் துறை, காவல் துறை அதிகாரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலிலேயே சிலைகள் திருடப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. அப்படியெனில் அறநிலையத் துறை தனது கடமையை செய்யத் தவறிவிட்டதா?
இதுதொடர்பாக, 36 ஆண்டுகள் பல்வேறு கோயில்களில் செயல் அலுவலராக பணியாற்றிய அழ.முத்துப்பழனியப்பனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
ஒட்டுமொத்தமாக அறநிலையத் துறை செயல்படவில்லை என கூறிவிட முடியாது. அறநிலையத் துறை என்ற தனி நிர்வாக அமைப்பு இல்லாவிட்டால் கோயில் சொத்துகளும், விலை மதிப்பற்ற சிலைகளும் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும். தொன்மை வாய்ந்த பல கோயில்கள் அழிந்திருக்கக்கூடும்.
ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அவற்றையெல்லாம் களைய வேண்டுமே தவிர, அறநிலையத் துறைக்கு மாற்றாக வேறு வழியை யோசிப்பது அழிவுக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சொத்துகள் அபகரிக்கப்படுவதும், சிலை கடத்தலும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது என அவரிடம் கேட்டபோது, ‘‘1983-ல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. உலோகத் திருமேனிகள், கற்சிலைகள், நகைகள், கோபுர கலசங்கள், உண்டியல் திருட்டு சம்பந்தமாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல் துறையில் உள்ள சிலர் சிலைகளை மீட்டு அதை கடத்தல்காரர்களுக்கே விற்பனை செய்ததும் நடந்துள்ளது. இந்த நிலையை மாற்ற கடும் சட்டங்கள் கொண்டுவர வேண்டும். அறநிலையத் துறை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வருவாய், சுற்றுலா, தொல்லியல், ஊரக வளர்ச்சி, வனம் மற்றும் காவல் துறைகள் முழு ஒத்துழைப்பு அளித்தால் கொள்ளை போன கோயில் சொத்துகளை எளிதில் மீட்கலாம். இனி கொள்ளை போகாமலும் தடுக்கலாம்’’ என்றார்.