ரிப்போர்ட்டர் பக்கம்

குவியும் வாழ்த்துக்கள்.. பெருகும் ஆதரவுகள்

அ.சாதிக் பாட்சா

னை வளர்ப்பில் ஆர்வம் காட்டும் பிரேம் ஆனந்த் பற்றி ‘பிரமாதம் பிரேம் ஆனந்த்’ என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ‘இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதியில் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்குப் பிறகு, இன்னும் பரபரப்பான மனிதராகி விட்டார் பிரேம்.

‘தி இந்து’ கட்டுரையைப் படித்தவர்கள் பிரேம் ஆனந்துக்கு பாராட்டுக்களைக் குவித்தது ஒருபுறமிருக்க, பனை விதை கேட்பவர்களின் அழைப்புகள் இன்னும் அவருக்கு வந்து கொண்டே இருக்கின்றன. “இந்த வருசம் கடும் வறட்சியால் போதிய அளவு பனங் காய்கள் காய்க்கவில்லை. அதனால் பனை விதை கேட்போருக்கு போதிய அளவு விதைகளை வழங்க முடியவில்லை” என கவலை மேலிட சொல்லும் பிரேம் ஆனந்த், பல்வேறு ஊர்களில் நடைபெறும் பனை விதை நடும் விழாக்களுக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று பனை விதைப்பின் முக்கியத்துவம் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கி வருகிறார்.

‘தி இந்து’வில் வெளியான கட்டுரையை படித்த, திருச்சி மாவட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் பெரியார் செல்வம், சதீஷ்குமார், அந்தோனி அவ்ரிக், செந்தில்குமார், அருண் ஆகியோர் பிரேம் ஆனந்தின் வயலுக்கே நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினர். சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி பிரேமை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார். அதன் பிறகு, கரூருக்கு வேறொரு வேலையாக வந்தவர், அப்படியே பெரம்பலூருக்கு வந்து பிரேம் ஆனந்தை நேரில் சந்தித்தும் பாராட்டி யிருக்கிறார். அப்போது, பெருமளவில் பனை விதைகளை நட்டு பனை வளர்க்கும் வாய்ப்பு ஒன்றையும் பிரேமுக்கு வழங்கிச் சென்றிருக்கிறார் துரைசாமி.

இது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு என்பதால், ஏதேனும் ஒரு பரந்த இடத்தில், ‘எம்.ஜி.ஆர் 100’ எனும் வடிவில் பனை மரங்களை வளர்க்கச் சொல்லிச் கேட்டுள்ள சைதை துரைசாமி, அதற்கான செலவு அனைத்தையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் உறுதியளித்திருக்கிறாராம். இதையடுத்து, சுமார் மூவாயிரம் பனை விதைகளைக் கொண்டு ‘எம்.ஜி.ஆர் 100’ என்ற வடிவத்தை பனை மரங்களால் உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் பிரேம் ஆனந்த், தற்போது அதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பயணத்தில் இருக்கிறார்.

இதனிடையே, சமீப நாட்களாக பனை மரம் வளர்ப்பது குறித்து மக்களிடையே அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கரூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பனை விதைப்பு நிகழ்ச்சியை திருவிழா போல் ஆர்ப்பாட்டமாக நடத்தி வருகின்றனர் இயற்கை ஆர்வலர்கள். பேனர்கள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், ஒலிபெருக்கிகள் மூலம் விளம்பரம் செய்தும் ஊர்மக்களைத் திரட்டி பனை விதைக்கும் விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழாக்களில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார் பிரேம் ஆனந்த்.

“தி இந்து செய்தியை படித்துவிட்டு நூற்றுக் கணக்கானவர்கள் போனில் அழைத்து என்னை வாழ்த்தினர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தெல்லாம் வாழ்த்திய பலர், என்னை மேலும் உற்சாகமூட்டினர். இலங்கைத் தமிழர் ஒருவர், ‘தமிழர்களின் பாரம்பரியத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையது பனை மரம். பனை வளர்ப்பை ஊக்குவிக்க உங்களைப் போன்ற இளைஞர்கள் ஒருங்கிணைந்து தமிழக அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுங்கள்’ என சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது” என்கிறார் பிரேம் ஆனந்த்.

ஆயிரக் கணக்கில் பனை விதைகளைக் கேட்டு பலரும் பிரேம் ஆனந்தை தொடர்பு கொண்டிருக் கிறார்களாம். விதை இருப்பு இல்லாததால் அடுத்த வருடம் தருவதாகச் சொல்லி இருக்கும் பிரேம் ஆனந்த், சமூக ஊடகங்கள் மூலம் பனை விதைப்பு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் செயல்படும்‘மண்ணின் மக்கள்’ எனும் அமைப்பு நீர் நிலைகளின் கரைகளிலும் சாலையோரங்களிலும் பனை மரங்களை வளர்க்கும் முயற்சியில் ஆங்காங்கே உள்ள கிராம மக்கள், சமூக நல அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணியில் பள்ளிகளின் தேசியப் பசுமைப் படையைச் சேர்ந்த சிறுவர்களையும், இதர பள்ளி மாணவர்களையும் ஈடுபடுத்தி, அடுத்த தலைமுறைக்கும் பனை வளர்ப்பின் அவசியத்தை உணர்த்தி வருகின்றனர். இதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார் பிரேம் ஆனந்த்.

SCROLL FOR NEXT