ரிப்போர்ட்டர் பக்கம்

யானைகளின் வருகை 72: சூழல் சுற்றுலா சரிதானா?

கா.சு.வேலாயுதன்

சுற்றுலா பயணம் செல்பவர்களுக்கு பரளிக்காடு சரியான தேர்வாக இருக்கும் என்பதுதான் இதுவரை அனைவரின் கருத்தாக இருக்கிறது. அதையேதான் பரளிக்காடு வந்து செல்வோரும் நீக்கமறப் பதிவு செய்கிறார்கள். இத்தனைக்கும், 'இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டோம். குப்பைகளை போட மாட்டோம். மது மற்றும் புகைபிடிக்க மாட்டோம், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம். இத்துடன் வனத்துறையினரின் மற்ற கட்டுப்பாடுகளையும் ஏற்கிறோம்!' என்ற உறுதிமொழியுடனேதான் வனத்துறையிடம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்கிறார்கள் பரளிக்காடு சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்கள். ஆனால் அது எல்லாம் எந்த இடத்திலும், வனங்களுக்கும், வனவிலங்குகளுக்கும், காடுகளில் உள்ள பல்லுயிரிகளுக்கும் கடுகளவும் பிரயோசனம் தராது என்கிறார் செல்வராஜ். எப்படி?

''இப்படித்தான் ஊட்டியிலிருந்து கூடலூர் போகும் வழியில் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூட்டிங் மட்டம் பகுதியில் நிறைய சினிமா படப்பிடிப்புகள் நடந்து வந்தது. இப்போது அதை ஒரு கேட் போட்டு வனத்துறையே ரூ. 5 ரூ. 10 என கட்டணம் வசூலித்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறார்கள். இதனால் விடுமுறை தினங்களில் இங்கே சில சமயங்களில் லட்சக்கணக்கானவர்கள் கூட வருகிறார்கள். அதேபோல் கூடலூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊசிமலையில் அடிக்கடி படப்பிடிப்புகள் நடப்பது உண்டு. அங்கிருந்து பார்த்தால் முதுமலையின் அழகிய தோற்றத்தையே தரிசிக்கலாம். இதற்கும் சுற்றிலும் வேலி போட்டு, கேட் அமைத்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்கிறார்கள். இதற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். இங்கேயும் லட்சக்கணக்கான மக்கள் வந்து போகிறார்கள்.

இங்கெல்லாம் முன்பு சாதாரணமாக சில நூறு, ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து போவார்கள். அதனால் பெரிய அளவு கடைகள், சூழல் கேடுகள் ஏற்பட்டதில்லை. எப்போது வனத்துறையினர் சுற்றுலா இடம் போல் மாற்றிக் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தார்களோ, அதற்குப் பிறகுதான் கூட்டமே பல மடங்கு பெருகி விட்டது. இந்தப் பகுதிகள் ஒரு காலத்தில் கால்நடைகள் மேய்ச்சல் நிலமாக இருந்த பகுதி. உலகிலேயே சிறப்புமிக்க புல்வெளிகள் இங்கு உள்ளது. அது அருகம்புல்தான் என்றாலும், அதுதான் நீரைவேர்களில் பிடித்து வைத்து வெளியிடக்கூடியது. அதை கால்நடைகள் சாப்பிட்டால் அதன் சாணங்கள் மூலம் அது வளர்ந்து கொண்டேயிருக்கும். அதில் நுண்ணுயிரிகள் முதல் பட்டாம்பூச்சிகள் வரை பறந்து திரியும்.

நீலகிரி பழங்குடிகளான தொதவர்கள், கோத்தர்களின் ஏரியாவாகவே இது விளங்கி வந்தது. அப்படிப்பட்ட இடத்தைத்தான் இப்போது இவர்கள் சுற்றுலா தளமாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கட்டணமும் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். இதே போல் கொடைக்கானலில் பல இடங்களும் சுற்றுலாவாசிகள் கட்டணம் கட்டிச் செல்லும் இடங்களாக மாறியிருக்கிறது. இவையெல்லாமே சூழல் சுற்றுலா என்ற பெயரில்தான் நடைபெறுகிறது. ஆனால் மக்கள் அதிகரிக்க, அதிகரிக்க, அவர்களுக்காக கடைகள் உருவாகின்றன. உணவகங்கள் வருகின்றன. வாகனங்கள் பறக்கின்றன. ஒட்டுமொத்த சூழலும் கெட்டு விடுகிறது. அப்படித்தான் பரளிக்காடு சூழல் சுற்றுலாவும் எதிர்காலத்தில் மாறுவதற்கு அபாயம் உள்ளது!'' என எச்சரிக்கிறார் செல்வராஜ்.

மேலும் அவர் கூறுகையில், ''எங்களைப் பொறுத்தவரை இதுபோன்று வனவிலங்குகள் வாழும் அடர் கானகப் பகுதியில் பழங்குடியினர் தவிர, கல்விக்கான தேவையில் வரும் மாணவர்களை தவிர்த்து, மற்றவர்களை அனுமதிக்கவே கூடாது என்பதுதான்!'' என்றும் ஆலோசனை சொல்கிறார்.

பில்லூர் அணை சுற்றுவட்டாரக் காடுகளில் இந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா மட்டுமல்ல; புதிதாக பூச்சமரத்தூர் காட்டேஜ் ஓய்வு சுற்றுலா, மூலிகைப் பண்ணை என பல விஷயங்களை வனத்துறை உருவாக்கியிருக்கிறது. இதனால் இங்கே எந்த மாதிரியான சாதக, பாதகங்கள் வரும் என்பதையும் கேள்வி எழுப்பவே செய்கிறார்கள் சூழலியலாளர்கள்.

பரளிக்காடு நீர்தேக்கப்பகுதிக்கு அப்பால் இருப்பதுதான் பூச்சமரத்துார் பழங்குடியினர் கிராமம். இந்த மலைகிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் 8 மரவீடுகள் போன்ற பச்சை பசேல் வண்ணத்தில் காட்டேஜ்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வீடுகள் 15 அடி உயரத்தில் கான்கிரீட் தூண்கள் எழுப்பி அதற்கு மேல் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு காட்டேஜில் 8 பேர் வீதம் 3 காட்டேஜூக்கு 24 பேர் தங்கலாம்.

காலை 10.30 மணிக்கு நாம் அறைக்குள் நுழைந்தால் சுடச்சுட காய்கறி சூப் பரிமாறப்படுகிறது. தொடர்ந்து 4 வனவர்கள், 8 வேட்டைத்தடுப்புக் காவலர்கள் அடங்கிய குழுவினர் அனைவரையும் மலைப் பயணம் அழைத்துச் செல்கிறார்கள். இது பில்லூர் அணையின் பின்புறத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருப்பதால் காட்டு யானைகள், மான்கள், காட்டு எருமைகள் என ஏராளமான வனவிலங்குகளையும், விதவிதமான பறவைகளையும் காண முடிகிறது. சில நேரங்களில் சிறுத்தைகளையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. அதிர்ஷ்டம் இருந்தால் புலி கூட பார்வைக்கு சிக்கும் என்பது கூட்டிப்போகிறவர்கள் நம்பிக்கை வார்த்தை சொல்கிறார்கள்.

மலையேற்றப் பயணம் முடிந்து அறைக்குத் திரும்பினால் சைவ, அசைவப்பிரியர்கள் இரு சாரார்க்கும் பிடித்தமான உணவுகள் வேண்டிய அளவு வழங்கப்படுகிறது. இது முடிந்ததும் அறையிலேயே குட்டித் தூக்கம். சாளரங்கள் வழியே இயற்கை தரிசனம், வனவிலங்குகள், பறவைகள் தரிசனம். அப்படி எவையும் கிடைக்காவிட்டால் அடுத்து தயாராகிறது பரிசல் பயணம். இதற்கும் பழங்குடியின மக்களும், வனத்துறையினருமே அழைத்துப் போகிறார்கள்.

அதில் காணக்கிடைக்காத விலங்குகளும், இயற்கை காட்சிகளும் கண்ணுக்கு விருந்தாக அமைந்து விடுகிறது. அங்கேயே கரையில் பழங்குடியின மக்களின் விளையாட்டில் நாமும் கலந்து இன்புற முடிகிறது. அதைத் தொடர்ந்து குளிக்க அத்திக்கடவு பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். இவை முடிந்து பூச்சமரத்துார் காட்டேஜ்களுக்கே திரும்பல். இரவு சுவையான உணவு. அறைக்குள்ளேயே நல்ல படுக்கை. டாய்லெட் வசதி. தண்ணீர் வசதி. இளைப்பாறுவதற்கு, கதை பேசுவதற்கான இடம் என லயிக்க முடிகிறது.

இரவில் காட்டுக்குள் வனமிருகங்களின் 'கர்..புர்...!' சத்தம். யானைகளின் பிளிறல் கேட்க முடிகிறது. சாளரம் வழியே பார்த்தால் காடுகளுக்குள் அம்மிருகங்களின் நகர்வையும் காண முடிகிறது. அடுத்தநாள் காலை 9.30 மணிக்கெல்லாம் விடுதியை விட்டு புறப்படலாம். இதற்கும் காரமடையிலிருந்து வாகன வசதியை வனத்துறையினரே ஏற்பாடு செய்து தருகிறார்கள். அல்லது அவர்கள் வாகனம் முன்செல்ல நம் வாகனம் பின்தொடர்ந்து வரலாம்.

பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு எப்படி முன்கூட்டியே ஒரு நபருக்கு ரூ. 450 கொடுத்து பதிவு செய்து வரவேண்டுமோ, அதேபோல் இதற்கு ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 1500 கொடுத்து பதிவு செய்து விட்டு வர வேண்டும்.

''பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் இதுவும் ஒரு அங்கமாகத்தான் ஏற்படுத்தினோம். பொதுவாக பரம்பிக்குளம், ஆளியாறு, டாப்ஸ்லிப், வால்பாறை போன்ற பகுதிகளில் வனத்துறை, பொதுப்பணித் துறையினரின் தங்கும் விடுதிகள் இருக்கும். மரக்காட்டேஜ்கள் கூட உண்டு. அவற்றில் விஐபிக்கள் வந்து தங்காத காலங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் தங்க அனுமதி கிடைக்கும். அப்படி தங்குபவர்கள் அவர்களாகவே அந்தp பகுதிகளில் உள்ள இடங்களை தேர்ந்தெடுத்து சுற்றிப் பார்க்கச் செல்வார்கள். அவர்களாகவே சிலரை கைடாக வைத்துக் கொள்வார்கள். அப்படியே அவர்கள் சென்றாலும் அதிகமாக வனவிலங்குகள் வாழும் அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் செல்ல முடியாது.

அப்படியில்லாமல் பரந்துபட்ட வனப்பகுதிக்குள், நீர் ததும்பும் பில்லூர் அணை உள்ள ஏரியாவில் அதிகமான வனவிலங்குகள் நடமாடும் இடங்களில் வனத்துறையே ஏற்பாடு செய்திருக்கும் சூழல் சுற்றுலா இதுதான். காட்டு மிருகங்கள் இங்கே சுற்றி வந்தாலும், குறிப்பாக யானைகள் ஏராளமாக இருந்தாலும், அவை சேதப்படுத்த முடியாதபடி 15 அடி உயர பில்லர்கள் அமைத்து இந்த குடில்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்த சுற்றுலாவின் மூலம் மக்கள் இயற்கையோடு ஜாலியாக இருப்பதோடு, இயற்கை சூழல் குறித்தும், வனவிலங்குகள் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு பெறுகிறார்கள். அதற்கேற்பவே இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்!'' என்கிறார்கள் இந்த சூழல் சுற்றுலாவை வழிநடத்தும் வனத்துறையினர்.

இந்த காட்டேஜ்களை கடந்த வருடம் ஆரம்பித்து சில மாதங்கள் நடத்தினர். இதற்கு சுற்றுலாப் பயணிகளும் குவிந்தனர். ஆனால் இது நடத்துவதில் ஒரு சின்ன சிக்கல். இந்த குடில்களுக்கு பில்லூரிலிருந்தே மின்கம்பிகள் மூலம் மின்சாரம் கொண்டு வரப்படுவதால் (காற்றுக்கு, மரங்கள் முறிந்து, மின்னல், மழை அடித்து..) அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. அதனால் தங்குபவர்கள் அவஸ்தைக்குள்ளாக வேண்டியிருந்தது. எனவே தற்காலிகமாக காட்டேஜ் புக்கிங்கை நிறுத்திய வனத்துறை மாற்று ஏற்பாடாக சோலார் மின்சார அமைப்பை நிறுவியுள்ளது.

இத்துடன் இந்த பூச்சமரத்தூர் காட்டேஜ் வளாகத்திலேயே ஒரு மூலிகைப் பண்ணை ஒன்றை அமைக்க திட்டுமிட்டுள்ளது வனத்துறை. இந்த மூலிகைப் பண்ணை 100க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளாக இருக்கும் என்றும், அந்த மூலிகை செடிகள் தேவைப்படுவோர். அதைப் பெயர் சொல்லியே வாங்கிச் செல்லலாம் என்றும் தெரிவிக்கின்றனர் வனத்துறையினர்.

''சூழல் கெடாத சுற்றுலா. சூழலை பாதிக்காத, தங்கும் விடுதிகள். இதை அனுபவிக்கும்போதே மக்களிடம் அது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு விடுகிறது. அதேபோலவே மக்களிடம் மூலிகைகள் குறித்த விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டு வருகிறது. இதே நேரத்தில் காடுகளில் பல வகை அரிய மூலிகைகள் அழிந்தும் வருகிறது. இப்படி அழிந்து வரும் மூலிகைகளை இங்கே வளர்த்து வருபவர்களுக்கு ரூ. 5. ரூ. 10 என கொடுத்தால் அது குறித்த விழிப்புணர்வு பெருகும். மூலிகைகளும் காப்பாற்றப்படும்!'' என்பதே இதற்கு வனத்துறை அதிகாரிகள் சொல்லும் விளக்கமாக உள்ளது.

இது எந்த அளவுக்கு சாத்தியம். இதற்காக வெளியூர் மக்கள் அடுத்தடுத்து வரும் நிலையில் காடுகளும், அது சார்ந்த வனவிலங்குகளும் என்னவாகும்? நிச்சயம் அது கவலைக்குள்ளாவதாகத்தான் இருக்கும் என்பதே செல்வராஜ் போன்ற சூழலியாளர்களின் கருத்தாக உள்ளது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

SCROLL FOR NEXT