புதுடெல்லி: மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நேற்று கோஷங்களை எழுப்பினர். திமுக உறுப்பினர் கனிமொழியின் கருத்துக்கு பதில் அளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
மணிப்பூர் மட்டுமின்றி, ராஜஸ்தான், டெல்லி என பெண்கள் எங்கு துன்பப்பட்டாலும் அதனை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரசியல் ஆதாயம் இருக்கக் கூடாது.
கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவையை இழுத்து அவமானப்படுத்தியவர்கள் திமுகவினர். அப்போது முதல்வராக பதவியேற்ற பிறகுதான் சட்டப் பேரவைக்குள் நுழைவேன் என்று சபதம் செய்து 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வராகி சபதத்தை நிறைவேற்றிக் காட்டியவர் ஜெயலலிதா.
நீங்கள் மகாபாரத கவுரவர்களின் சபை குறித்து பேசுகிறீர்கள், திரவுபதி பற்றி பேசுகிறீர்கள். ஜெயலலிதாவை அவ்வளவு சீக்கிரம் திமுக மறந்துவிட்டதா? நம்பமுடியவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளதை பிரதமர் மோடி நிறைவேற்றிக் காட்டுகிறார்.
கடந்த 2013-ல் மோர்கன் ஸ்டான்லியின் மதிப்பீட்டில் உலகின் பலவீனமான ஐந்து பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருந்தது. ஆனால், இன்று அதே மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அதிக மதிப்பீட்டை கொடுத்துள்ளது.
தற்போது கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை வலுவான நிலையில் தக்க வைத்ததற்கு முக்கிய காரணம் மோடி தலைமையிலான அரசின் சிறப்பான கொள்கைதான். இன்று நாம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கிறோம். உலகளாவிய பொருளாதாரம் 2022-ல் வெறும் 3 சதவீத வளர்ச்சியை எட்டியது. மேலும், இது, 2023-ல் 2.1 சதவீதமாக குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
ஆனால், 2022-23-ல் இந்தியா 7.2 சதவீத ஜிடிபி வளர்ச்சியை எட்டியது. 2023-24-ல் பல்வேறு சவால்களுக்கிடையிலும் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ்: நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கத்தால் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான உத்தேச செலவு ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.1,700 கோடியாக அதிகரித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க தாமதமானதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். அதேநேரத்தில், கரோனா தொற்று காலத்தில் கள ஆய்வுகளை நடத்தியிருக்க முடியாது. அதன் விளைவாக வேலையை விரைவுபடுத்த முடியவில்லை என்ற மாநில அரசின் சிரமத்தையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.