ரிப்போர்ட்டர் பக்கம்

மிரட்டல்கள் தான் எனக்கு ஊக்க மருந்து: பொதுநலப் போராளி லால் மோகன்

என்.சுவாமிநாதன்

து மக்கள் பிரதிநிதியின் இல்லமோ, வழக்கறிஞர் அலுவலகமோ இல்லை. ஆனாலும் பலர் அங்கு வந்து தீர்வு பெற்றுச் செல்கிறார்கள். அதுவும் இயற்கை சார்ந்த பொதுநலப் பிரச்சினை என்றால் வரிந்து கட்டி வக்காலத்து வாங்குகிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த முதுநிலை விஞ்ஞானி ஆர்.எஸ்.லால் மோகன்!

மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட லால்மோகன், தற்போது எண்பது வயதைக் கடக்கிறார். ஆனால், இருபது வயதுக்கான இளமைத் துடிப்புடன் இருக்கிறார். கன்னியாகுமரி மலை பகுதிகளில் எங்காவது இயற்கைச் சுரண்டல் நடக்கிறது என்று தெரிந்தால், உடனே, ஆதாரங்களைத் திரட்டி பொதுநல வழக்குப் போட்டுவிடுவார் லால் மோகன். இயற்கை வளங்களைப் பாதுகாப் பதற்காக தொடுத்த பொதுநல வழக்குகளுக்காக உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் இவரைப் பாராட்டி இருக்கின்றன.

இந்திய தேசிய கலை, கலாச்சார பாதுகாப்பு அறக்கட்டளையின் குமரி மாவட்ட அமைப்பாளராக இருக்கும் லால் மோகன், இதுவரை தான் எடுத்து நடத்திய பொதுநல வழக்குகளையும், அதன் தீர்ப்புகளையும் தொகுத்து ‘குமரி மாவட்டத்தின் பாரம்பரியமும், சில பொதுநல வழக்குகளின் நீதிமன்ற தீர்ப்புகளும்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். சுற்றுச்சூழல் சம்பந்தமாகவும் இன்னும் சில நூல்களை எழுதியிருக்கிறார் இவர்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே விருப்ப ஓய்வு பெற்று, தற்போது முழுநேர சுற்றுச்சூழல் போராளியாக வலம் வரும் லால் மோகனைச் சந்தித்தபோது இயல்பாகப் பேசினார். “சுற்றுச்சூழல் தளத்திலும் பொதுநலன் சார்ந்தும் பணி செய்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அரசுப் பணியில் இருந்தபோது, கடல் மீன் உயிரிகளை காற்றுப் பையின் அடிப்படையில் தரம்பிரித்து நான் மேற்கொண்ட ஆய்வு உலக அரங்கில் எனக்கு தனி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

எனது அம்மா டாக்டர் ஜாயிஸ் ரிச்சர்டு, குமரி மாவட்டத்தின் லண்டன் மிஷினரி சொசைட்டியின் முதல் மருத்துவர். எனது தந்தை ரிச்சர்டு, பிரிட்டிஷ் ராணுவ மருத்துவராகவும், நாகர்கோவில் நகராட்சி சுகாதார அதிகாரியாகவும் இருந்தவர். இவர்கள் இருவருமே பொதுசுகாதாரம் சார்ந்த மக்கள் பணிகளை நிறையச் செய்திருக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் காலராவும், வைசூரியும் (அம்மை நோய்) வேகமாக பரவிய காலத்தில் எனது தாத்தா சாலமன் தீவிர களப்பணி செய்தார். அதனால், அவரும் வைசூரிக்கு பலியானார்.

இவர்களை எல்லாம் பார்த்து வளர்ந்ததால் எனக்குள்ளும் பொதுநலன் இயல்பாகவே வந்தது. கடல்சார் ஆராய்ச்சியில் முனைவரான நான், மத்திய அரசின் விவசாய விஞ்ஞான துறையில் பிரதம விஞ்ஞானியாக இருந்தேன். கடல்வாழ் பாலூட்டி வகையைச் சேர்ந்த டால்ஃபின், கடல் பசு இவற்றில் நான் நடத்திய ஆய்வுகள் எனக்கு சர்வதேச அளவில் புகழீட்டித் தந்தன. ஆனால், இதிலெல்லாம் எனது மனம் திருப்திப்படவில்லை” என்று நிறுத்திய லால் மோகன், தொடர்ந்தும் பேசினார்.

“குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் வளர்ச்சி என்னும் பெயரிலும், தனி மனித ஆதிக்கங்களாலும் தொடர்ந்து சூறையாடப்படுவதைப் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை. இனியும் நாம் ஆராய்ச்சிப் பணி செய்து கொண்டிருப்பது சரி யல்ல; இயற்கையைக் காக்க ஏதாவது செய்தாக வேண்டும் என எனக்கு நானே முடிவெடுத்துக் கொண்டுதான் விருப்ப ஓய்வில் வெளியில் வந்தேன். வந்ததும், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை என்னும் அமைப்பை உருவாக்கி, குமரி மாவட்டத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் பணிகளை முன்னெடுத்தேன்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காக இதுவரை 24 பொதுநல வழக்குகள் தொடுத்து நியாயம் பெற் றுள்ளேன். நீராதாரங்களில் வணிக ரீதியாக தாமரை வளர்ப்பவர்கள் அதில் கழிவுகளையும் ரசாயனத்தையும் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இது தொடர்பாக நான் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், நீராதாரங்களில் வணிக பயன்பாட்டுக்கு தாமரை வளர்க்கக் கூடாது என தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து தாமரை வளர்ப்போர் சங்கம் உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் முந்தைய தீர்ப்பை உறுதி செய்ததுடன் என்னையும் பாராட்டியது. இந்தியா முழுமைக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்றாலும் இன்னமும் சிலர் வணிக நோக்கில் தாமரை வளர்க்கத்தான் செய்கிறார்கள். என் கண்ணில் படுவதை மட்டும் நீதிமன்ற உத்தரவைக் காட்டி தடுத்து வருகிறேன்.

கன்னியாகுமரியில் கடலோர பூங்காவை தனியாருக்கு தாரை வார்க்க நடந்த முயற்சியையும் நீதிமன்றத்தின் மூலமாக முறியடித்து, பூங்காவை பேரூராட்சியே நிர்வகிக்க வைத்தேன். நான்கு வழிச்சாலை பணிக்காக களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி வரை 76 நீராதாரங்களை மூட தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்து பணிகளைத் தொடங்கியது. இதை எதிர்த்து நான் நீதிமன்றம் சென்றதால், நீராதாரங்களை மூடாமல் அவற்றின் மீது பாலங்கள், அடிமடை கட்டி சாலை அமைக்க 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதேபோல், கன்னியாகுமரி அருகிலுள்ள நரிக்குளத்தையும் மூட முயன்றார்கள். அதற்காகவும் வழக்குத் தொடுத்தேன். இப்போது, அதிலும் பாலம் கட்ட 21 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். இப்படி, வழக்குகளும் தீர்ப்புகளும் நிறைய இருக்கின்றன. பொது விஷயங்களுக்காக அடிக்கடி நான் வழக்குத் தொடுப்பதால் மிரட்டல்களும் வருகின்றன. அண்மையில்கூட, நீராதார ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக நான் தொடர்ந்த ஒரு வழக்குக்காக மிரட்டல் வந்தது.

இந்த மிரட்டல்களைப் பார்த்து நான் மிரள்வதில்லை. அதையெல்லாம், நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளமாகத்தான் எடுத்துக் கொள்வேன். இன்னும் சொல்லப் போனால், மிரட்டல்கள் தான் எனக்கு ஊக்க மருந்து” என்று சொல்லிச் சிரித்தார் லால் மோகன்.

SCROLL FOR NEXT