ரிப்போர்ட்டர் பக்கம்

யானைகளின் வருகை 86: படையெடுத்த ராஜாக்கள்!

கா.சு.வேலாயுதன்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கே கோத்தர், இருளர், தொதவர், பணியர், குரும்பர், முள்ளுக்குரும்பர், காட்டு நாயக்கர் மற்றும் காடு சார்ந்த வேறு பல இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இதில் நீலகிரியின் ஏனைய பகுதிகளிலிருந்து தற்போதைய கூடலூர், பந்தலூர் பகுதிகள் முற்றிலும் வித்தியாசமானது.

இது 77 ஆயிரத்து 171 ஹெக்டேர் நிலப்பரப்பை கொண்ட மலைகளும், சமவெளிகளுமான பீடபூமியாகும். இங்குள்ள பசுமை மாறாக் காடுகள் நீலகிரியில் உள்ள மற்ற காடுகளையும் தாண்டி உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.

உலகில் அதிகமழை பொழியும் சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக மழைப்பொழிவை பெறும் தேவாலா என்ற இடம் இங்குதான் உள்ளது. வருடத்தில் 8 மாதங்கள் தொடர் மழையும், 123 நாட்கள் அடைமழையும் பெய்வதோடு, வருடத்தில் சராசரியாக 6 ஆயிரம் மில்லி மீட்டர் மழைப்பொழிவை இந்தப் பகுதி பெறுகிறது. எனவேதான் குமரியிலிருந்து, விந்திய மலை வரை வலசை செல்லும் யானைகள் மட்டுமல்ல, பல்வேறு வனவிலங்குகளுக்கும் புகலிடமாக, உய்விடமாக பசுமை கொஞ்சும் சுவாச பூமி விளங்குகிறது.

காடுகள் இருந்தால்தான் நாங்கள் இருப்போம். நாங்கள் இருந்தால்தான் காடுகள் இருக்கும் என்பதைப் பற்றிய தெளிவான புரிதல் இங்கு வசித்து வந்த பழங்குடிகளுக்கு ஜீன்களிலேயே குடிகொண்டிருந்தது. அதைச் சார்ந்த மலை மக்களுக்கும் அந்தப் பார்வை அவர்கள் மூலமாகவே கிடைத்திருந்தது. இவர்களுக்கு மரங்கள், செடி, கொடிகள், மூங்கில்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை வளங்கள் பற்றி அனைத்து விவரங்களும் அறிவியல்பூர்வமாகவே தெரியும்.

சரி, அங்கே மனிதன் என்ன செய்தான். வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் நீலமலை என்கிற தற்போதைய நீலகிரியில் தொதவர்கள் என்ற மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள் என்ற விபரங்களுக்கு ஆணித்தரமான வரலாற்று ஆதாரம் இன்று வரை கிடைக்கவில்லை. வழக்கமாக கானகங்களில் வாழும் மக்கள் வேட்டையாடி வாழ்ந்தார்கள் என்பதுதான் வரலாறு. ஆனால் மிருகங்களை வேட்டையாடாது, மண்ணைத் தோண்டி விவசாயம் செய்யாது, எருமைகளை மேய்த்து அவை தரும் பால், வெண்ணெய் இவற்றை உண்டே இவர்கள் வாழ்ந்தார்கள்.

தாம் வளர்த்த எருமைகளை தமது உறவினர்களாக தெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். இயற்கையோடு இயைந்த இந்த உன்னத கலாச்சாரத்தில் அவர்கள் வாழ்க்கை எவ்வித அழிவுமில்லாத, அன்போடிருந்த வாழ்க்கையாகவே அமைந்திருந்தது. அவர்கள் வாழ்க்கையில் போரில்லை. போட்டியில்லை. பொதுமை இருந்தது. அசுத்தம் இல்லை. அசூயை இல்லை. பால் கறப்பதே பரிசுத்தப் பணியாக கருதப்பட்டது. அதுவே அந்தமான் தீவுகளில் வாழ்ந்த ஆதிவாசிகளைப் போல் அவுர்கள் நிர்வாணமாய் இருக்கவில்லை.

அழகிய ஆடைகளை கறுப்பு, சிகப்பு கலந்த அழகிய நுண்ணிய வேலைப்பாடுடன் சித்திரச் சேலைகளாகவே மாற்றி அணிந்தனர். அவர்களோடு ஆயுதங்கள் ஊழியும், இசைக் கருவிகள் மீட்டியும் இணைந்து வாழ்ந்த மக்கள் கோத்தர்கள். இவர்கள் கைவினைச் சிற்பிகள், இவர்கள் வணையும் பாண்டங்களும், கைத்தடிகளும், வண்ண மிகு கைவினை பொருட்கள் இவர்களின் இசைக்கருவிகள் இன்றும் நம்மை வசீகரிக்கக் கூடியவையாகவே விளங்குகின்றன.

கோத்தர்களும், தொதவர்களும் இணைந்து வாழ்ந்த இரு பூர்வீகக் குடிகள். இவர்களிடத்திலிருந்துதான் மற்றவர்கள் சூழல், இயற்கை குறித்த அறிவைப் பெற்றனர். யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற அனைத்து வனவிலங்குகள் பற்றியும் இவர்களுக்கு தெளிவான புரிதல் உண்டு. மரங்களின் வாஸ்துக்களையும், குச்சிகளையுமே இவர்கள் பயன்படுத்தி குடியிருப்புகள் கட்டுவது பாரம்பரியப் பழக்கம். காடுகளை அழித்து மாட மாளிகைகள், கான்கிரீட் பங்களாக்கள் கட்டுவது இவர்கள் அல்ல என்பதை முதலில் அழுத்தமாக உணர வேண்டும். இப்போதும் காடுகளுக்குள் சென்றால் அங்கே வசித்து வரும் பழங்குடிகள் யானைகளை பெரியவன், பெரிசு, ஆண்டவர், ஆண்டவன், கடவுள் என்றே சொல்வதை காணலாம்.

அவர்கள் விறகு, சுள்ளி பொறுக்கப்போய் அவர்களில் ஒருவர் காட்டு யானையே அடித்துக் கொன்றாலும், அந்த யானையை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதில்லை. நவீன கால விவசாயம் செய்யும் புதிய வேளாண்மையாளர்கள், விவசாய நிலங்களை, காடுகளை அழித்து ரியல் எஸ்டேட் உருவாக்குபவர்கள்தான் அந்த கூச்சல், கோஷத்தை எழுப்புகிறார்கள் என்பதைக் கொண்டே, 'அவர்கள் எந்த அளவு இயற்கையோடு, விலங்குகளோடு இயைந்து வாழ்கிறார்கள், இவர்கள் இயற்கைக்கும், வனவிலங்குகளுக்கும் எதிர் வினையாற்றுகிறார்கள்' என புரிந்து கொள்ள முடியும்.

ஆகவேதான் பூமி உருவாகி, புல், பூண்டுகள் மலர்ந்து, புழு பூச்சிகள் ஜனித்து, பறவைகள் விலங்குகள் மலர்ந்து மனிதன் உருவான காலந்தொட்டை மலை மக்களாகப்பட்டவர்கள் காடுகளிலேயே வாழ்கிறார்கள். மக்கள் இல்லாத காடு என்பதே கிடையாது. இது அறிவியல் உண்மை. அதேசமயம் அங்கு வாழ்ந்த மக்கள் தங்களுக்கு வாழ்வளித்த, வாழ்வளித்துக் கொண்டிருந்த காடுகளைப் பேணிக் காத்ததோடு, அவற்றை தெய்வமாகவும் வழிபட்டனர்.

இங்கே வந்த பல்வேறு ராஜாக்களின் ஆளுகைக்கு இது உட்பட்டதோடு, தொடர்ச்சியாக சேரன் செங்குட்டுவன், திப்பு சுல்தான் படையெடுப்பும் நடந்துள்ளது. தொடர்ந்து கேரள மன்னர்கள் பலரது ஆளுகைக்கும் உட்பட்டிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுகள் உள்ளன.

இங்கு வாழ்ந்த மக்கள் இந்த மண்ணின் செல்வங்களான காடுகளையும், அது சார்ந்த இயற்கை வளங்களையும், வனவிலங்குளையும் கூட இயற்கை சமன்பாட்டிற்கு ஏற்பப் பயன்படுத்தி பாதுகாத்தும் வந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் மன்னர்களும், அதற்குப் பிறகு ஆங்கிலேயர்களும் காட்டுக்குள் புகுந்து மரங்களை வெட்டியதோடு, வனவிலங்குகளையும் வேட்டையாடி கொன்று குவித்தனர். இதற்கு எதிராக ஆதிவாசி மற்றும் இதர மலைமக்கள் வீரம் சொறிந்த போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் வரலாறுதான். இதை எதிர்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் வனச் சட்டங்களை தங்களுக்கு ஏதுவாக உருவாக்கிக் கொண்டு செயல்பட்டனர்.

நீலகிரியின் சிறப்பே சோலைக்காடுகள், பசுமை மாறாக்காடுகள், பசும்புல்வெளிகள், இலையுதிர் காடுகள், புதர் காடுகளை தன்னகத்தே கொண்டிருப்பதே. இந்த காடுகள் சாதாரணமாக விரவிக் கிடக்கவில்லை. ஒவ்வொரு தன்மையுள்ள காடுகளும் பல நூறு மலைக் குன்றுகள், பள்ளத் தாக்குகள், உயரமான சிகரங்கள், சமவெளிகள் என ஊடுருவி பல ஆயிரம் சதுர மைல்களில் பரந்துபட்ட அளவில் விரிந்து நிற்கின்றன. காடுகளின் தன்மைக்கேற்ப பெருகி நின்ற கானுயிர்களும், மனிதர்களும் ஒன்றுக்கொன்று பிணைந்தே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

ஆங்கிலேயர்கள் காடுகளை வைத்து வருவாய் ஈட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டதே பிரிட்டிஷ் ராஜ்யத்தின் வன இலாகா. ஆதிவாசிகளும், இதர மலை மக்களும் தங்களின் அதிகாரத்தை கட்டமைக்க வேண்டி 1894-ம் ஆண்டு வனக்கொள்கையை ஆங்கிலேய அரசு உருவாக்கியது. இந்த வனக் கொள்கை என்பது முழுக்க வனத்தின் இயற்கை செல்வங்களை வருமானமாக்கும் நோக்கத்தோடே உருவாக்கப்பட்டது. வனத்தில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை.

நில ஆர்ஜித சட்டம் பொதுப் பயன்பாட்டுக்கு என்று அறிவித்து மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் அதிகாரத்தை அரசின் கைகளுக்கு அளித்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட ஆங்கிலேய காலனி ஆதிக்க நாடுகளில் ஆதிவாசிகளும், இதர மலைமக்களின் நிலங்களை யாருக்கும் உரிமையில்லா தரிசு நிலங்கள் என முடிவு செய்து அரசாங்கமே எடுத்துக் கொள்ளும் நடைமுறை தொடர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் முதல் வனச்சட்டம் 1927-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆதிவாசிகள், இதர மலைவாழ் மக்களின் பூர்வ குடிகள் என்ற உயரிய நிலைக்கு பதிலாக வனத்திற்குள் அவர்கள் அந்நியர் ஆக்கப்பட்டனர்.

அது காடுகளை நிறுவன மயப்படுத்தி தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. அதிலிருந்து நீலகிரியின் இயற்கை காடுகள் மேலும் பெரும் அழிவை சந்திக்கத் தொடங்கியது. இயற்கைக் காடுகளின் தன்மையும் மாற்றி அமைக்கப்பட ஆரம்பித்தது. கானுயிர்களை வாழவைக்கும், விலை மதிப்பற்ற காட்டு மரங்கள் வெட்டி கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டியதோடு, வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட யூகாலிப்ட்ஸ், தேக்கு, ஹககேசியா போன்ற மரங்களை வணிக நோக்கமாக கொண்டு வந்து இங்கே நட்டு வைத்து வளர்க்க ஆரம்பித்தனர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

SCROLL FOR NEXT