மத்திய சென்னை, வடசென்னை ஆகிய இரு தொகுதிகளுக்கு 9 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையில் 42 பேரும், மத்திய சென்னையில் 20 பேரும், வடசென்னையில் 40 பேரும் போட்டியிடுகின்றனர். இந்த 3 தொகுதிகளிலும் மொத்தம் 3,338 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வடசென்னை, தென் சென்னை ஆகிய இரு தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், மத்திய சென்னை தொகுதியில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் தேவைப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், அவசரத் தேவைகளுக்கு கூடுதலான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் தேவைப்படுகின்றன.
வேளச்சேரி சேவா நகரில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் 9 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை மத்திய சென்னை மற்றும் வடசென்னை தொகுதிகளுக்கு பயன்படுத்த மாவட்ட தேர்தல் அலுவலகம் ஏற்கெனவே முடிவெடுத்தது.
அதன்படி, அந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை மத்திய சென்னை மற்றும் வடசென்னை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி திங்கள்கிழமை நடந்தது.
தென் சென்னைக்கு தேவையான இயந்திரங்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து புதிதாக தருவிக் கப்பட்டு பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.