ரிப்போர்ட்டர் பக்கம்

முள்ளிலே கலை வண்ணம் கண்டார்

கரு.முத்து

சோ

ழர்களும் பல்லவர்களும் கல்லிலே கலை வண்ணம் கண்டார் என்பார்கள். மீனவரான ஆனந்த் மீன் முள்ளிலே (எலும்பு) கலை வண்ணம் கண்டு வருகிறார்.

நாகை மாவட்டத்திலுள்ள கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த 34 வயது இளைஞர் ஆர்.ஆனந்த். சொந்தமாக விசைப் படகு வைத்து மீன்பிடி தொழில் செய்யும் இவர், மற்ற மீனவர்களிலிருந்து சற்றே வித்தியாசமானவர். கடலுக்குப் போன சமயம் போக, ஓய்வு கிடைக்கும் நேரத்தில் சிற்பங்களைச் செதுக்குவதில் ஆனந்துக்கு அலாதி பிரியம்.

தொடக்கத்தில், சந்தனப் பொடியில் விநாயகர், முருகன் என கடவுள் உருவங்களைச் செய்யத் தொடங்கியவர், அடுத்த கட்டமாக கொட்டாங்குச்சிகளைக் கொண்டு சிற்பங்களைச் செதுக்கினார். இதில் கிடைத்த பயிற்சியைக் கொண்டு அடுத்ததாக மீன் முள்ளில் (எலும்பு) அழகிய சிற்பங்களைச் செதுக்க ஆரம்பித்திருக்கிறார். அதுதான் இப்போது அவரை ‘தி இந்து’ வரைக்கும் பேச வைத்திருக் கிறது.

இனி, ஆனந்த் பேசுவார். “மீன் முள்ளில் சிற்பங்களைச் செதுக்கலாம்னு முடிவுக்கு வந்தப்புறம் மீன்முள் பெரிய சைஸ்ல கிடைக்குமான்னு தேட ஆரம்பிச்சேன். அப்பத்தான், கடந்த ஒரு வருசம் முந்தி, என்னோட வலையில சுமார் 20 அடி நீளமுள்ள திமிங்கலத்தோட முள்ளு சிக்கிச்சு. அந்த முள்ளை நான் கரைக்கு எடுத்துட்டு வந்து பத்திரமா வெச்சுட்டேன். திமிங்கலத்தோட முள்ளு, மரம் மாதிரியே இருந்ததால இதுலயே சிற்பங்களை செஞ்சுபார்த்தா என்னன்னு தோணுச்சு; உடனே காரியத்துல இறங்கிட்டேன்.

என்ன உருவத்தை செதுக்கப் போறோமோ அதுக்கேத்த அளவுக்கு திமிங்கலத்தோட முள்ளை அறுத்து எடுத்துக்குவேன். பிறகு, அதன் மீது கார்பன் பேப்பர் வெச்சு உருவத்தை வரைஞ்சுக்கிட்டு கவனமா செதுக்க ஆரம்பிப்பேன். இதுக்காகவே உளி, சுத்தி, வாள் எல்லாம் தனியா வாங்கி வெச்சிருக்கேன். ஒரு சிற்பத்தை ஒரு நாள்லயும் செதுக்கி முடிப்பேன். சில சிற்பங்களைச் செதுக்க வாரக் கணக்குலகூட ஆகிடும்” என்று சொன்ன ஆனந்த், தான் செதுக்கிய மீன் முள் சிற்பங்களை நமது பார்வைக்கு விரித்தார்.

அச்சு, அசலாய் மர சிற்பங்கள் போலவே இருந்த அந்தச் சிற்பங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தன. வெங்கடாஜலபதி, விநாயகர், நர்த்தன விநாயகர் என மீன் முள்ளில் இவர் வடிக்கும் சிற்பங்களுக்கு இப்போது ஏக கிராக்கியாம். இவரைத் தேடி வரும் நண்பர்களும் உறவினர்களும் மீன் முள் சிற்பங்களை பறிக்காத குறையாக கேட்டு வாங்கிச் சென்றுவிடுகிறார்களாம்.

இவை தவிர, ஆனந்தின் வீடு முழுக்க கொட்டாங்குச்சியில் கலைநயத்துடன் செய் யப்பட்ட படகு, மீன், யானை, தண்ணீர் ஜக், மேரி மாதா உள்ளிட்ட சிற்பங்களும் நிறைந்திருக்கின்றன. மீனவர், சிற்பி மட்டுமல்லாமல் சிறந்த சமூக சேவகராகவும் இருக்கிறார் ஆனந்த். கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தனது நண்பர்களோடு சேர்ந்து மாடித் தோட்டம் அமைக்கவும் மரக்கன்றுகள் நடவும் ஸ்மார்ட் வகுப்பறைகளை ஏற்படுத்தவும் தன்னாலான உதவிகளைச் செய்துவருகிறார் ஆனந்த்.

இதையெல்லாம் தவிர, ஒரு சராசரி மீனவனாகவும் தனது கவலைகளைப் பகிர்ந்து கொண்ட ஆனந்த், “கடல்ல மீன்வளம் வேகமா அழிஞ்சுட்டு வருது. வருசம் முழுக்க மீன் கிடைச்சிட்டு இருந்த கடல்ல இப்ப மாசத்துல நாலஞ்சு நாள் மட்டுமே சரியான படிக்கு பாடு கிடைக்குது. காரைக்கால் முதல் கோடியக்கரை வரைக்கும் கடலுக்குள் செயற்கை பவளப் பாறைகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பகுதியில் மீண்டும் பழையபடி மீன் வளத்தை பெருக்க முடியும்” என்றார்.

SCROLL FOR NEXT