பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முஸ்லிம்கள் மீது காட்டி வரும் அன்பு போலித்தனமானது என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சாடினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்டோயில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது, "மோடிக்கு தேர்தல் தருணத்தில் தான் முஸ்லிம்களின் ஞாபகம் வருகிறது. அவர் முஸ்லிம்கள் மீது தற்போது காட்டி வரும் அன்பு போலியானது.
'முஸ்லிம்கள் தன்னை நேரில் பார்த்தால், என்னை விரும்ப ஆரம்பித்து விடுவர்' என்று நேற்றுகூட அவர் பேசியுள்ளார். ஆனால் முஸ்லிம் மக்கள் மோடியையும், பாஜக தலைவர்களையும் நம்பிவிடக் கூடாது.
காங்கிரஸின் தவறான கொள்கைகளால் மட்டுமே பாஜக என்ற கட்சி இன்னும் இருக்கிறது. தற்போது ஒரு பக்கம் மதவாத சக்திகளும், மறுபக்கம் சோசலிச சிந்தனையாளர்களும் இருக்கின்றனர். இதில், யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கால் மட்டுமே நாட்டின் நலனை காக்க முடியும்" என்றார் அகிலேஷ் யாதவ்.
பின்னர் பேசிய அகிலேஷ் யாதவின் மனைவியும் எம்.பி.யுமான டிம்பிள் யாதவ், "குஜராத் ஒரு முன்மாதிரி மாநிலமாக வர்ணிக்கப்படுவது தவறான கருத்து. உண்மை வேறானது. பிற கட்சிகளைவிட சமாஜ்வாதி கட்சி சிறப்பாக செயல்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கு பின் முலாயம் சிங் தான் நாட்டின் பிரதமர்" என்றார்.