பீஜிங்: இந்த உலகிற்கு சீனா தேவை என்று 3வது முறையாக அதிபரான ஜி ஜின்பிங் பேசியுள்ளார். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 16-ம்தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது.இதில் கட்சி நிர்வாகிகள் 2,300 பேர் கலந்து கொண்டனர். இதில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜி ஜின்பிங் இன்று முறைப்படி 3வது முறையாக அதிபராக அறிவிக்கப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி ஜின்பிங், இந்த உலகிற்கு சீனா தேவை. அதேபோல் சீனாவும் உலக நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் வளர முடியாது. 40 ஆண்டுகளுக்கும் மேல் கடினமான முயற்சியில் அதிவேக பொருளாதார வளர்ச்சி, நீடித்த சமுதாய ஸ்திரத்தன்மை என இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். கட்சியின் நம்பிக்கை, சீன மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் நான் அதிக சிரத்தையுடன் பணி செய்வேன் என்றார்.
ஜி ஜின்பிங் சினாவின் ராணுவ மத்திய குழுவிற்கும் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 69 வயதாகும் ஜி ஜின்பிங்,சீன அதிபராக 3வது முறை தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் கூட அவர் நியமனத்திற்கான அறிவிப்பு முறைப்படி வரும் மார்ச் மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்படுவார். மா சே துங்கிற்குப் பின்னர் அதிகாரக் குவிப்பில் தனிமுத்திரை பதித்தவர் ஜி ஜின்பிங்.
ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரியவரும் ஷாங்காய் கட்சித் தலைவருமான லி கியாங் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் வரும் மார்ச் மாதம் சீனப் பிரதமராக முறைப்படி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள 7 பேரில் பலரும் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.