உக்ரைன் ராணுவ நிலைகள் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல்: 19 விமானங்களில் இந்தியர்கள் மீட்பு

By செய்திப்பிரிவு

கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்று 8-வது நாளாக போர் நீடித்தது. உக்ரைன் ராணுவ நிலைகள் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையே நேற்று 8-வது நாளாக கடும் சண்டை நீடித்தது. மரியபோல், செர்னிஹிவ் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ நிலைகள் மீது ரஷ்ய போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் செர்னிஹிவ் நகரில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிகிறது.

உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கார்சன் நகர், ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. அந்த நகரில் சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருவதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் ஒடேசாவில் கடற்படைத் தளம் அமைந்திருக்கிறது. இந்த நகரம் மீது ரஷ்ய போர் விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. வெகுவிரைவில் இதுவும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வரும் என்று கூறப்படுகிறது.

தலைநகர் கீவ், கார்கிவ் நகரங்கள் மீதும் நேற்று தீவிர தாக்குதல் நடத்தப்பட்டது. போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். போரில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

ரஷ்ய தேசிய பாதுகாப்பு மையத்தின் கர்னல் மைக்கேல் கூறும்போது, ‘‘நகரங்களில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறுவதை உக்ரைன் வீரர்கள் தடுக்கின்றனர். கார்கிவ் நகரில் மட்டும் 3,189 இந்தியர்கள், 2,700 வியட்நாமியர்கள், 202 சீனர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். சுமி நகரில் 576 இந்தியர்கள், 101 கானா நாட்டினர். 121 சீனர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். போரில் வெளிநாட்டினர் அதிக அளவில் உயிரிழக்க வேண்டும் என உக்ரைன் விரும்புகிறது’’ என்று தெரிவித்தார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்கி நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘‘ரஷ்யாவுக்கு நாங்கள் அஞ்சவில்லை. அந்த நாட்டிடம் சரண் அடைய மாட்டோம். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவோம். போர் குற்றங்களில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுப்போம். ரஷ்யாவிடம் இருந்து இழப்பீடு பெறுவோம். போரில் இதுவரை 9 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார். இதை ரஷ்ய ராணுவம் மறுத்துள்ளது.

19 விமானங்களில் மீட்பு

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்ப தாவது: உக்ரைனில் தவிக்கும் 3,276 இந்தியர்களை அழைத்து வருவதற்காக அதன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானப்படை மற்றும் விமான நிறுவனங்களை சேர்ந்த 19 விமானங்கள் வியாழக்கிழமை (நேற்று) இயக்கப்படுகின்றன. இவற்றில் 8 விமானங்கள் ருமேனியா தலைநகரான புக்காரெஸ்டில் இருந்து இந்தியா வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் 3,276 பேர் 19 விமானங்கள் மூலம் இந்தியா வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ‘உக்ரைனில் இருந்து இதுவரை 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 80 விமானங்கள் மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்தியர்களும் மீட்கப்படுவர்’ என்று தெரிவித்துள்ளது.

உக்ரைனின் கார்கிவ் நகரம், ரஷ்ய எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து ரயில் மூலம் ரஷ்ய எல்லைக்கு செல்ல சுமார் 1,000 இந்திய மாணவர்கள் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர். ஆனால், உக்ரைன் அரசு சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்யவில்லை. ரஷ்ய எல்லை பகுதிக்கு சென்றால் சுட்டுக் கொல்வோம் என்று இந்திய மாணவர்களை உக்ரைன் வீரர்கள் மிரட்டி வருகின்றனர்.

2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்

போரை நிறுத்தும் வகையில் ரஷ்யா, உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டின் கோமெல் நகரில் கடந்த 28-ம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து பெலாரஸின் பிலவ்ஜாகயா புஸ்சா நகரில் ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்றிரவு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.

தாக்குதலை நிறுத்த வேண்டும், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் கோரப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் உக்ரைன் ஈடுபடக்கூடாது. உக்ரைனிடம் உள்ள ஆயுதங்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என்று ரஷ்ய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

36 mins ago

வணிகம்

51 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்