அச்சுறுத்தும் ஓமைக்ரான் வைரஸ்: வெளிநாட்டினர் வருகைக்கு தடை; மீண்டும் தனிமைப்படுத்தும் விதி, லாக்டவுன்: இஸ்ரேல் முடிவு

By ஏஎன்ஐ


இஸ்ரேல் நாட்டில் கரோனா வைரஸின் உருமாற்ற ஓமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து, வெளிநாட்டினர் வருகைக்கு அடுத்த 2 வாரங்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மீண்டும் தனிமைப்படுத்தும் விதிகள், லாக்டவுன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால்கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இஸ்ரேல் அரசு மீண்டும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி வெளிநாட்டு சுற்றுலாப்பணிகள் வருகைக்கு அடுத்த 2 வாரங்களுக்குத் தடையும், தனிமைப்படுத்தும் விதிகள், லாக்டவுன் போன்றவற்றை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ உறுதியற்ற சூழலில் இருக்கிறோம். டெல்டா வைரஸ் பாதிப்பிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவந்திருக்கிறோம். பொருளாதாரத்தை இயல்புக்கு கொண்டுவந்து, கல்விமுறையை செயல்படுத்திஇருக்கிறோம். இப்போதுள்ள நிலையில் நாட்டின் எல்லைகளைக் கண்காணி்ப்பதும், இடர்பாடுகளை குறைக்கும் வகையில் செயல்படுவதுதான் நோக்கமாகும்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே இஸ்ரேல் உள்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ இஸ்ரேலில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு 2 வாரங்கள் தடை செய்யவும், தனிமைப்படுத்தும் விதிகள், லாக்டவுன் நடவடிக்கைகளை கொண்டுவரவும் இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE