மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா திட்டத்தை வழிநடத்தும் தமிழக பெண்

By செய்திப்பிரிவு

மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தில் தமிழக பெண் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கல்பனா சாவ்லா, சுனிதா வில்லிம்யம்ஸ் உட்பட பலர் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளனர். கடந்த பிப்ரவரியில் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. இந்த திட்டத்தை கர்நாடகாவின் சுவாதி மோகன் வழிநடத்தி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தார்.இந்த வரிசையில் தமிழகத்தின் கோவையை பூர்வீகமாகக் கொண்ட சுபாஷினி அய்யர், நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

கடந்த 1969 ஜூலை 20-ம் தேதி அமெரிக்காவின் அப்போலா 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார். வரும் 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரையன் என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது. இந்த விண்கலம் கடந்த 2014-ம் ஆண்டில் ஆளில்லாமல் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு ஆர்ட்டெமிஸ் என்று நாசா பெயரிட்டுள்ளது.

ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் வரும் நவம்பர் மாதம் ஓரையன் விண்கலம் ஆளில்லாமல் நிலவின் விண்வெளி பகுதிக்கு செலுத்தப்பட்டு, பூமிக்கு திரும்ப உள்ளது. இதன் பிறகு ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் வரும் 2023 அல்லது2024-ம் ஆண்டில் ஓரையன் விண்கலம்,விண்வெளி வீரர்களுடன் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராக்கெட் தயாரிப்பு திட்டம்

இந்த திட்டத்தின் முதுகெலும்பாக கருதப்படும் ராக்கெட் தயாரிப்பு திட்டப் பணிகளை தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த சுபாஷினி அய்யர் வழிநடத்தி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்த உள்ளது. நிலவை தாண்டி செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் இந்ததிட்டம் முன்னோடியாக இருக்கும். ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் ஓரையன் விண்கலம் 4.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் ஆளில்லாமல் செலுத்தப்பட உள்ளது. இது 3 வார பயண திட்டமாகும். எஸ்எல்எஸ் என்ற உலகின் அதிகசக்திவாய்ந்த ராக்கெட்டில், ஓரையன் நிலவுக்கு செலுத்தப்பட உள்ளது.

நாசா மற்றும் போயிங் நிறுவனம் இணைந்து இந்த ராக்கெட்டை தயாரிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக போயிங்நிறுவன குழுவின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். 500 விநாடிகளில் 5.3 லட்சம் அடி பாயும் வகையில் ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யார் இந்த சுபாஷினி அய்யர்?

கோவையில் செயல்படும் விஎல்பி ஜானகியம்மாள் கல்லூரியில் கடந்த 1992-ம் ஆண்டில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்தார். மெக்கானிக்கல் பிரிவில் இவர் மட்டுமே பெண். இவரது தந்தை பேன், பெல்ட், ரப்பர் ஆட்டோமொபைல் தயாரிக்கும் ஆலையை நடத்தினார். இதனால் மெக்கானிக்கல் மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

இவரது சகோதரிகள், சகோதரர் கணினி, மருத்துவ துறையை தேர்ந்தெடுத்தபோது இவர் மட்டும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை தேர்வு செய்தார். தந்தைதான் இவருக்கு குரு. மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற இவர், போயிங் நிறுவன இன்ஜினீயராக அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் எஸ்எல்எஸ் ராக்கெட் தயாரிப்பு திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

வாழ்வியல்

20 mins ago

தமிழகம்

36 mins ago

கருத்துப் பேழை

58 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்