அமெரிக்க அதிபரான பிறகு சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது முதல் தாக்குதல் நடத்தி இருக்கிறார் ஜோ பைடன்.
இதுகுறித்து பிசிசி வெளியிட்ட செய்தியில், “ சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமையன்று அமெரிக்க ராணுவம் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகளின் பல நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன. வாகனங்களும் தாக்கப்பட்டன. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு அவர் விடுத்த முதல் தாக்குதல் உத்தரவு இதுவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இராக் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் ஹிஸ்புல்லா, சயித் ஷுஹடா ஆகிய தீவிரவாத அமைப்புகள் தாக்கப்பட்டன என்று அமெரிக்க ராணூவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் பலியானவர்கள் விவரத்தை அமெரிக்க ராணுவம் வெளியிடவில்லை. எனினும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 17 பேர் பலியானதாக சிரியாவில் இயங்கும் மனித உரிமை தெரிவித்துள்ளது.
சிரிய போர்
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.
ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.