கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு இது நேரமல்ல: உலக சுகாதார அமைப்பு

கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது கரோனா வைரஸ் பரவுவதை எளிமையாக்கும். இது அதற்கான நேரமல்ல என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு நான்காவது வாரமாகக் குறைந்துள்ளது. இரண்டாவது வாரமாக இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தனி நபர்கள் முகக் கவசங்களை அணியாமல் இருப்பதற்கும், உலக நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கும் இது சரியான தருணம் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனா பரவல் குறித்து சீனாவுக்குச் சென்று ஆய்வு நடத்திய உலக சுகாதார அமைப்பின் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE