16 வினாடிக்கு ஒரு உயிரிழப்பு: ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் கருப்பையிலேயே இறக்கின்றன; கரோனாவால் மேலும் 2 லட்சம் அதிகரிக்கலாம்: யுனிசெப், உலக சுகாதார அமைப்பு கவலை

16 வினாடிக்கு ஒரு குழந்தை கருப்பையில் இறக்கிறது (stillbirth), ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் சராசரியாக இறந்து வரும் நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பால் இது மேலும் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் அமைப்பு கவலைத் தெரிவித்துள்ளது.

ஸ்டில்பெர்த் என்பது கருச்சிதைவிலிருந்து மாறுபட்டது. அதாவது ஒரு பெண்ணிற்கான மகப்பேறு வாரங்களான 28 வாரத்துக்கு இடையே கருப்பையில் குழந்தை இறத்தல் மற்றும் மகப்பேறு முடிந்த 36 வாரத்துக்குப்பின் மகப்பேறு காலத்தில்கூட இறத்தல் என்று குறிப்பிடலாம்.

உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து உலக அளவில் கருப்பையில் குழந்தை இறத்தல் குறித்த அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளன. அது குறித்து யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்ரிட்டா ஃபேரே கூறியதாவது:

உலகம் முழுவதும் நடக்கும் கருப்பையிலேயே குழந்தை இறத்தல் துயர சம்பவங்களில் 84 சதவீதம் குறைந்த, நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், முறையான மருத்துவ, சுகாதார வசதிகள் இல்லாமல் ஏற்படுகின்றன.

குழந்தை பிறந்தபின்பும் அல்லது பிரசவத்தின்போதும் குழந்தை இறத்தல் என்பது குடும்பத்தில் வேதனைக்குரிய ஒன்று. ஆனால், இது உலகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. 16 வினாடிக்கு ஒரு குழந்தை கருப்பையிலேயே இறக்கிறது. ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் இதுபோல் இறக்கின்றன.

குழந்தையின் உயிரிழப்பு மட்டுமின்றி, பெண்ணுக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் தீராத மன உளைச்சலும், பணரீதியான இழப்பும் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த, கருப்பையிலேயே குழந்தை இறந்த ஒவ்வொரு 4 சம்பவத்திலும் 3 சம்பவங்கள் தெற்காசியாவிலும், சஹாரா ஆப்பிரிக்காவிலும் நிகழ்ந்துள்ளன.

சுகாதார வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், முறையான சிகிச்சை, கண்காணிப்பு, செவிலியர்கள் வசதி ஆகியவை இருப்பதன் மூலம் நூற்றுக்கணக்கான முதல் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காக்க முடியும்.

இந்த ஆண்டு உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் கருப்பையிலேயே குழந்தை இறத்தல் மேலும் மோசமாகும். உலகளவில் 50 சதவீதம் சதவீதம் சுகாதாரச் சேவைகள் கரோனாவில் குறைந்துவிட்ட நிலையில், அடுத்த ஆண்டில் 117 வளர்ந்துவரும் நாடுகளில் கூடுதலாக 2 லட்சம் குழந்தைகள் கருப்பையிலேயே இறக்கநேரிடும்.

கருப்பையிலேயே குழந்தை இறத்தல் சம்பவங்களில் 40 சதவீதம் மகப்பேற்றின்போதும், முறையான பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாத நிலையிலும் ஏற்படுகிறது. பாதிக்கும் மேற்பட்ட இறப்புகள் சஹாரா ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா நாடுகளிலும், ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் 6 சதவீதம் இறப்புகளும் ஏற்படுகின்றன.

இவ்வாறு ஹென்ரிட்டா ஃபேரே தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE