இந்தியா மீது கருணையே காட்டாமல் பிடிவாதமாகச் செயல்பட்டவர்தான் ட்ரம்ப்: ஜான் போல்டன் பரபரப்பு

அமெரிக்க தேசியப் பாதுகாப்பின் முன்னாள் ஆலோசகர் ஜான் போல்டன் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்.

‘ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியா மீது எந்த ஒரு கருணையும் காட்டாமல் அதிபர் ட்ரம்ப் பிடிவாதமாகச் செயல்பட்டார் ட்ரம்ப்” என்று தற்போது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கடந்த ஆண்டு ட்ரம்ப் இவரைப் பதவி நீக்கம் செய்தார். இந்நிலையில் அவர் தன் புதிய நூலான ‘தி ரூம் வேர் இட் ஹேப்பண்ட்’ என்ற புத்தகத்தில் ட்ரம்பின் கொள்கைகளை அம்பலப்படுத்தி வருகிறார். உய்குர் முஸ்லிம்களை முகாம்களில் அடைக்க சீனாவுக்கு ஆதரவு அளித்தவர்தான் ட்ரம்ப் என்ற அந்த நூலில் அவர் எழுதியது வெளியாக பரபரப்பு ஏற்பட்டது.

“ஈரானிடமிருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று அதிபர் ட்ரம்ப் நாடுகளை எச்சரித்திருந்தார். ஈரானிலிருந்து கச்சா இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஈரானிலிருந்துதான் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறது என்று இந்தியா எடுத்துக் கூறியும் அமெரிக்கா அதனை ஏற்கவில்லை.

அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் இந்தியாவின் பக்க நியாயத்தை உணர்ந்திருந்தனர். ஆனால் ட்ரம்ப் பிடிவாதமாக இருந்தார். இந்தியாவுக்கு அவர் கருணை காட்டவில்லை.

இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுடன் தொலைபேசியில் பேசினார். பாம்பியோவும் இந்தியா தரப்பு நியாயத்தை வலியுறுத்தினார். ட்ரம்ப் இதை ஏற்கவில்லை, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்காமல் மோடி சமாளித்துக் கொள்வார் என அலட்சியமாகக் கூறிவிட்டார் ட்ரம்ப்.” என்ற அந்த நூலில் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE