சர்வதேச புவி தினம்; கரோனாவில் மட்டுமல்ல பருவநிலை சார்ந்தும் உலகம் கவனம் செலுத்த வேண்டும்: கிரெட்டா துன்பெர்க் வேண்டுகோள்

கரோனா தொற்று மற்றும் பருவநிலை நெருக்கடி ஆகிய இரண்டிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று காலநிலைச் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் உலகம் அதை எதிர்கொள்ளும் முயற்சியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. இதில் பருவநிலை நெருக்கடியை மறந்துவிட்டது. தற்போதைய சூழலில் கரோனாவையும் பருவநிலை நெருக்கடியையும் ஒன்றாகக் கையாள வேண்டும் என்று கிரேட்டாதெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு 1970-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று சர்வதேச புவி தினம் கொண்டாடப்படுகிறது. இன்று ஐம்பதாவது ஆண்டு தினம் கொண்டாடப்படுகிற நிலையில், அது தொடர்பான காணொலி நிகழ்வில் கலந்துகொண்ட கிரேட்டா இக்கருத்தைத் தெரிவித்தார்.

”காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்ந்து அபாய கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை நாம் உணர வேண்டும். கரோனா பரவல் பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தற்போதாவது அறிவியலாளர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளுக்கு நாம் செவி கொடுக்க வேண்டும்” என்று கிரெட்டா தெரிவித்தார்.

பூமியின் வெப்பநிலை ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் கடந்த ஆண்டு உட்சபட்ச வெப்பநிலையை எதிர்கொண்டன. கரியமில வாயு வெளியேற்றம், சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. சுற்றுச்சூழல் குறித்து எவ்வித அக்கறையுமின்றி, உலக நாடுகள் வரைமுறையின்றி சூழலை மாசுபடுத்தி வந்தன. இந்த நிலை தொடரும்பட்சத்தில் உலகம் கடும் பேரழிவை எதிர்கொள்ளும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்து வந்தனர்.

ஆனால், உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் அறிவியலாளர்களின் கருத்துக்குச் செவி கொடுக்காமல் தொழில் வளர்ச்சியை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ஸ்வீடனைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய கிரேட்டா துன்பெர்க், உலக நாடுகளின் அலட்சியப் போக்குக்கு எதிராக பள்ளி செல்வதைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து தற்போது கிரேட்டா காலநிலை செயற்பாட்டாளராக அறியப்படுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE