பலி எண்ணிக்கையில் சீனாவை முந்திய ஸ்பெயின்: தொடரும் கரோனா துயரம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் 3,434 பேரைக் காவு வாங்கி ஸ்பெயின் சீனாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்திலும் வடுவை ஏற்படுத்திச் செல்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே ஒரே நாளில் 738 பேர் இறந்ததால் ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 47,610 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 700-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை 6,820 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தற்போது ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் 738 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்து, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.

சீனாவில் இதுவரை கரோனா வைரஸ் காரணமாக 3,281 பேர் உயிரிழந்துள்ளனர். கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சீனா, கரோனா இறப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE