விசாவைத் தவறவிட்ட இந்திய மாணவி: தேடிச் சென்று ஒப்படைத்த பாக். ஓட்டு நருக்குக் குவியும் பாராட்டு

By செய்திப்பிரிவு

துபாயில் யு.கே. மாணவர் விசாவை இந்தியப் பெண் காரில் தவறவிட்டார். அவரைத் தேடிச் சென்று விசாவை ஒப்படைத்த பாகிஸ்தான் ஓட்டுநடுக்குப் பாராட்டுகள் குவிந்தன.

இந்திய - பாகிஸ்தான் நாடுகள் இடையே பதற்றமான சூழல் பரவலாக நிகழும்போதெல்லாம் அவ்வப்போது நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறிவிடும். அவ்வாறான சம்பவம் ஒன்றுதான் துபாயில் நடந்துள்ளது.

இதுகுறித்து அரபு ஊடகங்கள், “இந்தியாவைச் சேர்ந்தவர் ரேஞ்சல் ரோஸ். இவர் தனது நண்பர் ஒருவரின் பிறந்த நாளில் கலந்து கொள்வதற்காக முடாசர் காதிம் ( பாகிஸ்தானைச் சேர்ந்தவர்) என்ற ஓட்டுநரின் காரில் ஏறினார். அப்போது மற்றொரு நண்பரை வேறோரு காரில் பார்த்தவுடன், ரோஸ் தான் ஏறிய காரை விட்டு தனது நண்பர் இருந்த காரில் சென்றார். இந்த நிலையில் தனது பர்ஸை தான் ஏறிய முந்தைய காரிலேயே தவறவிட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், காதிம் தனது காரில் பயணி ஒருவர் பர்ஸைத் தவறவிட்டதைக் கண்டார். அந்த பர்ஸில் பணம், ஐக்கிய அரபு அமீரக ஓட்டுநர் உரிமம், யுகே சென்று படிப்பதற்கான மாணவர் விசா போன்ற பல முக்கிய ஆவணங்கள் இருந்தன.

இதனைத் தொடர்ந்து பர்ஸில் இருந்த பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த காதிம், சாலை போக்குவரத்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இதுகுறித்துக் கூறினார். அதிகாரிகள் உதவி செய்ய, ரோஸின் இல்லத்துக்குச் சென்று நேரில் பர்ஸை வழங்கினார் காதிம்.

மாணவர் விசாவைப் பத்திரமாகச் சேர்த்ததற்காக ரோஸின் தாயார் காதிமுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்திய மாணவிக்கு உதவிய பாகிஸ்தானின் கார் ஓட்டுநருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE