பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருக்கும் மிகப் பிரம்மாண்டமான சிலை கிறிஸ்ட் தி ரிடீமர். 124 அடி உயரம் கொண்ட இந்தச் சிலை மீது ஏறியிருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தியாகோ கொரியா.
27 வயது தியாகோவுக்கு 2012-ம் ஆண்டில் இருந்து செல்ஃபி எடுக்கும் பழக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. சிறப்பு அனுமதி பெற்று, சிலை மீது ஏறி, செல்ஃபிகளை எடுத்துத் தள்ளியிருக்கிறார் தியாகோ.
இவ்வளவு உயரமான சிலை மீது நின்று செல்ஃபி எடுத்தது தன் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்கிறார் தியாகோ.
பார்க்கிறப்பவே கதி கலங்குதே… எப்படித்தான் அனுமதி தர்றாங்களோ…
சீனாவில் வசிக்கும் சுற்றுச் சூழலின் நண்பர்கள் இருவர் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள். ஜியா ஹாய்ஸாவும் ஜியா வென்கியும் கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் மரங்களை நட்டிருக்கிறார்கள். 53 வயது ஜியா ஹாய்ஸா பார்வை இழந்தவர். பிறக்கும்போதே ஒரு கண்ணில் பார்வை இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இன்னொரு கண்ணின் பார்வையும் பறிபோனது. ஜியா வென்கி 3 வயதில் ஒரு விபத்தில் இரு கைகளையும் இழந்தவர்.
இருவரும் வேலை தேடிக்கொண்டிருந்தபோது நண்பர்களானார்கள். `ஹாய்ஸாவுக்கு நான் கண்ணாக இருக்கிறேன். எனக்கு அவர் கைகளாக இருக்கிறார். எங்கள் இருவருக்கும் வேறு என்ன வேண்டும்?’ என்கிறார் ஜியா வென்கி. இருவருக்கும் நிலையான வேலையோ, போதிய வருமானமோ இல்லை. ஆனாலும் மரங்கள் நடுவதை மிக உயர்வான விஷயமாகக் கருதுகிறார்கள்.
அதிகாலை வாளி, கடப்பாரை போன்றவற்றை எடுத்துக்கொண்டு இருவரும் நடக்க ஆரம்பிக்கிறார்கள். எங்கெல்லாம் மரங்கள் நடும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் மரங்களை நட்டு, தண்ணீர் விடுகிறார்கள். இன்று தாங்கள் நடும் மரங்கள் எல்லாம் எதிர்காலச் சந்ததியினருக்குப் பழங்களை அளிக்கும். பூமியும் பசுமையாகக் காட்சி தரும். இவை இரண்டும் தங்களுக்குப் போதும் என்கிறார்கள். இவர்களுக்கு உதவும் விதத்தில் கிராம நிர்வாகம் வாடகை இன்றி வீடுகளை அளித்திருக்கிறது.
ரியல் ஹீரோஸ்!
அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகர் எல்விஸ் பிரெஸ்லி. 42 வயதிலேயே மறைந்த எல்விஸ் பிரெஸ்லியின் பாடல்கள் 38 ஆண்டுகளுக்குப் பிறகும் அதிகமான வருவாயை ஈட்டித் தந்துகொண்டிருக்கின்றன. இசைப் பயணத்துக்காக எல்விஸ் பயன்படுத்திய பேருந்து ஒன்று பயன்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. 12 பேர் பயணம் செய்யக்கூடிய இந்தப் பேருந்தில் எல்விஸ் பயன்படுத்திய பொருட்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
அரிய புகைப்படங்கள், மருந்து பாட்டில், வைர நெக்லஸ், கல்யாணப் புகைப்படம், கடிதங்கள், காசோலை, ஒலி நாடாக்கள், முதல் மேடை நிகழ்ச்சியில் பயன்படுத்தி சட்டை, கிடார் போன்று 200 பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஏலத்தில் விடப்பட உள்ளன.
இவற்றில் எல்விஸ் பிரெஸ்லி தனக்கு மருத்துவமனையில் உதவி செய்த செவிலி ஒருவருக்குப் பரிசாகக் கொடுத்த கறுப்பு காரும் இடம்பெற்றுள்ளது. இன்றும் எல்விஸ் பிரெஸ்லியை தீவிரமாக நேசிப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால், அதிக விலைக்கு ஏலம் போகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
என்றும் வாழ்வார் எல்விஸ் பிரெஸ்லி!
முதன் முதலில் நிலவில் நடந்த (1969ம் ஆண்டு) இருவரில் ஒருவர் பஸ் ஆல்ட்ரின். செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் செல்ல இருக்கும் சூழ்நிலையில், மிஷன் டு மார்ஸ் என்ற நூலை எழுதி இருக்கிறார். பிரிட்டனில் இருக்கும் மிகப் பழங்காலச் சின்னமான ஸ்டோன்ஹெஞ்சில் செவ்வாய் கிரகப் பயணத்துக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் டி-ஷர்ட் அணிந்து, செவ்வாய் கிரகம் நோக்கி அறைகூவல் விடுத்தார்.
விண்வெளி ஆராய்ச்சியில் தாங்கள் செய்தது மிகச் சிறிய காலடி என்றும், இன்னும் எவ்வளவோ அடிகள் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார் 85 வயது ஆல்ட்ரின்.
ஆல்ட்ரின் கிட்ட இருந்து தன்னடக்கத்தையும் கத்துக்கணும்!