ஈக்வடாரில் புதிய வகை தவளை இனம் முதல் முறையாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. விரல் நகம் அளவே இருக்கும் இந்தச் சின்னஞ் சிறிய தவளையின் முதுகில் முட்கள் காணப்படுகின்றன. உயிரியியலாளர் கேத்தரின் க்ரைனா மற்றும் இயற்கை ஆர்வலர் டிம் க்ரைனாக் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக தவளைகளை ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்.
2006-ம் ஆண்டு இந்த முள் தவளை இவர்கள் பார்வையில் பட்டது. தவளையை எடுத்து வந்து, ஒரு பெட்டியில் வைத்தனர். காலையில் பார்த்தபோது, தவளை முட்கள் இல்லாமல் இருந்தது. காரணம் புரியவில்லை. தவறான தவளையைக் கொண்டு வந்துவிட்டதாக நினைத்து, மீண்டும் காட்டில் விட்டுவிட்டனர்.
அதே தவளை சமீபத்தில் தென்பட்டது. இந்த முறை கவனமாக வைத்து ஆராய்ந்தபோது, தவளை முட்களுடன் சில நேரம் இருப்பதும், முட்களை மறைத்து சில இருப்பதும் கண்டறியப்பட்டது. அதாவது தேவையான நேரத்தில் முள் தோலுடன் காட்சியளிக்கிறது. தேவை இல்லாவிட்டால் சாதாரண தவளை போல உருமாறிக்கொள்கிறது.
அட! உருமாறும் தவளை!
மெக்ஸிகோவில் வசித்த மார்கரிடா சுவாரெஸ் நாய்கள், பூனைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். தினமும் அவரது வீட்டு வாசலில் தெரு நாய்களும் பூனைகளும் உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்தன. சமீப காலமாக உடல்நலமின்றி இருந்த மார்கரிடா இறந்து போனார். அவரது இறுதிச் சடங்கு வீட்டில் நடைபெற்றது. திடீரென்று மார்கரிடா உணவளித்த நாய்கள் எல்லாம் வரிசையாக வீட்டுக்குள் நுழைந்தன.
தெரு நாய்கள் உள்ளே நுழைவதை அதிர்ச்சியோடு அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். மார்கரிடா வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு அருகில் சில நிமிடங்கள் அமைதியாக நின்றன. பிறகு சோகமாகப் படுத்துவிட்டன. உடலை எடுத்துச் சென்றபோது, நாய்கள் குதித்து எட்டிப் பார்த்துவிட்டு, அங்கிருந்து அமைதியாகக் கிளம்பின. “நாய்கள் அஞ்சலி செலுத்துவதை இதுவரை பார்த்ததில்லை. மிகவும் அதிசயமான நிகழ்வாக இருக்கிறது’’ என்கிறார்கள் இறுதிச் சடங்கு நடத்தியவர்கள்.
நாய்களுக்கு நுண்ணறிவு உண்டுதான்… ஆனால் இதெல்லாம் அதிசயமாதான் இருக்கு!
புளோரிடாவில் வசிக்கிறார் ஆண்டன் ஃக்ராஃப்ட். 4 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட இந்த மனிதர் உலகிலேயே மிக வலிமையான மனிதர் என்ற சாதனையை எட்டியிருக்கிறார். 52 வயதாகும் ஃக்ராஃப்ட், பாடிபில்டராக இருக்கிறார்.இதுவரை 4 முறை எடை தூக்குவதில் உலக சாதனை செய்திருக்கிறார்.
சாதிக்கும் முயற்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 4 தடவை சாவைத் தொட்டுத் திரும்பியிருக்கிறார். இந்தச் சாதனை மனிதர், 6 அடி 3 அங்குலம் உயரமுள்ள 43 வயது சினா பெல் என்ற திருநங்கையைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
“இருவரும் பல விதங்களில் எதிர் எதிர் துருவங்களில்தான் இருக்கிறோம். ஆனால் க்ராஃப்ட் போல ஒரு நல்ல மனிதரை இதுவரை நான் சந்தித்ததில்லை” என்கிறார் பெல். “உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டக்காரன் நான்தான். பெல்லைப் போல ஒருவரை என் வாழ்க்கைத் துணையாகக் கிடைத்ததில் பெருமை கொள்கிறேன்’’ என்கிறார் க்ராஃப்ட்.
அன்புக்குக் குறை தெரியாது…
சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் அறிவியல்-தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த 30 மாணவர்கள் தொடர்ந்து வகுப்புகளைப் புறக்கணித்து வந்தனர். மிக முக்கியமான வகுப்புகளைப் புறக்கணிப்பதால் மாணவர்களுக்குப் பெரும் இழப்பு.
இதைத் தடுப்பதற்காக பேராசிரியர் ஒருவர் தண்டனையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஒரு வகுப்பைப் புறக்கணித்தால் 1000 மீட்டர் ஓட வேண்டும். 5 வகுப்புகள் என்றால் 5 ஆயிரம் மீட்டர் ஓட வேண்டும். இந்தத் தண்டனையை ஒரு முறை அனுபவித்த மாணவர்கள், அதற்குப் பிறகு வகுப்புகளைப் புறக்கணிப்பதே இல்லை என்கிறார் அந்தப் பேராசிரியர்.
ம்… ஒருபக்கம் தண்டனை கூடாது என்கிறோம்… இன்னொரு பக்கம் தண்டனைக்குத்தான் பலன் இருக்கு…