ஐ.எஸ். தீவிரவாதிகளால் இஸ்லாமிய மதத்துக்கு களங்கம்: இந்தோனேசிய அதிபர் கண்டனம்

சிரியா,இராக்கில் செயல்படும் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) தீவிரவாதிகளால் இஸ்லாமிய மதத்துக்கு மிகப் பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளது என்று இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயானோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளின் நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவர்கள் வரம்பு மீறி செயல்படுகின்றனர். அவர்களின் நடவடிக்கையை இனியும் சகித்துக் கொள்ள முடியாது. ஐ.எஸ். அமைப்பால் இஸ்லாமிய மதத்துக்கு மிகப் பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய தலைவர்கள் உள்பட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் ஒன்று திரள வேண்டும்.

இந்தோனேஷிய இளைஞர்களை தங்கள் படையில் சேர்க்க இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாத அமைப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த அமைப்பை இந்தோனேஷிய மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் கொள்கை இந்தோனேசியாவின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது.

இந்தோனேசியாவில் ஐ.எஸ். அமைப்பு கால் ஊன்றுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அதனோடு தொடர்புடைய அனைத்து இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் ஜேம்ஸ் போலே 2012-ம் ஆண்டில் சிரியாவில் பணியாற்றியபோது ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரது தலையை கொடூரமாக துண்டித்துக் கொல்லும் வீடியோவை ஐ.எஸ். அமைப்பு அண்மையில் வெளியிட்டது.

இந்த வீடியோ உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகின் மிகப் பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவின் அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயானோவும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE