காலநிலை மாற்றமும் காலராவும்: கவனிக்கப்படாமல் கடந்து செல்லப்படும் துயரம்!

By செய்திப்பிரிவு

நாம் 21-ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம். அப்படியென்றால் காலராவால் ஒரேயொரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் தடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், இன்றளவும் உலகில் பல நாடுகளில் பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர், மரணம் இப்படியான சல்லிசான காரணங்களுக்குக் கூட நேரலாமா என்று திகைக்க வைப்பதுபோல் உயிரையும் துறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணியாகிக் கொண்டிருக்கிறது காலநிலை மாற்றம். கவனிக்கப்படாமல் கடந்து செல்லப்படும் ஒரு துயரமாக இருக்கிறது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காலரா பரவலும், அது காவு வாங்கும் உயிர்களும்.

காலநிலை மாற்றத்துக்கும் காலராவுக்கும் என்ன தொடர்பு என்று நாம் யோசிக்கலாம்!? காலநிலை மாற்றத்தைப் பற்றி தனியாக, விரைவுக் கட்டுரையில் இருந்து ஆழ்ந்த பார்வைகள் வரையிலான எழுத்துகள் நிரம்பிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகள் பற்றி அந்தளவுக்கு அடையாளப்படுத்தப்படவில்லை என்று சொல்லலாம். உண்மையில் இதுவும் கவனிக்கப்பட வேண்டும்.

காலரா என்றால் என்ன? - காலரா என்பது வயிற்றுப்போக்கு நோய். எங்கெல்லாம் மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கவில்லையோ அங்கு காலரா பரவுகிறது. சுகாதாரமற்ற தண்ணீரோடு, அத்தகைய உணவும் காலராவைப் பரப்பும். மோசமான பொதுச் சுகாதாரம், தனிநபர்களிடம் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான பழக்கவழக்கங்கள் இன்மை இந்த நோய்ப் பரவலை அதிகமாக்குகிறது.

காலரா நோயை எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்றாலும் கூட இது அதீத நீரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் மிகவும் ஆபத்தானது. வயிற்றோட்டமும், வாந்தியும் தொடர்ச்சியாக ஏற்படும்போது சரியான சிகிச்சை உரிய நேரத்தில் வழங்கப்படாவிட்டால் சில மணி நேரங்களில் உயிர் பறிபோய்விடும்.

காலநிலை மாற்றத்துடன் இணைந்து கொண்டால் இந்த பாக்டீரியா தாக்கம் இன்னும் கோரத் தாண்டவம் ஆடும். சமீப காலமாக காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமாகி இருக்கிறது. அதுபோலவே உலகம் முழுவதும் பரவலாக காலரா தாக்கமும் அதிகரித்துள்ளது. எங்கெல்லாம் காலநிலை மாற்றத்தால் கடுமையான புயல் ஏற்பட்டதோ அங்கெல்லாம் காலரா பாதிப்பும் கூடவே பதிவாகி இருக்கிறது. அதீத மழை வெள்ளத்தால் குடிதண்ணீரில் கழிவு நீர் கலக்கிறது. இது காலராவுக்கு வழிவகுக்கிறது. யுனிசெப் (UNICEF) ஆய்வின்படி 2022-ல் மட்டும் உலகம் முழுவதும் 30 நாடுகளில் காலரா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது கடந்த ஐந்தாண்டு சராசரியுடன் ஒப்பிடுகையில் 145 சதவீதம் அதிகம் எனத் தெரிகிறது.

மோசமாக பாதிக்கப்பட்ட ஜாம்பியா: இதில் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா மிக மோசமாக காலராவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி அங்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலரா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே 600 பேர் இறந்துவிட்டனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள்.

ஐக்கிய நாடுகள் சபையால் வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்ட ஜாம்பியா, காலராவால் தொடர்ச்சியாக வதைபடுகிறது. இது சர்வதேச சமூகத்தில் ஊடுருவியுள்ள சமத்துவமின்மையின் சாட்சி. சுகாதாரமான குடிநீர், சுற்றுச்சூழல் தூய்மை, தனிநபர் ஆரோக்கிய மேம்பாடு ஆகியன இன்னும் கடைநிலை சமூகத்துக்கு சென்று சேரவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஜாம்பியாவில் 28 சதவீத வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. கிராமப்புறங்களில் இது 42 சதவீதமாக இருக்கிறது. ஆகையால் ஜாம்பியவில் நிலவும் காலரா அச்சுறுத்தல் பட்டவர்த்தமாக உலகுக்கு உண்மையை உணர்த்துகிறது.

ஜாம்பியா மட்டுமல்லாது அண்டை நாடுகளுக்கும் இந்த அச்சுறுத்தல் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகள் பேரழிவைத் தரும் பிராந்திய சுகாதார நெருக்கடி நிலையை சத்தமில்லாமல் உருவாக்கி வருகிறது.

ஜாம்பியாவின் கிழக்கே உள்ள மலாவி நாடு 2023-ல் காலரா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீள முடியாமல் தவிக்கிறது. மலாவியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காலரா பாதிப்பு மேற்கு ஆப்பிரிக்கா கடந்த 10 ஆண்டுகளில் கண்டிராத துயரம் என்றால் அது மிகையாகாது. ஃப்ரெட்டி புயல், காம்பே புயல், அனா புயல் என்று அடுத்தடுத்து மூன்று புயல்கள் தாக்கியபின்னர் தான் மலாவியில் காலரா பாதிப்பு ஏற்பட்டது. 59 ஆயிரம் பேருக்கு காலரா தொற்று ஏற்பட்டு 1750 உயிரிழப்புகள் நடந்ததாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆனால், நிறைய பாதிப்புகள் பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம் என்பதால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அச்சமூட்டக் கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேவைதானா இந்த துயரம்! - ஆனால், காலரா பரவலைக் கட்டுப்படுத்தலாம், கண்காணித்துத் தடுக்கலாம் என்பதால் இந்தத் துயரம் அவசியமற்றதுதான். சுத்தமான குடிநீருக்கு, பொதுச் சுகாதாரத்துக்கு, ஆரோக்கிய மேம்பாட்டுக்கு முதலீடு செய்தால் தீர்வு நிச்சயம் கிட்டும். தெற்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல காலரா எதியோபியாவிலும் இருக்கிறது.

ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகள் தான் ஒருகாலத்தில் காலராவால் பாதிக்கப்பட்டிருந்தன. அவை சுத்தமாக குடிநீர் விநியோகம், பொதுச் சுகாதாரத்தை உறுதி செய்து அந்தச் சவாலை முறியடித்துவிட்டன. இதே முறையில் இப்போது ஜாம்பியாவும், மலாவியும், எதியோபியாவும் இன்னும் பிறநாடுகளும் காலராவை வெற்றி காணலாம். ஆனால், இதற்கு பின்தங்கிய இந்த நாடுகளுக்கு பொருளாதார உதவி தேவை.

இத்தகைய நாடுகளின் வளர்ச்சிக்காக வாக்குறுதி கொடுத்த அரசாங்கங்கள் சுகாதாரம், தண்ணீருக்கான நிதியை தாராளமாக வழங்க வேண்டும். அதுவும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் நீர் மூலம் பரவும் நோய்களுக்குக் காரணியாகும் இந்தச் சூழலில் தான் வளர்ந்த நாடுகளின் நிதியுதவி மிக மிக அவசியமாகிறது.

தண்ணீர், பொதுச் சுகாதாரம், ஆரோக்கிய மேம்பாடு சேவைகளுக்கான திட்டங்களில், உட்கட்டமைப்பு வசதிகளில் அரசாங்கங்கள் முதலீடு செய்ய வேண்டும். காலரா பரவிய பின்னர் அதனை சரிசெய்ய, கட்டுப்படுத்த செலவிடக் கூடிய நிதியுடன் ஒப்பிட்டால் தடுப்புக்கான நிதி கணிசமாக குறைவுதான்.

2030-ஆம் அண்டுக்குள் உலகில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரமான சூழலைக் கொண்டு சேர்ப்போம் என்ற ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான 6வது பிரகடனம் கானல் நீராகக் காட்சியளிக்கிறது. இந்த இலக்கை எட்டவேண்டும் என்றால் உலகளவில் வளர்ச்சிக்கான வேகம் 6 மடங்கும், வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளில் 20 மடங்கும் வேகமெடுக்க வேண்டும். உடனடி நடவடிக்கைகான நேரமிது. சுத்தமான குடிநீர், காலரா அற்ற சமூகத்தை உருவாக்க நீடித்த நிதி முதலீடுகள் தேவை.

இதன் நிமித்தமே வாட்டர் எய்ட் நிறுவனம் உலகத் தலைவர்கள், அரசாங்கங்கள், தனியார் துறைகளை சுத்தமான தண்ணீர், சுகாதாரமான கழிப்பிடங்கள், அனைவருக்கும் ஆரோக்கியம் திட்டங்களில் அதிக முதலீடு செய்ய தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கிறது. குறிப்பாக காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கக்கூடிய ஏழ்மை மிகுந்த நாடுகளில் முதலீடு செய்ய கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

காலநிலை மாற்றத்தினால் அன்றாடம் பூதாகரமாகும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நிலையான நடவடிக்கைகள் மூலமே காலராவைக் கட்டுப்படுத்தி அதை வரலாற்றுப் புத்தக்கத்தில் ஒரு பழங்கதையாக்க முடியும். தெற்கு ஆப்பிரிக்காவிலும் இன்னும் சில உலக நாடுகளிலும் ஏற்படும் தேவையற்ற மரணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

உறுதுணைக் கட்டுரை: அல் ஜசீரா | தமிழில்: பாரதி ஆனந்த்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்